vivkendhar 450ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விவேகாநந்தரின் 150ம் ஆண்டைப் பெரிய அளவில் கொண்டாடியதை (2013) அறிவோம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கி இயக்கப்படும் பல நிறுவனங்களில் ஒன்றான விவேகாநந்த கேந்திரா இதில் முன்னணியில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்றைய வடிவத்திலும் நோக்கிலும் கட்டமைத்த குருஜி கோல்வால்கரால் விவேகாநந்த கேந்திராவை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ரானடே விவேகாநந்தரின் உரைகளை “இந்து தேசத்திற்கான ஒரு எழுச்சி அறைகூவல்” என்கிற பெயரில் தொகுத்தவர்.

அது மட்டுமன்று, ஆர் எஸ்.எஸ் அமைப்பு காந்தி கொலையை ஒட்டிச் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தபோது அந்த அமைப்பைத் தலைமறைவாகவே இருந்து வழி நடத்தியவர். இந்த அமைப்பு பல மட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கிறது. அந்தமான் முதலான பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பழங்குடியினர் மத்தியில் “சேவைகள்” செய்து அதன் ஊடாகக் “கர் வாபசி” நிகழ்வுகளை நடத்திப் பெரிய அளவில் மத மாற்றம் செய்வது உட்பட, கன்னியாகுமரியில் விவேகாநந்தர் நினைவிடத்தை அமைத்த அந்த அமைப்பு செய்யும் வேலைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இங்கே நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் விவேகாநந்தரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படி முன்னிறுத்துவதன் பின்னணி என்ன என்பதுதான். பரவலாக இங்கு விவேகாநந்தர் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் என்பது அவர், 1. ‘சநாதன தர்மத்தின்’ (இந்து மதம்) பெருமையை உலகறியச் செய்தவர் 2. இந்து மதத்தின் சாதிமுறை, பார்ப்பன மேலாண்மை ஆகியவற்றைக் கண்டித்து இந்து மதச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் 3. இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான பிற மதங்களைச் சமமாக ஏற்று உள்ளடக்கும் தாராளப் பார்வை கொண்டவர் என்பவைதான்.

இத்தகைய சமத்துவப் பண்புகள் கொண்டிருந்த விவேகாநந்தரை, சநாதன இந்து மதத்தில் எந்த மாற்றங்களும் இன்றிப் பாதுகாத்தல், எந்த வகையிலும் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை உள்ளடக்காமல் அந்நிய மதங்களாகவே அணுகும் இறுக்கமான பார்வை, இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ ஆக்குவதற்கு வன்முறை உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துதல் முதலான நோக்கங்களுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எவ்வாறு முன்நிறுத்துகிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டுமில்லை, நரேந்திர மோடியும் கூடச் சமீபத்தில் விவேகாநந்தரின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதும் கவனத்துக்குரியது.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த முரண்பாடு குறித்துச் சிந்திப்பதில்லை. “நம்மில்” என ஏன் சொல்கிறேன் என்றால், அச்சுதானந்தன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், திராவிட இயக்கத்தில் சிலர், இந்துத்துவத்திற்கு எதிராக நிறைய எழுதியுள்ள கே.என்.பணிக்கர் போன்ற புகழ்மிக்க வரலாற்றாசிரியர்கள், ஏன் பல கிறிஸ்தவ,முஸ்லிம் நண்பர்கள் உள்பட விவேகாநந்தரை இப்படி ஒரு தாராளவாதியாகவே கருதுகின்றனர்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்தே உரிய பதில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை கே.என். பணிக்கர் விவேகாநந்தரைத் தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலின் சுருக்கம் இதோ:

“விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் புகழ் பெற்ற சர் சங் சாலக் (கோல்வால்கர்). அந்த ஆர்..எஸ்.எஸ் அமைப்பையா விவேகாநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்?” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து அவர்கள் காட்டிய சில மேற்கோள்கள் வருமாறு:

1.(சிகாகோவில் பேசியது) மதங்கள் எல்லாவற்றிற்கும் தாயான இந்து மதத்தின் சார்பாக நின்று நான் பேசுகிறேன்.. எனது நோக்கம் எங்கள் நாட்டைப் புத்தெழுச்சி கொள்ளச் செய்வது மட்டுமல்ல, இந்து இனம் இந்த உலகையே வெல்ல வேண்டும் என்பதுதான்.

