ரத்தம் துவைந்த பெண்களின் துணிகளிலிருந்தே இந்த நாட்டின் உண்மையான முகம் உலகத்தின் கண்களின் முன் காட்சி தருகிறது, காலத்தின் எல்லா அடுக்குகளிலும் இந்தியப் பெண்களின் ரத்தம் படியாத இடமே இல்லை என்று நாம் அறுதியிட்டுவிடலாம். அதுவும் பேசப்படாத படுகொலைகள் எத்தனையோ ஆயிரம் லிட்டர் ரத்தங்களை இந்த மண்ணில் சிந்தியிருக்கக் கூடும்.

பெண்ணுக்கான இருப்பும், பிழைப்பும், மதமும், ஜாதியும் முடிவு செய்யும் சட்டம் நிறைந்த இந்த நாட்டில் அரசியல் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்பது இன்னொருமுறையும் நிரூபணம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்களைவிட அதிக சக்திவாய்ந்ததாக மனுநீதி இருப்பதால் மனுநீதியே இங்கு ஆளும் சட்டமாக இருக்கிறது. அதனால்தான் தன்னுடைய ரத்தம் சிந்தப்படும் சூழ்நிலையிலும் இங்கே தலித்துகளும் பெண்களும் கொடுந்தீயின் வெம்மையில் கிடக்கும் தானியக் கதிர்களாகக் கருகிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜோதிசிங்கின் (நிர்பயா) பாலியல் வன்முறை படுகொலைக்குப் பிறகு ஜி20 நாடுகளிலேயே பெண்கள் வாழமுடியாத நாடாக இந்தியா உலக அரங்குகளில் சொல்லப்பட்டது. அப்படியில்லை என்று எல்லோரும் அலறித் துடித்தார்கள். ஜோதிசிங்கைப் பாலியல் படுகொலைசெய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் அதோடு அத்தகைய படுகொலைகள் முடிவுக்கு வந்துவிட்டதா என்ன? பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அந்த இரவில் பெண் ஏன் வெளியே போனாள்? அவள் ஏன் அப்படி உடையணிந்தாள்? அவளை யார் ஆண் நண்பனோடு போகச்சொன்னது? அதனால்தானே இதெல்லாம் நடந்தது? இந்தக் கேள்விகள்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தொடர்ச்சியாக இந்தியாவில் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன.

டெல்டா என்கிற 17  வயது தலித் மாணவி ராஜஸ்தானில் இதே போன்று பாலியல் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு இன்று சமூகவலைதளங்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜிஷாவின் பாலியியல் படுகொலை நடந்தேறி இருக்கிறது. நாளொன்றுக்கு 93 பெண்கள் பாலியல் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது ஆனால் ஜிஷா படுகொலை ஏன் வெளிச்சத்திற்கு வந்தது?

கடந்த 2016 ஏப்ரல் 28 இரவு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் ராஜேஸ்வரி என்னும் பெண் கூலித் தொழிலாளி தன் வீட்டிற்குச் சென்றபோது, இறந்துபோன உடலோடு கிடக்கும் தன் மகளின் உடலைப் பார்த்துக் கதறிக்கத்த ஜிஷாவின் படுகொலை வெளியே கசிகிறது. வீடு என்ற சொல்லைப் படித்தவுடன் பாதுகாப்பான வீடு என்று கருதிவிட்டீர்கள் என்றால் அது தவறு. ஒரு கானாற்றின் கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் இருக்கும் ஒரு குடிசை.

பாதுகாப்பே இல்லாத தலித்பெண் ஜிஷா பாலியல் வல்லுறவுச் செய்யப்பட்டு முப்பது இடங்களில் மிகவும் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டு, பின்மண்டையில் பலமாகத் தாக்கப்பட்டு, மலையாள இதழான மாத்ருபூமியில் சொல்லியிருப்பதைப் போல் பெண்ணுருப்பில் இரும்பு கம்பி செருகப்பட்டு, மார்பகங்கள் இரண்டும் கூரிய கத்தியால் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு அரியப்பட்டுக் கொல்லப்பட்டார்.

2012 இல் இதே மாதிரி கொல்லப்பட்ட ஜோதிசிங் ஒரு மருத்துவ மாணவி. ஜிஷா ஒரு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரி மாணவி, ஜோதிசிங்கின் உண்மையானப் பெயரைக்கூடச் சொல்லக்கூடாது என்று கருதி பயமற்றவள் என்று பொருள்படும் ‘நிர்பயா’ என்ற பெயரைச் சூட்டிப் பொதுச்சமூகம் நீதிக்காகப் போராடியது. ஆனால் ஜிஷாவின் படுகொலைக்கு அப்படியொரு கூட்டம் கூடவிலை. ஆனால் சமூக வலைதளங்களில் போராட்டத்திற்கான அறைகூவல்கள் விடப்பட்டன. மிகவும் அமைதியாக இருந்த காவல்துறையினர்கூட இப்போதுதான் இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து வைத்திருக்கிறது.

