oviya 350தோழர் ஓவியா

புதியகுரல் அமைப்பு

1. அண்மைக்காலமாகப் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். அதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

பாலியல் வன்கொடுமைகள் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று அதிகளவில் அவை குறித்த செய்திகள் தெரியவருகின்றன. ஊடகங்களின் வளர்ச்சிப் போக்கினால் பாலியல் வன் கொடுமைகள் செய்திகளாக்கப் படுவதாலும், மக்கள் முன்னைவிட இப்போது, இது பற்றித் தயங்காமல் வெளியில் சொல்வதாலும், இது பற்றி நாம் அதிகம் அறிந்துகொள்ள நேர்கிறது.

என்றாலும் கூட, சமீப காலமாக இந்த வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்று பெண்களின் வாழ்நிலை மாறியிருக் கிறது. அவர்களுடைய வெளி, வீட்டிற்கு அதாவது குடும்பத்திற்கு வெளியே பெரியளவில் பரவியிருக்கிறது. அங்கெல்லாம், அறிமுகமில்லாத மனிதர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது. பொதுவாக ஒரு பெண் என்பவள் ஆண் மனத்தில் தன்னால் அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு பொருள் என்பதாகவே இங்குள்ள கலாச்சாரத்தில், குழந்தை வளர்ப்பு முறையில் பதிவு செய்யப்படுகிறாள்.

எனவே சமூகப் பின்னணி இல்லாமல்  வெளியில் தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும் ஆணுக்கு, இவளை நான் அனுபவிக்க  முடியாதா என்ற எண்ணம் தலைதூக்குகிறது. ஒரு பெண் தான் வாழ்கின்ற குடும்பம், தெரு மற்றும் ஊரைத் தாண்டிய பொது வெளியில் இப்படித்தான் பார்க்கப்படுகிறாள். இந்த உணர்வு எந்த ஆண் மனத்தில் மிருகத்தனமாக வளர்ச்சியடைகிறதோ அந்த ஆண் பாலியல் வன்முறை புரிகிறவனாக மாறுகிறான்.

குடும்பத்திற்குள், உறவினர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். பெரும்பாலும் அதைப்பற்றிய செய்திகள் வெளியே வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன் றுமாக மிகச்சில மட்டுமே தெரியவரு கின்றன. இன்று பெண்கள் தங்களுக்கான வெளியை விரிவுபடுத்திக் கொண்டு போகும் போது, இதுபோன்ற சிக்கல் களைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

2. பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்வைக்கப்படும் வாதங்களும், தீர்வுகளும், ‘பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?’ ‘குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்’ என்பனவற்றைச் சுற்றியே சுழல்கின்றனவே...

இது போன்ற வாதங்கள் பெண்களை வீட்டுக்குள் முடக்கி வைக்கவே பயன்படும். மாறாக, பெண்கள் பயன்படுத்தும் வெளியை, சமூகப் பரப்பைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். நியாயமாகப் பேச வேண்டுமானால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளியான ஆணும் பாதிக்கப் படுகிறான். இதைத் தனி மனிதன் சார்ந்த குற்றமாக மட்டுமே பார்க்க முடியாது. இதற்கான சமூகக் காரணிகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் கெட்டு, பாதிப்பை ஏற்படுத்திய ஆணின் வாழ்க்கையும் வழக்கு, சிறை, தண்டனை என்பதாக முடிந்து விடுகிறது. இதைப்பற்றி யாருமே பேசுவதில்லை. இதையு-ம் கணக்கில் எடுத்துக் கொண்டால்தான், நான் முதலில் சொன்னதுபோன்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இயலும் என்று நான் கருதுகிறேன். பெண்ணுக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திவிட்டு, ஆண் மனத்தை எப்படிப் பண்படுத்துவது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

3. முலாயம்சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மோசமான கருத்துகளை வெளியிடுவதையும், அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஊடகங்களுக்கு இதுதான் பெரிய செய்தியாகப் போய்விட்டது என்று சொன்னதையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு பெண்ணியவாதியாக மட்டு மில்லாமல், பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவள் என்ற அடிப் படையில், இதிலுள்ள அரசியலைப் பற்றியும் நான் பேசியாக வேண்டும். முலாயம்சிங், சித்தராமையா போன்றவர் கள் பேசுவது போலப் பேசினால், எதிர்வினை எப்படி இருக்கும் என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்குத் தெரியும். காரணம், இது பெரியாரின் மண். இங்கே, அனைத்து மக்களின் சிந்தனையுமே பெரியாரின் கருத்துகளால் பாதிக்கப்பட்டும், பண்படுத்தப்பட்டும் இருக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங் களில் நிலைமை அப்படியில்லை. பொது வுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட அங்கிருக்கின்ற இயக்கங்கள், பெண்ணு ரிமை, பெண் விடுதலை குறித்த செய்தி களை, பிரச்சினைக்குப் பின்னான போராட்டங்களாக மட்டுமே முன் எடுத்துச் சென்றன, செல்கின்றன.