2.முஸ்லிம்கள் தமது இறைத் தூதராக நம்பும் முகம்மது ஒரு வகையான மனப் பிரம்மைக்கு (hallucination) ஆட்பட்டிருந்தார். வானவர் கப்ரியேல் மூலமாகத் தனக்கு இறைவாக்குகள் வந்தடைந்ததாகக் காட்டிக் கொண்டார். ஓர் இந்து யோகியைப்போல யோக நிலையினூடாகப் பெற்ற பேறல்ல இது. மாறாக இது தட்டுத் தடுமாறி வீழ்ந்த ஒரு விபத்து. சுய அறிவோடு சில தந்திரமான மூடநம்பிக்கைகளும் (quaint superstition) இணைந்த நிலை. இந்து யோகிகள் அல்லாதோர் தங்களை இத்தகைய சில மனப் பிரம்மைகளுக்கு ஆட்படுத்தியும் கொள்வர்.

வானவர் கப்ரியேல் ஒரு குகையில் வந்து தன்னைச் சந்தித்து, ‘ஹரக்’ எனும் குதிரையில் சுவர்கத்திற்கு (சுவனம்) அழைத்துச் சென்றதாக முகம்மது கூறிக் கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் அப்பால் அவர் சில அற்புதமான உண்மைகளையும் சொன்னார். நீங்கள் குரானை வாசித்தீர்களானால் இந்த அற்புதமான உண்மைகள் மூட நம்பிக்கைகளோடு கலந்து கிடப்பதைக் காணலாம். இதை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?

3. அவர் ஒரு பயிற்சி பெற்ற யோகி அல்ல. அவர் என்ன செய்கிறார் என்பதன் பின்புலத்தை (reason) அவர் அறிந்திருக்கவில்லை. நல்ல முகம்மது என்ன செய்தார் என்பதையும், (கெட்ட முகம்மதின்) வெறித்தனத்தால் (fanaticism) எத்தகைய தீமை இந்த உலகிற்கு விளைந்தது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

முகம்மதின் போதனைகளின் விளைவாகக் கொல்லப்பட்ட கோடிக் கணக்கான மக்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாகிய குழந்தைகள், அழிக்கப்பட்ட நாடுகள், கொல்லப்பட்ட கோடானுகோடி மக்கள் (எவ்வளவு பேர்?). (இந்து யோகிகள் அல்லாத) மற்றவர்களின் பெருமை மிகு போதனைகள் எந்த அளவிற்கு இந்த உலகிற்கு உதவினவோ அதே அளவு பாதிப்புகளையும் இந்த வெறித்தனங்களும் மூடநம்பிக்கைகளும் உலகத்திற்கு ஏற்படுத்தின.

4. (இஸ்லாம் போன்ற அருள் வெளிப்பாடுகள்) முழு இறை உண்மையைச் சொன்னவையல்ல. அவை முழுமையானவையும் அல்ல. அவை குறுகிய மனநிலை. ஒன்றின் பகுதி மட்டுமே. ஒரு பகுதி தன்னை முழுமை என உரிமை கோருவது, எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லையற்றதாக உரிமை கோருவது எல்லாம் தவறிழைக்கக் கூடிய மனித மூளைகளிலிருந்து பிறந்த குறு மதப் பிரிவுகள் (sects) மட்டுமே. இவை இறைவனின் எல்லையற்ற உண்மையை முழுமையாக அறிந்தவை எனத் திமிராக (arrogant) உரிமை கோருவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இதன் விளளைவான கொடூரங்களை யோசித்துப் பாருங்கள். ஆனால் இவை அனைத்தும் எப்போதும் தோற்றே போயின என்பதை காணத் தவறாதீர்கள்”.

5.இப்படி உரிமை கோருவதில் முகமதியர்கள் ஆகச் சிறந்தவர்கள்; அவர்களின ஒவ்வொரு படி முன்னேற்றமும் வாளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டது. ஒரு கையில் குரான்; ஒரு கையில் வாள்: குரானை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால் செத்துப்போ; வேறு மூன்றாவது வழி உனக்குக் கிடையாது எனச் சொல்லி அவர்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றார்கள்? ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றே போனார்கள்.

