jayalalitha at vikatan wrapperதன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மீண்டும் தன் அடக்குமுறை முகத்தை அ.தி.மு.க. அரசு  வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய கடைசிப் பாய்ச்சலுக்கு ஆனந்த விகடன் வார இதழ் ஆளாகியுள்ளது.

கடந்த 30 வாரங்களாக, 'மந்திரி தந்திரி' எனும் தொடர் அவ்விதழில் வெளிவந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும், அவர்கள் செய்துள்ள, செய்யத் தவறிய செயல்களின் மீதுமான விமர்சனம் அது. இப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இறுதியாக ஒரு கட்டுரை தந்துள்ளனர். அரசாலும், ஆளும் கட்சியாலும் அதனைப் பொறுக்க முடியவில்லை.

அவ்விதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அது அவர்களின் உரிமை. ஆனால் அவ்விதழின் முகவர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மறைமுகமான மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக, இதழ் ஆசிரியர் கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், கடந்த 23 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு உண்டா என்னும் ஐயமும் ஏற்பட்டுள்ளது.

ஆனந்த விகடன் எந்த ஒரு கட்சிச் சார்பும் உள்ள ஏடு அன்று. தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இது போன்ற கடுமையான விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன. இப்போதும் பல நேரங்களில், தி.மு.க. வைத்தாக்கி எழுதும் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அது அவர்களின் 'பத்திரிகை சுதந்திரம்.' அவதூறு என்றோ, கண்ணியக் குறைவாக எழுதப்பட்டுள்ளது என்றோ யார் கருதினாலும், சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம். அதனை விட்டுவிட்டு, அடக்குமுறையைக் கையில் எடுப்பது நல்லதன்று.

அ. தி.மு.க. அரசுக்கு அடக்குமுறை புதிதன்று.  நக்கீரன் இதழ் சந்திக்காத அடக்குமுறைகளா?

2003 ஆம் ஆண்டு ஆங்கில 'இந்து' நாளேடு கூட அடக்குமுறைக்கு ஆளானது. முரசொலி ஆசிரியர் செல்வம் ஒரு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். அண்மையில், பாடகர் கோவன், மது விலக்கு' குறித்துப் பாடியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

அவதூறுகளுக்காகவும், தரமற்ற, கண்ணியக் குறைவான பேச்சுகளுக்காகவும் கைது செய்ய வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர்கள், பேச்சாளர்கள், நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் ஆசிரியர் குழுவினர் ஆகியோரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டியிருக்கும்.