தமிழ் நாட்டில் மட்டும்தான் பெண்விடுதலைச் சிந்தனைகள் ஒரு இயக்கமாகத் தந்தை பெரியாரால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. எனவே முலாயம் சிங், சித்தராமையா போன்றவர்கள், தங்களுடைய அரசியல் எதிரிகள், இப்பிரச்சினையைத் தங்களுக்கு எதிராகக் கையாள்கிறார்கள் என்கின்ற புரிதலின் அடிப்படையிலேயே இவ்வாறாக வெளிப்பட்டு வருகின்றனர். அவர் களுடைய நிலையை நாம் புரிந்து கொள்வது வேறு, அவர்கள் பேசும் பேச்சுக்களை நாம் கண்டிப்பது என்பது வேறு. ஓர் ஆண் என்ற பார்வையோடு மட்டுமே இந்தச் சிக்கலை அணுகு கிறார்கள்.

அவர்களுக்கு எதிர் நிலையில் இருக்கின்ற ஊடகங்களும், அவர்களுக்கு அரசியல் சிக்கலை உண்டுபண்ணு வதற்கான காரணமாக இதை எடுத்துக் கொள்கின்றன. கர்நாடகத்தில் இத்தனை பெரிய போராட்டங்களைச் செய்த பாஜகவினர், மற்ற மாநிலங்களில் அமைதியாக இருப்பது ஏன்? பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்கள் எல்லாம் பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக இருக்கின்றனவா? தமிழ்நாட்டில் நடக்கின்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளை, இங்குள்ள எத்தனை ஊடகங்கள் நேர்மையாகப் பதிவு செய்கின்றன? சமூகத்தைச் சீரழிக்கக் கூடிய சிக்கலில் கூட, இப்படிப்பட்ட பாரபட்சங்கள் இருப்பது விரும்பத்தக்கதாக இல்லை.

4.பாலியல் வன்கொடுமைகள் ஒழிக்கப்பட, நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள், ஆலோசனைகள் என்ன?

பாலின சமத்துவத்தை முதலில் உணர்த்த வேண்டும். அதற்காகக் கல்வி முறையில் பாலினம் குறித்த பாடங்கள் அறிவியல் மற்றும் சமூக அடிப் படையில் வைக்கப்பட வேண்டும். மாற்றுப்பாலினத்தவர் பற்றிய அறிவியல் சார்ந்த புரிதல்களை இன்றைய இளைய தலைமுறை யினரிடம் உருவாக்க வேண்டும். பாலியல் கல்வியோடு இணைந்த பாலினக் கல்வி மனங்களைப் பக்குவப்படுத்தும். எதிர்ப் பாலினம் மீதான பாலியல் ஈர்ப்பு என்பது முறைப்படுத்தப்பட்டு, சம உரிமை, மதிப்பு என்பதாக மாறும். அந்த நிலையில்தான் பாலியல் வன்கொடு மைகள் இல்லாமல் போகும்.

***

dr.shalini 350ஷாலினி

மனநல மருத்துவர்

1. பாலியல் வன்கொடுமைகளுக்கு மது அருந்துவது போன்ற போதைப் பழக்கங்கள்தான் காரணம் என்று பலரும் சொல்லி வருகின்றனர். ஒரு மனநல மருத்துவராக உங்கள் கருத்து என்ன?

இன்றைக்குப் பிள்ளைகளின் முன்னால் எல்லா வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. உலகத்தி லுள்ள அத்தனை நல்லது கெட்டது களும் செல்போன் மூலம் விரல் நுனியில் வந்து விழுகின்றன. வன்முறை களோடு கூடிய ஆபாச தளங்களைப் பார்க்கும் அளவுக்குப் போய் விடுகின்றனர். அவைகளைத் தடுக்கா மல் பிள்ளைகள் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. பாலு ணர்வு என்பதும், உடலுறுப்பு பற்றிய சந்தேகங்களும் 2 வயதிலிருந்தே குழந்தைகளிடம் தோன்றிவிடுகின்றன.

