அண்ணாவின் நோக்கில் தமிழ்த்தேசியம்

தமிழகத்தில் இன்றைய அரசியல் போக்கை வடிவமைத்தவர் அண்ணா. அவருடைய பெயரைச் சொல்லும் தேர்தல் கட்சிகளே இன்றளவும் சட்ட மன்றத்திலும், தமிழகம் சார்பான இந்திய நாடாளுமன்ற  உறுப்பினர் தொகையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்திய அரசியலில் பங்கெடுத்த அண்ணா இந்தியத் தேசியத்தை மறுத்தார். அது போன்றே மொழிவழித் தமிழ்த் தேசியத்தையும் புறந்தள்ளி திராவிடத்  தேசியத்தை உயர்த்திப் பிடித்தார். 

இந்திய ஓர்மையை மறுத்து திராவிடத் தேசியம் பேசிய அறிஞர் அண்ணாவுக்கு மொழி வழித் தேசியம்  பற்றித் தெரியுமா? தெரியும். அது குறித்து அண்ணா நன்றாக அறிவார்; அறிந்தும் தமிழ்த் தேசியத்தைக் கையிலெடுக்காததே அண்ணா இழைத்த வரலாற்றுப் பிழை. 

மொழிவழித் தேசியம் குறித்த அண்ணாவின் புரிதல் அவருடைய சொற் களிலிருந்தே விளங்கும்: 

“இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக் கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய வி­யமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. அதன்படி பார்த்தால் இந்தியாவில் தமிழர், ஆந்திரா, கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. 

“இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக்கூடிய அளவுக்கு மக்கள்தொகை, பொருள்வளம், நீர்வளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.” 

(திராவிடநாடு, கடிதம் 55, 24.6.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை,2005, பக்.199) 

ஒரு தேசம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது தேசம்தான்; தமிழ்நாடு சிறியதாக இருந்தாலும் ‘அதன் தகுதி அளவைப் பொறுத்து அல்ல’ என்ற பார்வையும் அண்ணாவுக்கு இருந்தது. 

1955இல் தட்சணப் பிரதேசத் திட்டத்தை நேருவின் அரசு கொண்டுவர முயற்சி செய்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்காமல் இந்தியாவைப் பிரதேசங்களாக அல்லது மண்டலங்களாகப் பிரித்து விடுவது என்ற வஞ்சகத் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டத்தில் நேருவை விழச் செய்ததே இராசகோபாலாச்சாரியார்தான் என்று அண்ணா கூறுகிறார். இந்த தட்சணப்பிரதேசத் திட்டத்தை பெரியாரும் எதிர்த்தார்;அண்ணாவும் எதிர்த்தார். தட்சணப்பிரதேசத் திட்டம் பற்றிக் கூறும் போது, அண்ணா மொழி வழி நாடுகள் பற்றிய தம் புரிதலை வெளிக்காட்டுகிறார்: 

“ஆச்சாரியார் ‘தட்சிணப் பிரதேசம்’ கேட்டார்.... 

“தமிழ்நாடு-மிகச் சிறிய அமைப்பு-இந்திய அரசியலிலே இந்தச் சிறிய அமைப்புக்குச் செல்வாக்கு ஏற்படாதுபெரிய அளவில் உள்ள உத்தரப் பிரதேசம் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்ற காரணம் காட்டினார் ஆச்சாரியார்..... 

“அப்படியானால், ‘சிறிசு பெரிசு’ பார்த்துத்தான் இந்திய அரசியல் நடந்து கொள்ளுமா? நீதி, நேர்மைக்கு இடமளிக்காதா? தமிழ்நாடுசிறிய அளவாகவும், உத்தரப் பிரதேசம் பெரிய அளவிலும் இருந்தாலென்ன? எல்லாவற்றுக்கும் ‘மேலே’ உள்ள அதிகாரி, நேர்மையுடன் நடந்து கொள்ளக் கூடாதோ? என்று யாரும் கேட்கவில்லை...! 

“உலகிலே, பிரிட்டனும் பிரான்சும் அளவிலே சிறிய நாடுகள். விரிந்து பரந்து கிடக்கும் அமெரிக்காவுடன், உலக அரங்கிலே அவை சமமாகத்தான் நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல. மிகப் பெரிய சீனாவுக்கு ஐ.நா.வில் இடமளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ‘முடிவு’’ காண, இந்த நாடுகளிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது. 

“”தனி அரசு நடாத்தும் நாடுகளிலேயே, அளவு பற்றி அல்ல அந்தஸ்து கிடைப்பது என்பதற்கு இது போன்ற ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன”” 

(திராவிட நாடு, கடிதம் 32, 1.1.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்  , பக்.311)

 அண்ணாவின் பார்வைக் குறைவுக்குக் கண்டனம்: 

இவ்வளவு தெளிவான புரிதல் அண்ணாவுக்கு இருந்த போதிலும் திராவிடத் தேசியம் பேசினார்; திராவிட நாடு விடுதலை கோரினார். அண்ணாவின் வாழ்நாளிலேயே பிற தமிழர் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கோரிக்கையை வலியுறுத்தினர்; அண்ணாவும் தமிழ்த் தேசிய உரிமைக்குக் குரல் கொடுக்க வற்புறுத்தினார். 

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழ் முரசு இதழில்(1.5.1947) தமிழ்நாடு என்ற மொழிவழி நாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தினார்: 

“மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கிறோம்? தமிழ்நாடு என்றால், “தமிழ்ஸ்தான் -பாகிஸ்தான் என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்; திராவிட நாடு,இந்திய நாடு எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் ஒருபுறம். ஆந்திர நாடு, கன்னட நாடு, கேரள நாடு எனப் பேசுவது போலத் தமிழ்நாடு என ஒரு முகமாகப் பேசக் காணோமே”. 

தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் ‘தமிழர் கழகம்’’ என்ற அமைப்பை நிறுவி, ‘’தமிழர் நாடு’’ என்ற மாத இதழையும் நடத்தி வந்தார். 1940இல் நீதிக் கட்சியின் 15ஆவது மாநாடு திருவாரூரில் நடைபெற்ற போது, நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் திராவிட நாடு கோரிக்கையை ஏற்க மறுத்தார். கட்சியின் தலைவர் பெரியாரிடமிருந்து முரண்பட்டு பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ‘திராவிட நாடு கோரிக்கை தவறானது; தமிழ்நாடு விடுத லைக் கோரிக்கையே சரியானது’ என்ற கருத்தை முன் வைத்து கருத்துப் பரவல் செய்தார். இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெற்ற தமிழரசு அமைய வேண்டும் என்பது அவரது குறிக்கோள். 

1948இல் அண்ணா பெரியாருடன்தான் இருந்தார். பெரியாரின் உரைக்கு எதிராக கி.ஆ.பெ. விசுவநாதம் வைத்த கேள்வி அண்ணாவுக்கும் உரியதுதான். அக்கேள்வியை அண்ணா சிந்தனைக்கு எடுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். 

ஆரியர், வடவர், பார்ப்பனர் மற்றும் மார்வாடி அரசாகிய இந்திய அரசிடமிருந்து விடுதலை பெற திராவிடர்கள் ஓரணியில் நிற்க வேண்டும்; அவ்வாறில்லா விட்டால் தம் போராட்டம் வலுவிழந்து போகும் என்ற பார்வையைப் பெரியார் 1948இல் கொண்டிருந்தார். 

ஆகவே பெரியார்,    “தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜ்யம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று கூறினார். 

இத்தகைய சிந்தனைப் போக்கைக் கண்டனம் செய்து கி.ஆ.பெ. விசுவநாதம் எழுப்பிய கேள்வி திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அனைவருக்கும் பொதுவானது: 

..... தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு, என்று கூறக் கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும், தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.” 

“ஆந்திர நாட்டுக்குச் சென்று ஆந்திரர், ஆந்திர நாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இது வரை சொல்லியிருக்கிறாரா? இனியேனும் சொல்லுவாரா?” 

(மேற்கோள்: ம.பொ. சிவஞானம், புதிய தமிழகம் படைத்த வரலாறு, பூங்கொடி பதிப்பகம், சென்னை 1986, பக்.105) 

இதே காலக்கட்டத்தில் இந்தியக் கூட்டாட்சிக்குள் ‘சுயநிர்ணய உரிமை’ (தன்னுரிமை) யுடன் கூடிய சுதந்திரத் தமிழகம் என்ற இலக்கை முன்வைத்து தமிழரசுக் கழகத்தை நிறுவி (தூக்கியயறியப்படும் வரை காங்கிரசுக்குள் செயல்படும் கட்சியாக) செயல்பட்டு வந்தார் ம.பொ. சிவஞானம், இந்தியத் தேசியத்தை உயர்த்திப் பிடித்த ம.பொ.சி., ‘தமிழர்களின் உரிமைக்கு எல்லை வேங்கடம் என்றும் உறவுக்கு எல்லை இமயம்’ என்றும் இந்திய ஒருமைப்பாட்டு உணர்ச்சி தமக்கு உடன்பாடே என்றும் கூறிவந்தார். (தமிழ் முரசு, 15.4.1947) ‘ஒன்றுபட்ட இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமையுள்ள தமிழகம்’ என்பது அவருடைய நிலைப்பாடு. 

ஆனால்  அண்ணா இந்தியத்தை மறுப்பதில் சரியாகவும், இயல்புக்கு மாறுதலான திராவிடத்தை வலியுறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசிய இன விடுதலை கருத்தியலுக்குத் தடையாகவும் இருந்தார். அண்ணாவின் நாவன்மை திராவிட தேசிய உணர்வைத் தூக்கி நிறுத்தி தமிழ்த் தேசிய உணர்வைப் புறம் தள்ளியது. இதற்குச் சான்றாக ம.பொ.சி. பதிவு செய்துள்ள ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் (12.3.1947) தமிழ் மாநிலம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சியில் அண்ணாவும், ம.பொ.சியும் பங்கேற்றனர். தமிழ் மாகாணக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், திராவிட நாடு பிரிவினைக்கு முதன்மை தந்தும் அண்ணா பேசினார். ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்: 

“தமது திராவிடர் கழகத்தின் திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கைக்கும், தமிழரசுக் கழகத்தின் தமிழரசுக் கோரிக்கைக்கும் வேற்றுமையில்லை யயன்று கூறி (அண்ணா) எங்களிடையே உறவை வளர்ப்பதில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ‘திராவிடத் தனியரசு ஓரணா போன்றதென்றும், தமிழரசு காலணா போன்றதென்றும் கூறினார். ‘நான் கேட்கும் ஓரணாவில், ம.பொ.சி. கேட்கும் காலணா இருக்கிறது. ஆனால், ம.பொ.சி. கேட்கும் காலணாவில் ஓரணா இல்லை என்றார்.” 