6. (இந்து மதத்திலிருந்து பிறமதத்திற்கு மாறியவர்களை (“வக்கிரமானவர்கள்”) மீண்டும் ‘கர் வாபசி’ செய்து இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் பற்றிக் கேட்டபோது விவேகானந்தர் சொன்னது, நிச்சயமாக அவர்களைக் கொண்டு வர முடியும். கொண்டு வர வேண்டும்.. அப்படிச் செய்யாவிட்டால் நமது எண்ணிக்கை குறையும். இப்படி இந்து அடையாளத்திலிருந்து (pale) வெளியே செல்லும் ஒவ்வொரு மனிதனும் நம் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைப்பவன் மட்டுமல்ல.

நம் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டுபவனும் கூட. அதோடு, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு வக்கிரமானவர்களில் பெரும்பாலோர் வாளால் இப்படி மாற்றப்பட்டோர், அல்லது அவர்களின் வழி வந்தோர். இவ்வாறு அவர்கள் வக்கிரமானதற்கு (இந்து மதத்தின்) ஏதோ சில குறைபாடுகள்தான் காரணம் எனச் சொல்வது அப்பட்டமான ஒரு அநீதி.

இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து மேற்கோள்காட்டப்பட்ட விவேகானந்த உரைகள். இவற்றிலிருந்து விவேகாநந்தரின் கருத்துக்களை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

அ. இந்து மதம் மட்டுமே முழு இறை உண்மையையும் அறிந்த முழுமையான மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற முழுமையானவை அல்ல அவை வெறும் குறு மதப் பிரிவுகளே. அவை தம்மை முழுமையான மதங்களாகக் கருதிக் கொண்டதன் விளைவு மிகப் பெரிய அழிவுகள். ஆ. நபிகள் நாயகத்திற்கு இறைவாக்குகள் வானவர்கள் மூலம் வந்திறங்கின என்பது பொய்.

அது ஒரு வெறும் பிரம்மை. இ.இஸ்லாம் வாளோடு வந்து மதம் மாற்றிய மதம். இந்து மதத்திலுள்ள (சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற) குறைபாடுகளால்தான் இவர்கள் மதம் மாறினார்கள் என்பது பொய். ஈ. இந்து மத்திலிருந்து ஒருவர் மதம்மாறும்போது ஒரு இந்து எண்ணிக்கையில் குறைகிறார் என்பதல்ல. இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது. உ. எனவே இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்றோரை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் அவசியம்.

இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தவரை எப்படி எல்லா மதங்களையும் சமமாக நேசித்த தாராளவாதி எனச் சொல்லுவது?

இவை எல்லாம் விவேகாநந்தரின் எண்ணற்ற உரைகளிலிருந்து இந்துத்துவவாதிகள் தமக்குச் சாதகமானவற்றைப் பொறுக்கி எடுத்தவை. ஆனால் விவேகாநந்தர் உண்மையில் அப்படி இல்லை என ஒருவர் கருதலாம். ஆனால் விவேகாநந்தரிடம் அடிப்படையாக இழையோடும் கருத்து இத்தகையதே என்பதை வேறு ஏராளமான மேற்கோள்களோடு இது குறித்து விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர்கள் சுமித் சர்கார், ஜோதிர்மய் சர்மா ஆகியோர் நிறுவியுள்ளனர். ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் அவ்வளவையும் சொல்லி விட இயலாது.

