ஜெயலலிதா தலைமையிலான தமிழகத்தின் ஆட்சி சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியாக இருக்கிறதா அல்லது காவல்துறையின் அதிகாரத்தில் நடக்கும் அடக்குமுறை ஆட்சியா என்பதில் எந்தவிதக் குழப்பமும் இல்லை.

jayalalitha 290காவல்துறையின் அதிகாரம்தான் இங்கே கொடிகட்டிப் பறக்கிறது.

மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக வும் போராட முற்படுவார்கள் என்பது உலக நடைமுறை.

தமிழகம் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது.

போராட்டம் என்று சொன்னாலே காவல்துறையின் அடக்குமுறைகளும், ஒடுக்கு முறைகளும், கைதுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன இன்றைய ஆட்சியில்.

மாற்றுத்திறனாளிகள் அரசின் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத் துப் போராடினார்கள். அப்போது நடந்தது என்ன?

முதலமைச்சரோ, துறை அமைச்சர் களோ அவர்களைச் சந்தித்துப்பேசி ஒரு சுமூக முடிவை எடுத்திருக்கலாம்.

மாறாக ஜெயலலி தாவின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையினர் மனித நேயமற்ற முறையில் அந்த மாற்றுத் திறனாளிகள் மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

பார்வையற்றவர்களை மல்லுக்கட்டி இழுத்து, காவல் வண்டிகளில் ஏற்றி, பல கிலோ மீட்டர் களுக்கு அப்பால் நிராதர வாக விட்டுவிட்டு வந்த செய்தியை, அம்மாற்றுத் திறனாளிகளே கண்ணீ ரோடு சொன்ன அவலத் தைத் தொலைக்காட்சி கள் ஒளிபரப்பின.

பரமக்குடியில் அமைதியாக நடைபெற வேண்டிய இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி, காவல்துறையின் அத்துமீறிய செயலால், கலவரமாகி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குப் போய்விட்டது.

இதை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவின் அறிக்கைகூட நியாயமாக இல்லாமல், காவல்துறை யினரின் செயல்கள் நியாயமானதே என்று சொல்வதாக அமைந்திருந்தது.

அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில், பெருநகரக் காவல்துறை ஆணையர்களுக்கு மாஜிஸ் திரேட்டுகளுக்கு இணையான அதிகாரம் வழங்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இவைகளைப் பார்க்கும் போது, தமிழகத்தில் நடைபெறுவது ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்பதை உறுதி செய்வதாக அமைகிறது-.

அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்தபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு போராட்டம் நடத்த லாமா என்று மாணவர்கள் கலந்து பேசியிருக்கின்றனர்.இறுதியில் போராட்டம் வேண்டாம் என்றே முடிவெடுத்து விட்டுவிட்டார்கள்.

ஆனால் நடந்தது வேறு!

போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்வது என்பதற்கு மாறாக, போராட்டமே நடத்தாத மாணவர்களைக் கூட, கைது செய்து அலைக்கழித்துள்ளது காவல்துறை.

அப்படிக் கைது செய்யப் பட்டவர்கள் ஜோதிலிங்கம், ரமேஷ், மோகனச்சந்திரன், லாமன், கவுதமன், தமிழினியன், இயக்குனர் கவுதமன் ஆகியோர்.

காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான தமிழினியன், “அப்போது ஆய்வாளர் ஸ்ரீகாந்த் என்னை அடித்தார். எனது அலறல் சத்தம் கேட்டு, வாகனத்தில் இருந்த இயக்குனர் கவுதமன், அடிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று கத்தினார். அவரைக் கேவலமான வார்த்தையால் திட்டினார் மற்றொரு அதிகாரி” என்று காவல்துறையின் செயலைச் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழினியனின் சொந்த ஊர் ஈரோடு. அவர் இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில், படித்துத் திரும்பியிருக்கிறார். அவரே சொல்கிறார், நான் இலங்கைத் தமிழன் அல்ல என்று.

ஆனாலும் அவரை இலங்கைத் தமிழர் என்றே காவல்துறை முடிவு செய்ததாகத் தமிழினியன் கூறுகிறார். அப்படியானால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று படித்துவிட்டுத் திரும்பும் மாணவர்களை அமெரிக்கர்கள், இங்கிலாந்துக்காரர்கள் என்றா சொல்ல முடியும். இதைக்கூடத் தமிழக காவல் துறையினர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகிறது.

 “தமிழினியனை ஏ.சி. ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட போலிசார் கீழே போட்டுக் கதறக் கதற அடித்தனர், உதைத்தனர்... நாங்கள் வேனுக்குள் இருந்து சத்தம் போட, தாக்குதலைக் குறைத்த போலீசார், மீண்டும் எங்களை வேப்பேரி போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு சென்றனர்.

பிரணாப் முகர்ஜி டில்லிக்கு விமானம் -ஏறும்வரை எங்களை அங்கேதான் வைத்திருந்தனர்... போலீஸ் தாக்குதலில் காயமடைந்த தமிழினியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்கிறார் இயக்குனர் கவுதமன்.

போராட்டம் என்பது மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு அடையாளம். வன்முறையற்ற அறப் போராட்டம் சனநாயகத்தின் ஒரு பகுதி.

இங்கே மாணவர்கள் போராட வில்லை. போராடலாமா என்று ஓர் ஆலோசனைக் கூட்டம் மட்டுமே நடத்தியுள்ளனர்.

அதற்கே காவல்துறை இத்தகைய கைது நடவடிக்கைகளை, எடுத்திருப்பது சனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நாள் தவறாமல், திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறி என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவைகளின் எண்ணிக்கையைத் தலைவர் கலைஞர் பட்டியலிட்டே காட்டி யிருக்கிறார்.

பாலியல் வன் கொடுமைகள், ரவுடிகளின் அட்டகாசங்கள், அவைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் நாட்டில்.

அவர்கள் மீது காட்ட வேண்டிய கடுமையை, மாணவர்கள் மீது காட்டுவது என்ன நியாயம்?

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அத்து மீறுவது சனநாயகத்தின் மாண்புக்கு அழகன்று. இது அதிகார வரம்புமீறல்.

மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மீது மட்டுமின்றி, ஆட்டோ ஓட்டுனர் களையும் தடியடி நடத்தியே காவல்துறை கலைத்திருக்கிறது. யார் எந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும், அந்தக் கோரிக்கைகள் குறித்து ஆராயாமல் தடியடி நடத்தியே தீர்வு காண முடியும் என்று தமிழக அரசு நம்புகிறது.

அதிகாரம் இருக்கும்வரை ஆட்டம் போட்ட இடி அமீன், இட்லர், முசோலினி எல்லோரும் அதற்கான விலையை எப்படிப் பெற்றார்கள் என்பது வரலாறு சுட்டிக்காட்டும் பாடம்.