2012ஆம் ஆண்டில் அன்றைய மத்திய தலைமைக் கணக்காயர் (சிஏஜி) வினோத்ராய் அளித்த அறிக்கையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். பொதுவாக இதை நிலக்கரிச் சுரங்க ஊழல் என்பார்கள்.

1993ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையிலும் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பாக 36 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இத் தேர்வுக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, என்றாலும் அது வெளிப்படையாக இல்லை.

நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், சில நிறுவனங்கள் சுரங்கத் தொழிலைப் பல ஆண்டுகள் தொடங்காமல் கிடப்பில் போட்டு வைத்ததாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது.

1993 தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையும் 30க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் தனியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் தனியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க. ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியில் இது தொடர்கதையாகவே இருந்துள்ளன.

இது குறித்து மன்மோகன் சிங் ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழும்போது எல்லாம், பா.ஜ.க உறுப்பினர்கள் அவையில் குழப்பம் விளைவித்து, அவையை முடக்கி விடுவார்கள்.

2012ஆம் ஆண்டு எம்.எல்.சர்மா, காமன் கேஸ் என்ற தொண்டு அமைப்புக் கொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மதன் பி. லோகூர், ஜோசப் குரியன் ஆகியோரின் அமர்வு 25.08.14 அன்று வழங்கிய தீர்ப்பில், 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று தீர்ப்புக் கூறியிருக்கிறது.

சுரங்க ஒதுக்கீடுக்கான தேர்வுக்குழு, முறையாக ஆய்ந்து அறியாமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு நிலைகளில் விதிமுறைகளை மீறி, ஒழுங்குமுறை இல்லாமல், ஒருதலைப்பட்டசமாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கடுமையாகக் கூறியிருக்கிறது.

இதனால் நாட்டுமக்கள் நலன் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், நாட்டின் வளம் தவறாகவும் கையாளப்பட்டுள்ளதாகத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி. இரண்டும் ஊழலில் ஊறிப்போன கட்சிகள்தாம்.

நாட்டையும் மக்களையும் பாதிக்கும் ஊழல்கள் குறித்து இந்தக் கட்சிகள் கவலைப்படுவதில்லை.

வாஜ்பேயி காலம் தொடங்கி, மன்மோகன் சிங் காலம் வரையும் நடந்த ஊழல்களில், நிலக்கரிச் சுரங்க ஊழல், ஒரு மாபெரும் ஊழல்.

ஊழல் பேர்வழிகள் முறையான, சரியான விசாரணையில் அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

நீதிமன்றம் அதைச் செய்ய வேண்டும் என்பது நாட்டுமக்களின் எதிர்பார்ப்பு.