தமிழ்நாட்டில் பெண்களின் இன்றைய நிலை பாதுகாப்பற்றதாகவே உள்ளது. சுவாதி தொடங்கிப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். சுவாதியின் கொலை பெரிதாகப் பேசப்பட்ட அளவுக்கு வேறு கொலைகள் பெரிது படுத்தப்படவில்லை.

கோடிஸ்வரரின் மகள் ஐஸ்வர்யா ஆடிக்  காரில் குடிபோதையில் வந்து முனுசாமி என்னும் ஏழை ஒருவரைக் கொன்ற கொடூரமும் நிகழ்ந்துள்ளளது. அண்மையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலையும் செய்யப்பட்டுள்ளாள்.

அண்ணன் தம்பிகள் ஒரு பேருந்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளனர்.  சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது என்பதோடு, மக்களிடமும் சகிப்புத் தன்மையற்ற நிலை பெருகி வருவதை நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

யாரும் யாரையும் எங்கு வேண்டுமானாலும் வெட்டிச் சாய்க்கலாம் என்னும் நிலைக்குத் தமிழ்நாடு ஏன்  வந்தது? இதுபோன்ற மன நோய் தடுக்கப்பட வேண்டுமெனில் அதற்கு அனைவரின் பங்களிப்பும் தேவை.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே ஓர் அச்சம் பிறக்குது நெஞ்சினிலே” என்ற நிலைதான் இன்று உள்ளது.