மாநாட்டில், ‘இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்குட்பட்ட தமிழரசு’ என்ற கோரிக்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

‘தமிழ்’ என்றும் ‘தமிழினம்’ என்றும் ‘தமிழ்நாடு’ என்றும் பேசுமுன் ம.பொ.சி. குரல் எழுப்புவதும், வாழ்க என்று வாழ்த்துக் குரலை மக்கள் எழுப்புவதும் வழக்கம். ஆனால் அன்று நடந்ததை ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்: 

“ஆனால், தமிழாசிரியர் மாநாட்டிலே, எனக்கு முன் திராவிட இன உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து அண்ணா பேசி விட்டதால், நான் ‘தமிழினம் வாழ்க’ என்ற போது, மாநாட்டிலே தீவிர திராவிடர் பலர் ‘திராவிட இனம் வாழ்க’ என்றும், நான் ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற போது ‘திராவிட நாடு வாழ்க’ என்றும் போட்டிக் குரல் எழுப்பினர். 

(ம.பொ.சிவஞானம், புதிய தமிழகம், பக்.101) 

கூட்டத்தினரின் இப்போக்குக்குக் காரணம் தமிழினம், தமிழ்நாடு எனப் பேசுவதே இந்தியத்துக்கு உட்பட்டது என்ற பார்வையை நாவன்மை மிக்க அண்ணா உருவாக்கியிருந்ததே ஆகும். இந்தியத்துக்கு உடன்படா நிலையையும். ‘தமிழினம், தமிழ்நாடு விடுதலை’ என்ற கருத்தியலுக்கு முரண்படும் உளநிலையையும் மக்களிடையே அண்ணா உருவாக்கி வந்தார். 

அண்ணாவின் திராவிடம் 

திராவிட நாடு விடுதலையை அண்ணா 1940 முதல் 1963 வரை உயர்த்திப் பிடித்தார். திராவிடம் முன்னாளில் தனியாட்சியுடன் இருந்தது என்றும் அதை ஆரியர், வடவர் அடிமைக்காடு ஆக்கி விட்டனர் என்றும் ‘இன்று திராவிடத்தின் தலைவிதி டில்லியில் எழுதப்படுகிறது’ என்றும் டில்லி ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் அண்ணா கருத்துரைத்தார். 

“திராவிட நாடு தனியாக வேண்டும்  - தனி அரசாக வேண்டும்.” ( அண்ணா ‘இன்பத் திராவிடம்’. பக்.20) 

தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் திராவிடக் கூட்டாட்சி: அவரவர் உரிமை, கலை, மொழி இவைகளில் கை வைக்கப்பட மாட்டாது; ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகள் பயிலப்படும். அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்”. ( மேலது, பக்.37) 

“தமிழ்நாடு தமிழருக்குத்தான்  - ஆந்திர நாடு ஆந்திரருக்குத் தான்   கேரள நாடு கேரளருக்குத்தான்   கர்நாடகம் கர்நாடகருக்கே   இவையாவும் கூடிய திராவிட நாடு திராவிடருக்கே   ஆரியருக்கல்ல!  பனியாவுக்கல்ல!  “ (மேலது, பக்.34) 

“நாம் நல்ல நிலை அடைய வேண்டுமானால் இன்னின்ன இணைப்புகளிலிருந்து, ஆரியம், ஆங்கிலம், வடநாடு என்னும் பிணைப்புகளிலிருந்து, ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்புகளிலிருந்து விடுபட வேண்டும்...” ( மேலது, பக்.23-24). இதுவே அண்ணாவின் திராவிடம் பற்றிய பார்வை. அண்ணா கூறினார்: 

“இந்த மூல நோக்கத்தை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்றுக் கொள்வதிலே இந்த நால்வருக்கும் நலமிருக்கிறது என்று நம்புகிறோம். அவர்கள் டில்லியுடன் இணைந்து இருப்பதை விட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். எடுத்துக் கூறும் அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.” (மேலது, பக்.24) 

ஏன் திராவிட நாடு கோரிக்கையை ஏனைய திராவிடத்தார் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் விளக்கம் இதுதான்: 

“கேரளத்தார் சம்மதம் கிடைக்கவில்லை, இன்னும் கேட்காததால்; கன்னடத்தார் ஒப்புதல் வரவில்லை, அவர்களைக் காணாததால்; ஆந்திரர் ஆதரவு பெறவில்லை, அவர்களை நாம் அணுகாததால். கேட்டு மறுத்ததில்லை ; நாம் சொல்லி எதிர்த்த தில்லை. அப்படியே மறுப்பதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திராவிட நாடு எல்லை குறையுமே தவிர, பிரச்சினை மறைந்து விடாது.”           (மேலது, பக்.56) 

ஆனால் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைச் சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களைத் தாண்டி எவரும் ஏற்கவில்லை. 

1938 முதல் 1949 வரை தந்தை பெரியாருடன் அண்ணா இருந்த போதும், பின்னர் 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை உருவாக்கித் தேர்தல் கட்சியாக வளர்த்தெடுத்த காலத்திலும், 1963இல் அதைக் கைவிடும் வரை திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா உயர்த்திப் பிடித்தார். 

தமிழ்த் தலைவர்கள் சிலர் ‘விடுதலை பெற்ற தமிழகம்’ அல்லது ‘இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமை பெற்ற தமிழகம்’ அல்லது தமிழகமும் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளும் சேர்ந்து உருவாக்கப்படும் ‘தமிழப் பேரரசு’ ஆகிய இலக்குகளை வலியுறுத்திய காலத்திலும், அண்ணா திராவிட நாடு விடுதலை பேசினார். 1956க்கு முந்தைய சென்னை மாகாணத்தின் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பேசப்படும் மாவட்டங்களில் திராவிட நாடு கோரிக்கையைப் பரப்ப எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமலே அண்ணா தொடர்ந்து திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார். 

