தந்தை பெரியாரும், பேரறிஞர் அம்பேத்கரும் மக்களின் சமூக நீதிக்காகப் போராடிய இருபெரும் இணையற்ற தலைவர்கள்.

முழுச் சமூகநீதி இன்னமும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், கிடைத்திருக்கும் சமூக நீதிக்கான வழிமுறைகளுக்கும் கூட ஆபத்து ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் பத்து இடங்களுக்குப் பன்னிரண்டு பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்துப் பரிந்துரையாக அனுப்பப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்வரோ, தாழ்த்தப்பட்டவரோ இல்லை. மாறாக அனைவரும் ஒரு குறிப்பிட்ட(பார்ப்பன) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

இதில் பெரும்பாலானவர்கள் வழக்கறிஞர்கள். அவர்களும் கூட வழக்கறிஞர் பணியில் போதுமான பயிற்சி பெற்றவர்களும் அல்லர்.

வழக்கறிஞர் காந்தி இந்த நீதிபதிகள் தேர்வுமுறை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்கிறார்.

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்பதே ஒரு சமூக அநீதி.

அதிலும் நீதிபதிகள் நியமனம் செய்யத் தயாரிக்கப்பட்ட பட்டியலில் பார்ப்பனர் அல்லாதவர்களே இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது கொடுமையிலும் கொடுமை. இப்படிப் பட்ட பட்டியலைக் கொலிஜியம் எனப்ப டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு எப்படிப் பரிந்துரை செய்தது என்பது வியப்பாக இருக்கிறது.

இப்பட்டியலை மறுபரிசீலனை செய்ய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, குறிப்பாக நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது, அதே உயர்நீதிமன்ற சக நீதிபதி, சி.எஸ். கர்ணன், வழக்குத் தொடர்பான நீதிபதிகள் வி. தனபாலன், கே.கே. சசிதரன் முன்னிலையில் சென்று, இந்தப் பரிந்துரைப் பட்டியல் நியாயம் அற்றது-. இதை எதிர்த்துத் தானும் மனுத்தாக்கல் செய்வதாகச் கூறியிருக்கிறார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

திறமை வாய்ந்த பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் யாரும் இடம் பெறாமல், ஓர் உயர்நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கச் சமூகத்திற்குச் சாதகமாக, அவர்கள் பெயர்களை மட்டுமே நீதிபதி பதவிகளுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறது என்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம் சமூகநீதிக்கான இன்றைய நெருக்கடிகளையும் ஆபத்தையும்.

சமூகநீதிக்கான போராட்டம் வலுவாகத் தேவைப்படுகிறது என்பதைத் தான் இது காட்டுகிறது.