இந்து மனத்தைப் புண்படுத்தி விட்டார்கள் என்று ஊடகங்களின் வாயிலாகச் செய்தி படித்திருப்பீர்கள். அது என்ன இந்து மனம்? இங்கே இரண்டு செய்திகள் உள்ளன. ஒன்று மேல்நிலையாக்கப் பட்ட கருத்தியல், இன்னொன்று அதற்கு எதிராய்க் கீழ்நிலையாக்கப் பட்ட கருத்தியல். ஆதிக்கம் செலுத்தும் கூட்டம் தங்களுடைய மொழி, பண்பாடுதான் சிறந்தவை என்ற கருத்தை உருவாக்கும். தங்களின் ஆதிக்கத்தை, பொதுப்புத்தி வழியாக நிலைநிறுத்தும் முயற்சிதான் இது.

சமஸ்கிருதம்தான் கடவுள் மொழி என்று பிரச்சாரம் செய்து, நமது வழி பாட்டு மொழியாக இருந்த தமிழ் மொழியை நீச பாசை என்று கீழ்நிலை யாக்கம் செய்தனர். பிறகு அயர்லாந்தி லிருந்து, கால்டுவெல் என்னும் பாதிரியார் இங்கு வந்து, தமிழ் மொழியின் தனித் துவத்தையும், சிறப்பையும் விளக்க வேண்டியதாயிற்று.

ஆதிக்கப்பிடி அறுந்துவிடுமோ என்று அஞ்சிய பார்ப்பனர்கள், மணிப் பிரவாள நடையை எழுத்து, ஊடகம் வழியாகச் செலுத்தினர். அதனையும் திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகிய இயக்கங்கள் எதிர்த்துப் போராடி பொதுப்புத்தியைத் தணிக்க வேண்டியதாயிற்று