இந்தியத் துணைக் கண்டத்திலே மொழி இன உணர்வின் வளர்ச்சி: 

மொழி வழி மாநிலங்கள் அமைப்பதற் கான கோரிக்கைகள் 1920கள் முதலே வலுவடைந்து வருவதை அண்ணா அறிந்திருந்தாலும், திராவிட நாடு கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பினார். 1953இல் ஆந்திரா மொழிவாரி மாநிலமாகப் போராடிப் பிறப்பெடுத்தது. 

ஆந்திர மாநிலம் கோரி 1952 அக்டோபர் 19ஆம் நாள் முதல் 58 நாள் பட்டினிப்போர் நடத்தி ‘போத்தி ஸ்ரீராமுலு’ உயிர் ஈகம் செய்ததைத் தொடர்ந்து தெலுங்குப் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதற்கு மேலும் மொழிவாரி மாநிலம் உருவாக்காமல் தாமதிக்க முடியாது என்ற நிலையிலேயே தெலுங்குப் பகுதிகள் ஆந்திரமாக 1953 அக்டோபர் முதல் நாள் அறிவிக்கப்பட்டது. இது அண்ணாவுக்கும் தெரியும்; பெரியாருக்கும் தெரியும். 

போத்தி ஸ்ரீராமுலுவின் உயிர் ஈகமும் அதனால் தெலுங்கர்களுக்குக் கிடைத்த வெற்றியும் கன்னடர்களிடையே புதிய வேகத்தை உருவாக்கியது. ‘அன்னடனப்பா தோத்திமேதி’ என்னும் கன்னடர், ஜக்லி எனும் கிராமத்தில் சாகும் வரை பட்டினிப் போர் தொடங்கினார். கன்னடப் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் பின்னர் மாநிலச் சீரமைப்புக் குழு நியமனம் பற்றி நேரு அறிவித்தார்; கலவரம் நின்றது. 1956 நவம்பர் முதல் நாள் மைசூர் மாநிலம் (கர்நாடகம்), கேரளம், சென்னை உள்ளிட்ட மொழிவழி மாநிலங்கள் பிறந்தன. மொழிவழி மாநிலங்களின் உருவாக்கத்தைத் தடுக்க இயலாமற் போனதாலேயே வேறு வழியில்லாமல் மாநிலச் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தங்கள் மொழிஇன மாநிலங்கள் அமைப்பதில் குறியாக இருந்தனர். தமிழ்ப் பகுதிகளுடன் இணைந்து ஒரே மாகாணமாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. 

தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையும் பெரியாரும்: 

மொழிவழி  மாநிலங்கள் அறிவிக்கப்படும் நிலையில், 1956ஆம்ஆண்டு ஜீன் மாதமே பெரியார் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார். பெரியாரின் கோரிக்கை காலம், களம் இவற்றுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இலக்கு மட்டும் முழுமையான விடுதலை என்பதிலிருந்து மாற்றம் காணவில்லை. பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தம் விடுதலை இதழில் அச்சிட்டார்; தனித் தமிழ்நாடு கோரினார். மொழிவழி மாநில உருவாக்கம் இந்திய ஆரிய,வடவர் ஆதிக்கத்திலிருந்து தாம் விரும்பும் விடுதலைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து விடுமோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்த்து வந்த பெரியார் 1956இல் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்தார். 

பெரியார் எழுதினார்: 

“திராவிட நாடு எது? இதற்குமுன்   1956க்கு முன் இருந்த சென்னை மாகாணந்தான் ‘திராவிடநாடு’ என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம், பிரிந்திருக்கவில்லை... இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகி விட்டோம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய் விட்டார்கள்.... 

“தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய் விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”. 

(விடுதலை, 29.8.1956; வே. ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக் -732) 

1953இல் ஆந்திரா தனித் தெலுங்கு மாநிலமாகப் பிரிந்த உடனேயே பெரியாரிடம் மாற்றம் ஏற்பட்டது. 1955இல் பெரியார் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வரவேற்றார். அது தம் விடுதலை இலக்கை அடைய உதவும் என்று கருதினார்: 

“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்  - இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது. என்ன காரணம் என்றால், 

“ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவுணர்ச்சியோ இல்லை என்பதாகும்.... 

“இரண்டு, அவர்கள் இருவருக்குமே   மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலையில்லை.... மூன்றாவது இவர்கள்   இரு நாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர் களானாலும், அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக் காரர்களாவார்கள்... 

“அப்படி 14இல் ஏழிலொரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு,இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 

“இதை, நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.” 

(விடுதலை - அறிக்கை, 11.10.1955; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -ய, பக்.730) 

மொழிவாரி மாநில உருவாக்கத்தை பெரியார் வரவேற்றதன் காரணம் இதுவே. மொழிவாரி மாநிலப் பிரிவினையை அண்ணாவும் வரவேற்றார். 

தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் 1956 பிப்ரவரி 20 அமைதிப் போராட்டம் அறிவித்தன. அதன் குறிக்கோள்களை அண்ணா இப்படி அறிவித்தார்; 

“தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்த -   தமிழகம் மொழிவழி அரசாக  - 

தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் சேர  - 

சென்னைக்குத் தமிழ்நாடு என்று பெயர் கிடைக்க - 

இத்தனைக்கும் சேர்த்தே பிப்ரவரி 20!” 

