thirumavalan 600கோட்டையில் கொடியேற்றும் போதெல்லாம் ஊடகங்களில் முன் னிலை பெறுவதுபோல ஏதேனும் ஒன்றைச் சொல்வது முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கம். 1991இல் முதன்முறையாகக் கொடியேற்றியபோது, “கச்சத்தீவை மீட்பேன்” என்றவர் அவர். நாளிதழ்களில் அப்போது அதுதான் தலைப்புச் செய்தி. அதன்பின், கச்சத்தீவில் இலங்கைக்கான உரிமை குறித்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டவரும் அவர்தான். ஈழப்பிரச்சினை,- காவிரி பிரச்சினை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் தனக்குச் சாதகமாக, தான் சொல்வதே வேதம் என்பது வேதா நிலையத்துவாசியின் நிலைப்பாடு.

இந்த (2014) ஆண்டு இந்திய விடுதலைநாளில் (ஆகஸ்ட் 15) சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றியபோது குறிப்பிட்டதில் முக்கியமானது, “சுதந்திரத்தின் பயனைத் தமிழக மக்கள் அனைவரும் பெறுவதை எனது அரசு உறுதி செய்துள்ளது” என்பதாகும்.

வழக்கம்போல இதுவும் ஊடகங்களில் முன்னிலை பெற்ற செய்தியாகும். அதாவது, முந்தைய கலைஞர் ஆட்சியில் மக்கள் சுதந்திரத்தின் பயனைப் பெற்று வாழ முடியவில்லை என்கிற தொனி இந்த வார்த்தைகளுக்குள் இருக்கிறது. விடுதலை நாளிலும், குடியரசு நாளிலும் மாநில ஆளுநர்கள் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் கொடியேற்றும் உரிமை பெற்றிருந்த நிலைக்கு மாறாக, எப்படி இந்திய விடுதலைநாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுகிறாரோ, அதுபோல அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களே தலைமைச் செயலகத்தில் கொடியேற்றும் உரிமை வேண்டும் என்பதை, இந்திய விடுதலை வெள்ளிவிழாவையட்டி வலியுறுத்தி அந்த உரிமையைத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பெற்றுத் தந்தவரே கலைஞர்தான்.

அவர் வாங்கித் தந்த உரிமையின்படி கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றிய இன்றைய முதல்வர் ஜெயலலிதாதான், சுதந்தர உரிமை பற்றிப் பேசியிருக்கிறார். சிலநேரங்களில், காலத்தின் கோலம் விசித்திரமாக இருக்கும்.

இன்றைய ஆட்சியில் மக்கள் சுதந்திரத்தின் பயனை அனுபவிக்கி றார்கள் என்று செல்வி ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்த அதேவேளை யில், உண்மை சுதந்திரமும் ஜனநாயகமும் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் எப்படியிருக்கிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

சுதந்திரத்தின் பயனைப் பற்றி முதல மைச்சர் பேசிய இரண்டாவது நாள் (ஆகஸ்ட் 17), சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. வணிகமய மாகி, லாபநோக்கத்தில் செயல்பட்டுத் தாய்மொழிக்கல்வியை அழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அதனை ஆதரிக்கும் அரசின் கல்விக் கொள்கை களுக்கும் எதிரான இந்த மாநாட்டிற்கு, அனுமதி மறுத்தது மாநில அரசு. இதனையடுத்து, உயர்நீதிமன்றம் சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெற்றபிறகும், மாநாடு நடைபெறும் நாளில் சேலத்தில் 144 தடையுத்தரவு போட்டது காவல்துறை.

மீண்டும் நீதிமன்றப்படிகளில் ஏறி, விடுமுறை நாளான ஞாயிறன்று, சட்டப் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தின் உத்தரவின்மூலம் 144 தடையுத்தரவைத் தகர்த்தனர் தோழர் திருமாவளவனும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும். அதன்பிறகும்கூட வாகனங்களை அனுமதிக்காமல் இடையூறு செய்தும் கடைகளை மூடச்சொல்லியும் கல்வி உரிமை மாநாட்டிற்கு எதிராகத் தனது கடமையுணர்ச்சியைக் காட்டியிருக்கிறது காவல்துறை. சுதந்திரம் பற்றி முதலமைச் சர் ஜெயலலிதா பேசிய நிலையில்தான் சேலத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. ஒருவேளை சேலம் என்பது ஜெயலலிதாவின் ஆளுகைக்குள் உள்ள தமிழகத்தில் அடங்கியிருக்கவில்லை போலும்.

2012ஆம் ஆண்டில் சென்னை யில் நடந்த டெசோ மாநாட்டின் போது ‘ஈழத்தாயின்’ காவல்துறை எத்தனை -ஜனநாயகத் தன்மையோடு நடந்து கொண்டது என்பதை நாடறியும். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் தொடர்பாகவும் இதே அணுகு முறைதான். மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் தங்கள் உரிமைகளுக் காகக் குரல் கொடுத்தபோது, காவல்துறை எத்தனை கருணையோடு நடந்துகொண்டது என்பதையும் மக்கள் பார்க்கத்தான் செய்தார்கள்.

சுதந்திர ஜனநாயக நாட்டில் அடிப்படையானது கருத்துரிமை. ஆனால், ஊடகங்களுக்குக்கூட அந்த உரிமை இந்த மாநிலத்தில் இல்லை. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்துச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீதெல்லாம் அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன.

அதுபோல மேடையில் பேசிய அரசியல் பிரமுகர்கள் மீதும் இதேபோன்ற வழக்குகள் அச்சுறுத்து கின்றன. அரசு போட்டிருக்கும் அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலே. அடிப்படை உரிமையான கருத்துரிமையே இல்லாமல், அறிவிக்கப் படாத எமர்ஜென்சி நிலவுகிற மாநிலத் தில்தான் மக்கள் சுதந்திரத்தின் பயனை அனுபவித்து வாழ்கிறார்கள் என்று பேசியிருக்கிறார் முதலமைச்சர்.

மக்களின் சுதந்திரம் இருக்கட்டும், அவரது அமைச்சரவையில் இருக்கின்ற மந்திரிபிரதானிகளிடம் கேட்டால் சொல்வார்கள், எத்தனை சுதந்திரத்தோடு இருக்கிறோம் என்கிற உண்மை நிலவரத்தை!