எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டன. ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து, இன்று பார்த்தாலும் அதே விறுவிறுப்பைத் தருகின்ற படங்கள் இரண்டு. ஒன்று, பராசக்தி. இன்னொன்று ரத்தக்கண்ணீர்.

அந்த ரத்தக்கண்ணீரை உருவாக்கிய பேனாவிற்குச் சொந்தக்காரரும், நூல்கள் பலவற்றை எழுதியுள்ளவரும், ஆயிரக் கணக்கான மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவருமான திருவாரூர் தங்கராசு அவர்கள் நம்மை விட்டு மறைந்துவிட்டார்கள். என் இள வயதிலிருந்தே அவருடைய பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். கேலியும், கிண்டலும் நிறைந்த, அதே நேரத்தில் சிந்தனை வளம் மிக்க அவருடைய பேச்சுகள், என் போன்றோரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.

10 ஆண்டுகளுக்கு முன்பு, அவரோடு இணைந்து வாழப்பாடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றினேன். அன்று அவர் நடந்து கொண்ட முறை, அவருடைய மிகப் பெரிய பெருந்தன்மை யைக் காட்டியது. அனைவரும் பேசி முடிந்தபின், நான் பேச அழைக்கப்பட் டேன். எனக்குப் பிறகு அவர் மட்டும் தான் பேச வேண்டியிருந்தது. ஆனால், என்னைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்துவிட்டு, அவர் பேசத் தொடங் கினார்.

“நான் பழைய ஆளு. தம்பி பேச்சுதான் புதுசு. நீங்க எல்லாரும் எதிர்பாக்கிற பேச்சு. ஆகையினால அவரு தான் கடைசியில பேசனும்” என்றார். என்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவர் சொன்ன செய்தி அது. தனக்கு அடுத்து வருகின்றவர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்று எனக்கு அவர் அன்று கற்றுக்கொடுத்தார்.

திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு நம் வீர வணக்கம்!