இந்திய ஒன்றியத்தில் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள், வெவ்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்கள் இணைந்து வாழ்கிறார்கள். இதைப் பன்மையில் ஒற்றுமை என்று கூறலாம். இதைப் பா.ஜ.க அரசு விரும்பவில்லை.

பா.ஜ.க வின் நட்டா, சமஸ்கிருதமே பழைமையான மொழி. அங்கிருந்துதான் வரலாறு தொடங்க வேண்டும் என்கிறார். கீழடி உள்ளிட்டத் தமிழக ஆய்வுக் களம் அவரை உலுக்கி விட்டது.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்கள் இந்தியில் பேச வேண்டும் என்கிறார்.

அண்மையில் இரயில்வே பணித் தேர்வில் உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் இந்தியில் தேர்வு எழுதிய வட நாட்டவர்கள் தெற்கு இரயில்வேயின் தமிழ்நாட்டில் பணிக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். அதே சமயம் தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இரயில்வே நிர்வாகம்.

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல இருக்கிறது இந்தச் செயல்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய, துறை அமைச்சரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றுளார். இது போன்ற போக்குகளை ஒன்றிய அரசிடம் தொடர்ந்து பார்க்க முடிகிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு, பக்ரித் “அவர்கள் “ பண்டிகை, விநாயகர் “நமது “ பண்டிகை என்று பள்ளிப் பாடங்களில் சொல்வதன் மூலம் மக்களின் ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை என்பதில் அக்கரையிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று சொல்வது பன்மைத்துவத்திற்கு எதிரானது. இது ஆர்.எஸ்.எஸ் இன் “ஏக இந்தியா” என்ற இலக்கை நோக்கி வலிந்து நகர்த்துவதாகத் தெரிகிறது.

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி”

என்ற இத் திருக்குறளை மோடிக்கு யாராவது எடுத்துச் சொன்னால், நன்று!

- கருஞ்சட்டைத் தமிழர்