கேரளப் பொதுடைமைக் கட்சியின் பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்புகள் போராட்டத்தினை வலுவாக்கி உள்ளன. கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி ஜிஷாவின் அம்மாவைச் சந்திருக்கிறார். கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிஷாவின் கொலையைக் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். குரியன் இது மலையாளிகளுக்கு அவமானம் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்த விவாதத்தில் பங்கேற்ற டி.ராஜா தலித்துகளின்மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகப் போதுமான சட்டங்கள் இல்லை என தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

கேரளாவில் தேர்தல் நேரமாக இருப்பதால் இந்தப் படுகொலையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டிக் கொள்ளும் வேலையை அரசியலாளர்கள் பார்த்துக்கொள்கின்றனர். கேரளாவில் பரப்புரைக்காகச் சென்ற பிரதமர் மோடி ராஜேஸ்வரியைச் சந்திக்கிறார் என்ற செய்தி இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் வருகிறது.

தலித்துகளுக்கு எதிரான எந்த வன்கொடுமையும் அது ஜாதியின் பெயரால்தான் நடக்கிறது. பெண்களுக்கும் இதுதான் வரையறை. ஆனால் வேறுஜாதி பெண்களுக்கு நடந்தால் அதற்கு உடனே நீதிக்காகப் போராடும் பெண்கள், தலித்பெண்கள் பாதிக்கப்பட்டால் அமைதிக்காக்கும் கொடூரம் எதனடிப்படையில் நடக்கிறது? இந்திய மக்கள் தொகையில் 16 விழுக்காடு இருக்கும் தலித் மக்கள் இப்படி இழிதொழில் செய்பவர்களாகவும், கொல்லப்படுபவர்களாகவும் மாநில வேறுபாடு இல்லாமல் இருக்கிறார்களே, இதற்குக் காரணமான அடிப்படைக் கோட்பாட்டைக் கேள்விகேட்காமலே இருக்கிற மனப்பான்மையால்தான் இது தொடர்கிறது.

வேறுஜாதிப் பெண்களுக்கு ஆண்களிடமிருந்து விடுதலை கிடைத்தால் போதும் ஆனால் தலித் பெண்களுக்கு அப்படியில்லை அவர்களுக்கு ஜாதியிலிருந்தும் விடுதலை தேவையாக இருக்கிறது. இந்த தலித் பெண்ணியமே இன்றைய இந்தியாவிற்கான தேவையாக இருக்கிறது. தலித் பெண்ணியம்தான் இத்தகைய படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் வலிமையான கோட்பாடு.

பெண்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதச் சங்கிலிகளை அறுத்தெறிய வேண்டும். அவர்கள் தீட்டானவர்கள் என்று கூறும் மடமைமதத்தை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும். ரோஹித் வெமுலாவின் குடும்பம் அதைச்செய்தது. அந்த வேத பார்ப்பனிய மதத்தைவிட்டு வெளியேறியபின் அவர்கள் விடுதலை பெற்றதாக அறிவித்த அந்த அறிவிப்புதான் இந்திய தலித் பெண்ணியம் காட்டும் பொதுப் பெண்ணியத்தின் எல்லை.

அதை அடையாமல் இந்தியாவில் இருக்கும் பெண்கள் அவர்கள்மேல் நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல், கொலைகளை எதிர்த்து எழுப்பும் குரல் எல்லாம் வெறும் வெற்றுக் கூக்குரலாகத்தான் முடியும். நிர்பயாவுக்காக நீதிவேண்டிய போராட்டம் ஓரளவுக்கு நீதியை வென்றது. டெல்டாவின் படுகொலை கண்டுகொள்ளப்படவே இல்லை, இப்போது ஜிஷாவின் படுகொலை. இந்த ஜிஷாவின் படுகொலைக்கும் நீதி கிடைக்காமல் போகலாம். அடுத்து யாரோ ஒரு தலித் பெண் எங்கோ ஒரு மூலையில் இப்படிக் குரூரமாகக் கொல்லப்படலாம். ஆனால் இவர்களுக்கு எல்லாம் நீதி எங்கிருந்து கிடைக்கும்?

நீதிக்கு எதிராக இருப்போரிடமே நீதி கேட்கும் அவலநிலை இந்தியாவில்தான் இருக்கிறது. அவர்கள் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்கின்றனர். ஆனால் நீதி வேண்டுவோர் தங்கள் போராட்டங்களை மாற்ற வேண்டும்.

ஆம் பெண்களை அடிமைகளாக்கிய வேதங்களைச் சட்டங்களாகக் கொண்டிருக்கும் இந்து மதத்தினை விட்டு அனைத்துப் பெண்களும் வெளியேற வேண்டும். அதற்கான அறைகூவலை நாம் விடவேண்டும். இந்தப் பண்பாட்டு புரட்சியினால்தான் இந்தியப் பெண்கள் விடுதலை அடைய முடியும் என்னும் கோட்பாட்டை முன்வைப்போம். அதுவரை ஜிஷாக்கள் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.