அந்த வயதில், ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பைப் பார்க்கும் பெண் குழந்தைக்கு, ஏன் அவனுக்கு மட்டும் அப்படி இருக்கிறது என்னும் கேள்வி எழுகிறது. அதை வீட்டிலுள்ளவர் களிடம் கேட்கும் போது, குடும்பத் திலுள்ள பெரியவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைப்பதில்லை. பாலுறுப்பு தொடர்பான சொற்களை எல்லாம் கெட்ட வார்த்தைகளாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், ஆண், பெண் இருவருக்குமே பாலியல் உணர்வு-கள் எழுவது இயல்பானதுதான். அந்த வயதில் அவர்களோடு ஆரோக்கிய மான உரையாடலை நடத்த வேண்டும். மனத்தை இப்படி இப்படிக் கையாள வேண்டும் என்று வழிகாட்ட வேண்டும்.

நாங்களும், உங்கள் சிக்கலைத் தீர்க்க எந்தவிதத்திலும் உதவ மாட்டோம், நீங்களும் அது தொடர்பான எந்த  அசைவுகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்றால் அது என்ன நியாயம்? இதுபோன்ற அடக்கி வைக்கப்படுதலால், அவர்கள் பாலுணர்வு குறித்த தவறான புரிதல்களுக்கு ஆளாகி, குற்றவாளிகளாக ஆக நேரிடுகிறது. அடிப்படையில் தவறான அணுகுமுறைகளை வைத்துக் கொண்டு, மதுப் பழக்கத்தை மட்டும் காரணமாகச் சொல்வதில் அர்த்தமில்லை.

2. பாலியல் வன்கொடுமைகள் மீதான சமூக உளவியல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்...

ஒவ்வொரு முறை பாலியல் வன் கொடுமைகள் நடக்கும் போதும், பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளும், குற்றவாளிக்கு என்னமாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்னும் விவாதங்களும்தான் நடந்தபடி இருக்கின்றன. பாலியல் வன்புணர்வு என்பது பெண்களின் உடல் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் & அந்தப் பெண் எதிர்பாராத சூழலில் திடீரென அவளுக்கு நடக்கின்ற ஒரு விபத்து.

இதில் அந்தப் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கப்படுகின்றன. அந்தப் பெண் இருக்கின்ற சமூகச் சூழலின் பொதுப்புத்தியைப் பொறுத்து, இந்த இரண்டிலிருந்தும் காலப்போக்கில் அந்தப் பெண் மீண்டெழுவதும், முடங்கிப் போவதும் நடக்கின்றன. உன்னை ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிலை உருவானால், உன் உயிரை இழந் தாலும் பரவாயில்லை, கற்பை மட்டும் இழந்து விடாதே என்று  சமூகம் போதிக் கிறது. திரைப்படங்களும்கூட அதைத் தான் வலியுறுத்துகின்றன.

அச்சூழலில் தற்கொலை செய்துகொள்வதுதான் தமிழ்ப் பெண்களுக்கான கற்புக் கலாச் சாரம் என்று கற்பிக்கப்படுகிறது. மாறாக, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, எதிராளியைக் கொலை செய்தாலும் குற்றமில்லை என்று சட்டம் சொல்கிறது. நாம் அதைத்தான் நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். இப்படி எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாமல், பெண்ணை மேலும் பாதிப்புக்குள்ளாக்குபவற்றைப் பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் சமூகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

3.இப்படிப் பல்வேறு காரணங்களை உள்ளடக்கியுள்ள இந்தச் சிக்கலுக்கு உங்கள் பார்வையில் சொல்லும் தீர்வு என்ன?

தண்டனைகளால் மட்டும் இப்பிரச் சினை தீர்ந்துவிடப் போவ தில்லை. நான் முதலில் சொன்னதுபோல, வளர்ப்பு முறை இதில் முக்கிய பங்காற் றுகிறது. கை, கால்களைச் சுத்தமாக வைத்திருப்ப தைப் போல, பாலுறுப்புகளையும் சுத்த மாக வைக்க வேண்டும் என்ற ஆரோக் கியப் பாடத்திலிருந்து, வயதுக்கு ஏற்றாற் போல பாலியல் கல்வியை வடிவமைத்து வழங்க வேண்டும். பிள்ளைகளிடம் பாலியல் குறித்துப் பேசுவதற்கு நமக்கு இருக்கும் தயக்கங்களை முதலில் உதறித்தள்ள வேண்டும்.