(திராவிட நாடு, 5.2.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தீ , பக். 352) 

இந்தக் கூட்டுப் போராட்டத்தில் தமிழ்நாடு விடுதலை கோரிய பெரியார் இல்லை என்பதும், போராட்ட இலக்குகளில் தமிழ்நாடு விடுதலை இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 

அண்ணாவின் புதிரான போக்கு: 

1956 மொழிவழி மாநிலங்கள் உருவான பின்பும் அண்ணா திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அண்ணாவிடம் இரண்டு விதப் போக்குகளைக் காணலாம். கட்சித் தொண்டர்களிடம் பேசும் போது மிகை விடுதலை உணர்வு பொங்கப் பேசுவதும், அரசு மற்றும் அதிகார அமைப்புகளிடம் பேசும் போது அதை வரம்புக்கு உட்படுத்திக் கொள்ளுவதுமான போக்கு இருந்தது. 

தட்சணப் பிரதேசக் கொள்கையை எதிர்த்தும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரியும் 1954ஆம் ஆண்டு மே 3ஆம் நாள், பஸல் அலியைத் தலைவராகக் கொண்ட மாநிலச் சீரமைப்புக் குழுவிடம் அண்ணா ஓர் அறிக்கையை அளித்தார். அதன் உள்ளீடு ஆழ்ந்து பரிசீலிக்கத்தக்கது: 

“இந்த நான்கு மொழிவழிப் பிரிவுகளை அமைப்பதுதான் உடனடித் தேவை என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இதைச் செய்யும் போது எந்த ஒரு மொழிப் பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய கேரளம், தமிழகம் என்ற பெயரால் உலவும் கோரிக்கைகளை தி.மு.க முழு மனதுடன் வரவேற்பதுடன் ஆதரவளித்தும் வருகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும், மொழிவழிப் பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிட நாடு கோரிக்கையாகும்.” 

(மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? மதுரை, 2005, பக்.46) 

மொழிவழி மாநிலங்கள் 1956 நவம்பர் முதல் நாள் அதிகார பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வந்தன. அண்ணாவின் அறிக்கைப்படி அதிகாரப் பரவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அண்ணா தம்பிகளிடம் மீண்டும் திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார். தமிழ்த்தேசியத்தையும், தமிழ்நாடு விடுதலையையும் அண்ணா கையிலெடுக்கவே இல்லை. 

தமிழ்த் தேசியத்தை எவர் பேசினாலும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளினார் அண்ணா. தம் நாவன்மையால் அவர் சரியான திசைவழி வந்த தலைவர்களையயல்லாம் மக்களின் பார்வையில் ஈர்ப்பு இழக்கச் செய்தார். அது ம.பொ.சி. ஆனாலும், கட்சிக்குள் கலகக் குரல் எழுப்பி வெளியேறிய ஈ.வெ.கி. சம்பத் ஆனாலும், அண்ணாவின் பழிப்புரைகளுக்கு ஆளாயினர். தமிழ்த் தேசிய இன மறுப்பு என்பது மட்டுமின்றி, இன்றும் கலைஞர் கருணாநிதி பேசுகின்ற ‘மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். நாட்டால் இந்தியர்’ என்கிற வகைபடுத்த முடியாக் குழப்பமான தேசிய அடையாளத்தின் தொடக்கப் புள்ளி அறிஞர் அண்ணாவே ஆவார். 

திராவிடராகத் தம்மை அழைத்துக் கொண்ட அண்ணா மறந்தும் தம்மைத் தமிழ்த் தேசிய இனமாகப் பார்க்கவில்லை. 1956இல் தமிழ் மாவட்டங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாநிலமாக (தமிழ்நாடு) அமைக்கப்பட்ட பிறகும் கூட அண்ணா திராவிட அடையாளத்தையே உயர்த்திப் பிடிக்கக் காரணம் என்ன? 

தந்தை பெரியார் ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது பார்ப்பனர்கள் ‘தமிழர்கள்’ என்று கூறிக் கொண்டு அமைப்புக்குள் நுழையா வண்ணம் தடுக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் திமுக.வில் வி.பி. இராமன் போன்ற பார்ப்பனர்கள் நுழைந்து முக்கியத் தலைவர்களாக வர முடிந்தது. அவ்வாறு இருந்தும் அண்ணா ‘திராவிடர்கள்’ என்ற சொல்லையும் ‘திராவிட நாடு’ என்ற சொல்லையும் பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன? 

அண்ணாவின் அரசியலே இதற்குக் காரணம் ஆகும். பெரியாரைப் போலன்றி அண்ணா தேர்தல் அரசியலைத் தம் வழிமுறையாகக் கொண்டார். 1952இல் நடைபெற்ற முதல் தேர்தலில் தி.மு.க போட்டியிட வில்லை. ஆனால் 1957இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டமன்ற இடங்களையும், 1962இல் 50 சட்டமன்ற இடங்களையும் 1967இல் தமிழக ஆட்சி பீடத்தையும் தி.மு.க. கைப்பற்றியது. 

தி.மு.கவின் தேர்தல் வெற்றிகளுக்கும் அண்ணா தம்மைத் தமிழ்த் தேசியராகப் பார்க்க மறுத்தமைக்கும் தொடர்பிருக்கிறது. மொழி வாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகும் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக தமிழக எல்லைப் பகுதி மாவட்டங்களில் பிற மொழியாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தம்மைத் தமிழ்த் தேசிய இனத்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டால், பிற மொழியாளர்களின் வாக்குகளைக் கணிசமான அளவில் இழக்க வேண்டியிருக்கும் என்பதை அண்ணா அறிவார். இன்றும் தமிழக எல்லைப் பகுதிகளில், வேலூர் இராணிப் பேட்டை போன்ற பகுதிகளில் தெலுங்கில் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் கல்விபெறும் வாய்ப்பை திமுக அரசு அளித்திருக்கிறது. கடந்த காலத் தேர்தல்களின் போது முரசொலி மாறன் போன்றவர்களே பிறமொழியாளர்களின் குடியிருப்புப் பகுதியில் இந்தியில் வாக்குக் கேட்டனர் என்ற செய்தியை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். 

