karunanidhi 250நம் அருமைத் தலைவர் கலைஞர் அவர்களின் பல பிறந்தநாள்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தை ஒட்டியவையே! தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறியே வந்துள்ளன. இரண்டு நிலைகளிலும் வெற்றி கண்டு  வீராப்பும்,தோல்வி கண்டு துயரமும் இன்றி, அடுத்த பணிக்கு அடுத்த நாளே திரும்பி விடுவதுதான் தலைவரின் இயல்பு.

இந்தத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டுள்ளது வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை  உடனடித் தோல்வி என்றாலும், தொலைநோக்குப் பார்வையில் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன் தலைவர் சந்தித்துள்ள பல நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும்போது, இது மிகச் சாதாரணம் என்றே  தோன்றுகிறது.

1991 ஆம் ஆண்டு நம் ஆட்சி, மத்தியில் ஆட்சியிலிருந்த பிரதமர் சந்திரசேகரால் கலைக்கப்பட்டது. அப்போது, ‘கலைக்கும் சர்க்கார், நிலைக்கும் சர்க்காரா?’ என்று ஒரு கடிதத்தை நம் தலைவர் எழுதியிருந்தார்.

தன் ஆட்சி கலைக்கப்பட்டதை எண்ணிப் புலம்பாமல், எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்னும் பாணியில் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அவருடைய அஞ்சாத் தன்மையையும், தொலைநோக்குப் பார்வையையும் அக்கடிதம் எடுத்துக் காட்டியது.

யாரையோ திருப்தி செய்ய நம் ஆட்சியை அவர் கலைத்தார். ஆனால் அவருடைய ஆட்சியும் இன்னும் எத்தனை நாள் நிலைக்கப் போகிறதோ என்ற தொனியில் தலைவர் எழுதியிருந்தார். அவர் எழுத்து அப்படியே உண்மையாகி விட்டது. நம் ஆட்சி கலைக்கப்பட்ட 34ஆவது நாள் சந்திரசேகரின் ஆட்சி தில்லியில் கலைக்கப்பட்டு விட்டது.

அந்தச் சூழலில், 1991 மார்ச் 18 அன்று பீகாரின் தலைநகரமான பாட்னாவில், தேசிய முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் தொடங்கியது. கடந்ததை எண்ணிக் கவலை கொள்ளாமல்,அடுத்த பணிக்கு ஆயத்தமானார் தலைவர். வி.பி.சிங், என்.டி.ராமாராவ் ஆகியோருடன் தலைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளம் போல் பீகாரிகளின் கூட்டம் அங்கு கூடியிருந்தது.

ராஜ் மோகன் காந்தி மொழிபெயர்க்க,  தலைவர் பேசத் தொடங்கினார். “நான் முதலில் என்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். என் பெயர் கருணாநிதி. நான் ஒரு தேசத் துரோகி! இந்த நாட்டில் நான் ஒரு அபாயமான பேர்வழி!” என்று தொடங்கினார். “ஆம். அப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டில் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்தனர்” என்று விளக்கினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. பேசி முடித்தபோது, அந்த மக்கள் வெள்ளம் எழுந்து நின்று கை தட்டியது.

அடுத்த நாள், டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு "stealing the show" என்ற தலைப்பில், நம் தலைவரின் உரையைப் பாராட்டி ஒரு பெரிய செய்தியை வெளியிட்டிருந்தது. அது குறித்து, அன்று நம் கட்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒருவர், “கங்கைக் கரையில் காவிரித் தென்றல்” என்ற தலைப்பில் அங்கு நடந்தவைகளை விவரித்து முரசொலியில்  எழுதியிருந்தார்.

“வடபுலம் மலைக்க, வந்தவர் வியக்க, பாடலிபுத்திரம் வென்ற கலைஞர்” என்று வியந்து பாராட்டியிருந்தார்.  அவர் இன்று நம் கட்சியிலும்  இல்லை, நன்றி உடையவராகவும் இல்லை. ஆனாலும் அவர் அன்று எழுதியவை இன்றும் பொருந்தியே போகின்றன.

எந்தத் துயரையும் ஏந்திக் கொள்ளும் இடிதாங்கிக்கு, இப்போது வந்திருப்பது முக்கால் வெற்றி. முழு வெற்றியை நாடும், நாமும் விரைவில் பெறுவோம்!    

Pin It