****

advocate-senthilnadhan 350சிகரம் செந்தில்நாதன்

வழக்கறிஞர்

1. பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக, இளம் குற்றவாளிகளுக்கான தண்டனை வயது வரம்பை 18இல் இருந்து 16ஆகக் குறைக்க ஆலோசித்து வருவதாக பா.ஜ.கட்சி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு, சம்மத பாலுறவுக்கான சட்டப்படியான வயது வரம்பை 16இல் இருந்து 18ஆக உயர்த்திச் சட்டம் இயற்றியது. இதுபோன்ற நடவடிக் கைகளால் பாலியல் வன்கொடுமைகள் குறைய வாய்ப்பிருக்கிறதா?

பாலியல் வன்கொடுமை என்பது சட்டம் சார்ந்தது மட்டும் அன்று. அது சமூகம் சார்ந்த பிரச்சினையும் கூட. எனவே பாலியல் குற்றங்களை இந்த இரண்டு தளங்களிலும் வைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றை ஒதுக்கிவிட்டு, இன்னொன்றை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியாது. 20 & 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோ மென்றால், தனி நபர் பாலியல் குற்றங்கள் தான் அதிகமாக நடந்தன. ஆனால் இப்போது, கூட்டு வன்புணர்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

அதுபோன்ற நிகழ்வுகள் போர்ச் சூழல் களில் வேண்டுமானால் நடந்ததுண்டு. அதற்கு நம்முடைய ஈழத்தில் நடந்த கொடூரத்தையே சான்றாகக் கொள்ள லாம். இப்போது பெண்கள் அதிக அளவில் வேலைக்குப் போகின்றனர்.

தனியாகவோ, வேலை பார்க்கின்ற இடத்திலுள்ள நண்பர்களோடு சேர்ந்தோ இரவு வேலைக்கும் போக வேண்டியி ருக்கிறது. இது காலத்தின் மாற்றம். இந்தச் சமூக மாற்றத்தைப் புரிந்து கொள்ளாததே, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம்.

தண்டனைகளைக் கடுமையாக்குவதிலோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதிலோ நமக்குக் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் சட்டமும், அது தரும் தண்டனையும் மட்டுமே இதற்கான தீர்வென்று சொல்ல முடியாது. காரணம், 16க்கும் 18க்கும் இடையில் பெரிய வேறுபாடு கிடையாது. பெண்ணை மதிப்பது, பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது போன்ற சமூக விழுமியங்களைக் குழந்தையாக இருக்கும் போதே மனத்தில் பதிய வைக்க வேண்டும்.

பாலியல் கல்வி யைப் பள்ளிகளில் வழங்க வேண்டும். பெண்களும்,  தாங்கள் பணியாற்றுகின்ற இடத்தின் சுற்றுப்புறம் குறித்து விழிப்பு ணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல், சட்டங் களில் திருத்தம் கொண்டுவருவதால் மட்டும் பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு வந்து விடாது.

2. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சில நேரங்களில் இழப்பீடு வழங்கப்படுகிறதே. அது சரியானதா?

மேலோட்டமாகப் பார்த்தால், இதுபோன்ற வழக்குகளில், இழப்பீடு வழங்குவது அந்தப் பெண்ணைக் கொச் சைப்படுத்தும் செயலாகத் தோன்றும். ஆனால் அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. காரணம், அதற்குப்பிறகும் அந்தப் பெண்ணுக்கான வாழ்க்கை மிச்சமிருக்கிறது. உணவு, உடை, இருப் பிடம் என  உயிர் வாழ்வதற்கான அடிப் படை தேவைகள் அந்தப் பெண்ணுக்கு வேண்டியிருக்கிறது. ஒரு விபத்துக்குப் பிறகு உயிர்வாழ்வதில்லையா? அப்ப டித்தான் இதுவும்.

குற்றவாளியைத் தண்டிப்பது எப்படி முக்கியமான சட்ட நடவடிக்கையோ, அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதும் அரசின் கடமை. அரசு வேலை வாய்ப்பு, இலவச மேற்படிப்பு, தொழில் தொடங்கப் பொருளுதவி & இப்படி ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நவகாளி யாத்திரையின் போது, காந்தியும் இதைத்தான் சொன்னார்.