தேர்தலில் வெற்றி பெற வாக்குகளைப் பெறும் வகையில் தன் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்வது, கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வது என்ற போக்கை அண்ணாவே தொடங்கி வைத்தார். இந்திய ஒருமைப்பாட்டுக்கு விசுவாசம் பாராட்டிப் பங்கெடுக்கும்  தேர்தல் அரசியலில் திமுக.வை ஈடுபடுத்தியதன் மூலம் இன்றைய திராவிட கட்சிகளின் பிழைப்புவாத அரசியலின் தொடக்கப் புள்ளியை அண்ணாவே அளித்தார். அண்ணா எளிமையானவராகவும், அதிகாரம் செலுத்திய காலத்தில் ஊழலுக்கு அப்பாற்பட்டவராகவும் இருந்திருந்தாலும் அவருடைய அரசியல் வழித்தோன்றல்களின் ஊழல் நிறைந்த பிழைப்புவாத அரசியல் என்பது அண்ணா ஏற்படுத்திக் கொடுத்த தொடக்கத்தின் பரிணாம வளர்ச்சியே என்பதை மறுக்க வியலாது. 

தமிழ்த் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சரியான திசைவழியை எவர் முன்னெடுத்தாலும் அண்ணா தடைக்கல்லாக நின்று தமிழ்த் தேசிய வளர்ச்சியைக் குன்றச் செய்தார். 

சி.பா. ஆதித்தனாரின் தமிழ்த் தேசியத்துக்கு அண்ணாவின் மறுப்பு 

தமிழ்த் தேசிய உணர்வாளரான சி.பா. ஆதித்தனார் உலகத் தமிழர்கள் அனைவரது பாதுகாப்பு பற்றியும் சிந்தித்தவர். 1942இல் தமிழக விடுதலையை இலக்காக் கொண்டு தமிழ் ராஜ்ய (தமிழ் அரசு) கட்சியை உருவாக்கினார். பின்னர் நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கினார். தில்லி ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே ஆதித்தனாரின் அரசியல். 1962 தேர்தலின் போது ஆதித்தனார் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற சிந்தனையைப் பரப்புரை செய்தார். ஆதித்தனாரை விமர்சனம் செய்த அண்ணா இவ்வாறு கூறினார்: 

“சி.பா. ஆதித்தனார் கேட்கும் தனித் தமிழ்நாடு என்பது ஒரு தொழுநோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெயைப் போன்றது. அது யாருக்கும் பயன்படாது.” 

அண்ணாவின் இந்தக் கடுமையான விமர்சனத்துக்கு ஆதித்தனார் இவ்வாறு பதிலிறுத்தார்:

 “மெத்தப் படித்த அண்ணாத்துரை அவர்களே! இன்று இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதைப் போல, நீங்கள் கேட்கும் திராவிடக் கூட்டாட்சியிலும் தமிழ்நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். அதை விட இந்தியக் கூட்டாட்சியிலேயே அடிமை நாடாக இருந்து விடலாமே! அது மட்டுமன்று. ‘திராவிட நாடு’ என்ற குழந்தையைப் பெற்றவர் பெரியார். அதை வளர்த்தவரும் அவரே. பின்னர் அவரே அத்திராவிட நாடு என்ற குழந்தை செத்து விட்டது, அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன் என்று அறிவித்து விட்டார். இவ்வாறு அவர் அறிவித்த பிறகும் ‘திராவிட நாடு’ பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று கதறியழுது கொண்டிருப்பதில் பொருளில்லை” (மேற்கோள்: குணா: தமிழின மீட்சி, ஒரு வரலாற்றுப் பார்வை, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1996, பக்.66) 

ஈ.வெ.கி. சம்பத்தின் தமிழ்த் தேசியத்துக்கு அண்ணாவின் மறுப்பு: 

தி.மு.க.வை விட்டு வெளியேறிய ஈ.வெ.கி. சம்பத் மீதான அண்ணாவின் தாக்குதல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. 

தி.மு.க.வுக்குள் 1960 முதல் ஓர் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. 1949இல் கட்சி தொடங்கப்பட்டது முதல் 1955 வரை கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணாவே இருந்தார். ஒரு மாறுதலுக்காக 1955 முதல் 1960 வரை நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக இருந்தார்.1960இல் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இவர்கள் போட்டியை அமைதிப்படுத்த அண்ணாவே மீண்டும் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் கட்சியே கிட்டத்தட்ட சம்பத் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக அவரது ஆதரவாளர் கண்ணதாசன் ‘வனவாசம்’ என்ற தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். சம்பத் அவைத் தலைவர், கருணாநிதி பொருளாளர் என்று அப்போதைக்குப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தது. 

சம்பத்தை குத்திக் காட்டும் வகையில் அண்ணா எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வடிவில்) கட்டுரைக்கு எதிர்வினையாக சம்பத் தென்றல் இதழில் எழுதிய ‘அண்ணாவின் மன்னன்’ கட்டுரை மீண்டும் பிரச்சினையை எழுப்பியது. 

வேலூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்திற்கு (21 -22 சனவரி 1961) முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் சம்பத் தாக்கப்பட்டார். பிப்ரவரி 1961இல் திருச்சியில் கண்ணதாசன் மீது செருப்பு வீசும் முயற்சி, அதைக் கண்டித்து சம்பத் பட்டினிப் போராட்டம், பிறகு அண்ணா அழுது சமாதானம் செய்தது, (1961) ஏப்ரல் மாதம் சென்னையில் டி.எம். பார்த்தசாரதி எழுதிய திமுக வரலாறு நூல் வெளியீட்டு விழாவிற்கு சம்பத் பேசச் சென்றது. ஆனால் அண்ணா வராமற் போனது  - என்ற தொடர் நிகழ்வுகளின் கசப்பு காரணமாக 1961 ஏப்ரல் 9இல் சம்பத் திமுகவை விட்டு வெளியேறினார். ஏப்ரல் 19 அன்று தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். தமிழ்த் தேசியக் கட்சி அரசியல் அறிவியலின் அடிப்படையில் சரியான புரிதலோடு தமிழ்த் தேசிய அரசியலை முன் வைத்தது. 

திமுக வில் இருக்கும் போதே, சம்பத் உட்கட்சிச் சீர்கேடுகள் மீது மட்டுமின்றி, ‘திராவிட நாடு பகற்கனவாகி விட்டது’ என்றும் ‘தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு திராவிட நாடு பற்றிப்  பேசுவது பைத்தியக்காரத்தனம்’ என்றும் வெளிப்படையான விமர்சனங்களை வைத்தார். 

தமிழ்த் தேசியக் கட்சியின் முதல் மாநாடு 1961 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 -17 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட அரசியல் கொள்கைத் தீர்மானம்:

“மொழி வழி தேசிய இனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதின் மூலம்தான் அவற்றின் தேசிய அபிலாஷைகள் நிறைவேற்றப்பட முடியும். ஒவ்வொருவரின் அறிவுத் திறனும் படைப்பாற்றலும் பூரணமாக வெளிப்பட்டு சமூக நல்வாழ்வு தழைக்க முடியும். 

“ஒவ்வொரு மொழிவழித் தேசிய இனத்திற்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும். அவ்விதம் சுதந்திரம் பெற்ற தேசிய இனங்கள் தம்மிச்சையாக ஒன்று கூடி பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய ஒரு கூட்டமைப்பைக் காண வேண்டும். இதுவே இந்தியாவின் அரசியல் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்று த.தே.க. கருதுகிறது. 

“இந்தியக் கூட்டாட்சியில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசியத் தன்னாட்சி காண்பது என்ற கட்சியின் இலட்சியம் இந்த அடிப்படையில் அமைந்ததாகும். எனவே “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இலட்சிய முழக்கத்தின் வெற்றிக்குப் பாடுபட வாரீர் என்று தமிழக மக்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது” 

தமிழ்த் தேசியக் கட்சியின் தீர்மானம் தேசிய இனத் தன்னுரிமையை தன் சாரமாகக் கொண்டிருப்பதை உணரலாம். 

1961இல் சம்பத் முன்வைத்த பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேச இலக்கை கொச்சைப் படுத்திய அறிஞர் அண்ணா, 1957 திமுக தேர்தல் அறிக்கையில் அதே இலக்கைத்தான் தங்கள் குறிக்கோளாகத் தெரிவித்திருக்கிறார். 

திமுக.வின் 1957 தேர்தல் அறிக்கை: சுயநிர்ணய உரிமை வேண்டும்

“இந்திய அரசியல் சட்டம் உரிமை வழங்கும் சாசனமாக அமையாமல், பெரிதும் உரிமையை மறுத்த வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு அரண் செய்யும் சட்டத் தொகுப்பாக உள்ளது. இந்திய யூனியனில் பிணைக்கப்பட்டிருக்கும் எந்த மாநிலமும் வெள்ளையன் வெளியேறிய போது இந்திய யூனியன் என்னும் அமைப்பில் இணைவதற்கான விருப்பு வெறுப்பைத் தெரிவித்துக் கொள்ள வாய்ப்பே பெறவில்லை. அடுத்து யூனியன் அமைப்பிலிருந்து ஏதாவது ஒரு மாநிலம் பிரிந்து செல்ல விரும்பினால், பிரிந்து செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சம்மதித்தால்தான் பிரிந்து செல்ல முடியும் என்ற விதியினை அரசியல் அமைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, அரசியல் அமைப்பில் செய்யப் படவேண்டிய முதல் மாற்றம், எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையைத் தானே பெற்றிருக்க வழி செய்வதுதான்”. 

தமிழ்த் தேசியத்தை சம்பத் முன்னிறுத்திய போது முன்னைவிடவும் பலமாக திராவிட நாடு கோரிக்கையை அண்ணா முழங்கினார். முன்னமே திராவிடநாடு சுடுகாடு அடைந்து விட்ட நிலையில் ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு ‘என்று முழங்கினார். 

சம்பத் முன்வைத்த, அறிவியலின் பாற்பட்ட ‘பிரிந்து போகும் உரிமையோடு கூடிய தமிழகம்’ என்ற, உலகளாவிய தேசிய இனத் தன்னுரிமை ஏற்பளிப்புக்கு உகந்த தமிழின அரசியல் கோட்பாட்டை அண்ணா எதிர்கொண்ட விதம் அறிவின்பாற்பட்டதோ அறிவியலின் பாற்பட்டதோ அல்ல. அண்ணாவின் கேள்விகள் இந்தக் கோணத்தில் அமைந்திருந்தன: 

1.  திராவிட நாடு கோரிக்கையைத் தமிழ்நாடு என்று மாற்றிக் கொள்வதால் என்ன பெரிய பலன் கிடைத்துவிடப் போகிறது? 