விவேகாநந்தரை வாசிப்போர் எத்தகைய மனநிலையை அடைவர், வாசிப்போர் மீது அவரது கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு அசீமானந்தரின் கூற்றுகள் சான்று. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சமய சமத்துவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த அசீமானந்தர் இப்போது மலேகான் குண்டு வெடிப்பு உட்படப் பல இந்துத்துவப் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்குபெற்றுச் சிறையில் இருப்பவர். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஏற்றுக் கொண்டவர் அவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்குமுன் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர் “யதோ மத் ததோ பத்” (இறைவனை அடைய நம்பிக்கைகள் பல, வழிகளும் பல) என்கிற பன்மைத்துவத்தைப் போதித்தவர். விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் தலையாய சீடர். இராமகிருஷ்ணரின் வாரிசாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். சாகுமுன் தனது அனைத்து ஆற்றல்களையும் தமக்கு ஓர் அற்புத அனுபவத்தின் ஊடாகத் தந்து சென்றவர் எனச் சொல்லிக் கொண்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தர் எப்படிப் பிற மதங்களைச் சமமாக ஏற்காதவராக இருக்க முடியும் என்பது விவேகானந்தரை தாராளவாதி என நம்புவோர் முன் வைக்கும் ஒரு கேள்வி.

இராமகிருஷ்ணர் அப்படியான சர்வ சமய சமத்துவக் கருத்துக்களைத் தூக்கிப் பிடித்தவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர் இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்தியவரும் அல்லர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தனது புகழ் பெற்ற சீடர் விவேகாநந்தரைப் போல, இந்து மதத்தையும் இந்திய நாட்டையும் பிணைத்து ஒரு இந்து ராஷ்டிரக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தவரும் அல்லர். அதனால்தான் சீடரைத் தன் நெறியாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குருவைக் கண்டு கொள்வதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களை அவரது சீடர் எப்படியெல்லாம் வளைத்துத் தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார் என்பதைப் பார்க்கும் முன் மீண்டும் அசீமானந்தரின் அனுபவத்திற்குத் திரும்புவோம். தான் எப்படி இந்த வன்முறைப்பாதைக்குத் திரும்பினார் என்பதை இதழாளர் லீனா கீதா ரகுநாத்திடம் அவர் (Caravan, The Beleiver) கூறியுள்ளதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கே காண்போம்.

அசீமானந்தரின் பூர்வ பெயர் நவ குமார் சர்கார். பட்டப்படிப்பு முடித்திருந்த நவ குமார், இராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இராமகிருஷ்ணா மடத்தில் சேர்கிறார். அங்கே அவரைச் சந்தித்த விஜய் ஆத்யா என்கிற ஆர்.எஸ்.எஸ் ஊழியர், நமது பாதை என ஆர்.எஸ்.எஸ்சை அடையாளம் காட்டுகிறார். அதுதான் விவேகாநந்தர் காட்டிய பாதை என்கிறார். அது எப்படி என நவகுமார் வினவியபோது அவரிடம் ஏக்நாத் ரானடே தொகுத்த விவேகாநந்தரின், “இந்து தேசத்திற்கான எழுச்சி அறைகூவல்” என்கிற நூலை வாசிக்கத் தருகிறார். இனி அசீமானந்தரின் கூற்று.

“ராமகிருஷ்ணா மிஷனின் கொள்கை எல்லா மதமும் சமம்கிறதுதான். அங்கே கிறிஸ்மஸ், ஈத் பெருநாள் எல்லாம் கொண்டாடுவாங்க. நானுந்தான். ஆனா இது விவேகாநந்தர் காட்டிய வழி இல்லைன்னு ஆத்யா சொன்னபோது என்னால நம்ப முடியல. அவர் தந்த ரானடே தொகுத்த விவேகாநந்தர் உரைகளைத் தீவிரமாகப் படிச்சேன்”

அப்போது நவகுமார் சர்காரை அசீமானந்தராக மாற்றிய அந்த வரிகள் கண்ணில் படுகின்றன.

“இந்து மதத்திலிருந்து ஒருவன் மதம் மாறினால், இந்து மதத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது எனப் பொருளல்ல: மாறாக இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்று பொருள் என்று விவேகாநந்தர் சொன்னதைப் படிச்ச போது அது எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்தது. தொடர்ந்த நாட்களில் நிறையச் சிந்திச்சேன், விவேகாநந்தரைப் புரிந்து கொள்ள என்னோட சிற்றறிவுக்குச் சக்தி இல்லங்கிறதை தெரிஞ்சுகிட்டேன். அவர் சொல்லிருக்கிறார், நாம அதை வாழ்க்கையில பின்பற்றுவோம்னு முடிவு செஞ்சேன்.”

(அடுத்த இதழில் நிறைவுறும்)

Pin It