2.     திராவிட நாடும் கிடைக்கப் போவதில்லை, தமிழ்நாடும் கிடைக்கப் போவதில்லை. இதில் கோரிக்கை எதுவாக இருந்தால் என்ன? 

இந்தக் கேள்விகளை அண்ணாவின் நீண்ட வாதங்களின் சாரமாக நாம் கொள்ளலாம். (கேள்விகளின் வடிவம் கட்டுரையாளருடையது.) 

3.        பிரிந்து போகின்ற உரிமையுடள் கூடிய தமிழ்நாடு என்ற சம்பத்தின் கோரிக்கையை இந்தியாவுடன் சேர்ந்திருப்பதற்கான உத்தியாக அண்ணா சித்திரித்தார். ‘இந்தியர் ஆகின்றனர்’ என்று தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் நையாண்டி செய்தார். 

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் -140 (21.5.1961) கடிதம் 141 (28.5.1961) 

திராவிட விடுதலையில் நம்பிக்கை இல்லா அண்ணா 

திராவிட நாடு கோரிக்கையில் அண்ணாவுக்கே நம்பிக்கையில்லை ; அது கிடைக்காது என்று அவருக்கே தெரியும். ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு உணர்வூட்டுவதற்கும், சட்டசபையில் அதிக இடங்கள் பெறுவதன் மூலம் திராவிட நாட்டை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டி தேர்தல் வெற்றிகளைக் குவிப்பதற்கும் அண்ணா அதைப் பயன்படுத்தினார். 

திராவிட நாடு கோரிக்கையை விமர்சனம் செய்து பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டிருந்த சம்பத்துடன் அண்ணா நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய பதிவு முக்கியமானது. இதைக் கண்ணதாசன் பதிவு செய்திருக்கிறார்: 

“அண்ணா அவர்களுடன் இதைப் பற்றிப் பேசுவது என்று முடிவு செய்து வி.பி. ராமன் அவர்களுடைய வீட்டில் அண்ணா அவர்களைச் சந்தித்து திராவிட நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டால்கழகத்திற்கு நல்ல எதிர்காலம் என்று சம்பத் அவர்களும் மற்றவர்களும் பேசினார்கள். அதற்கு அண்ணா அவர்கள் கைவிட முடியாது என்று சொல்லவில்லை. அவர் சொன்னது: 

காலம் வரும். காலத்தை எதிர்பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும்போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரை அதை திடீரென்று வெளியிட்டால் நம்முடைய தோழனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு விடும். அதனால் அதுவரையில் இதைப் பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம் என்பதே” 

(மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி?, மதுரை, 2005, பக்.100) 

கண்ணதாசனின் சொற்களை அப்படியே நாம் ஏற்கவில்லையயன்றாலும் கூட, அதில் உண்மை இருப்பதையும், அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதையும் சமகாலத்திய உணர்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அண்ணா தமது அரசியல் இலக்கைப் பொறுத்த வரை நேர்மையாக இருக்கவில்லை ; திராவிடத் தேசியத்தை அண்ணா உயர்த்திப் பிடித்தது அறிந்தே செய்த தவறு. 

அண்ணா திராவிட நாடு கோரிக்கையைத் தம் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கைவிட்ட திறமையும்,விதமும் விரிவாகத் தனி ஆய்வில் பேசத் தக்கவை. 1961இல் ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்று முழங்கிய அண்ணா, 1962இல் சீனப் படையயடுப்பைக் காரணம் காட்டி ‘நேருவின் கரத்தை வலுப்படுத்தியே தீருவோம்’ என்று முழங்கினார். 1963இல் இந்திய அரசியல் சட்டத்தில் 16ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் பதவியேற்கும் போது இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று இத்திருத்தம் கூறியது. பிரிவினை கோருபவர்களுக்கு சிறை என்றோ அபராதம் என்றோ ஏதும் கூறாத நிலையிலேயே அண்ணா தம் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். தேர்தலில் போட்டியிட்டுச் சட்ட மன்றம் செல்லும் உரிமையை திமுக காப்பாற்றிக் கொண்டது. 

ஆனால், இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திராவிடர் களுடைய தன்னுரிமைக்காக அண்ணா எடுத்து வைத்த வாதங்களும், எடுத்துக் கொண்ட முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. தாம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக அண்ணா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கூறிய சொற்களின் நோக்கும், அதன் வரலாற்றுப் பரிமாணமும் விரிவாக ஆய்வு செய்யத் தக்கவை. 

உலகெங்கும் விடுதலை பெற்ற தேசிய இனங்கள் ஆயினும் சரி, விடுதலை கோரிப் போராடும் தேசிய இனங்கள் ஆயினும்சரி, சிந்தனையாளர்களும், தலைவர்களும் சிந்திய விடுதலைச் சிந்தனைகள் வேர்விட்டுத் துளிர்விட்டு பெருமரமாகி உரிமைக் கனிகளைத் தன் நிழலில் தங்கும் அத்தேசிய இனத்தவர்க்கு வழங்கும். 

அண்ணா நட்டு வைத்த திராவிடத் தேசியம் வளர்ந்து விரிந்து தழைத்து மரமாக வில்லை; அது வளர்ப்புள்ள மரமன்று; அது ஏணி மரம் போன்றது. அதை நட்டு வைத்தவர்களைத் தேர்தல் படிகள் மூலம் பதவிப் பரணுக்கு ஏற்றி விட்டது. உயிர்ப்புள்ள தமிழ்த்தேசியத்தை மறுத்த அண்ணாவின் திராவிட தேசியம் வேர் பிடிக்கவில்லை; ஏணி மரம் வேர் விட்டதாக வரலாறு இல்லை. 

(வரும்).

Pin It