இரண்டு வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சிறிய அதிர்வலையை ஏற்படுத்திய பாடலில் வரும் வரிகள் இவை. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில் படத்தில் இல்லை. பரியேறும் பெருமாள் பதில் சொல்ல விரும்பவில்லை. மாறாக இக்கேள்விகளே அவன் வாழ்க்கை. இக்கேள்விகளே இத்திரைப்படம்.

pariyerum perumalகதாநாயகனின் பெயர் பரியேறும் பெருமாள். படத்தில் எட்டு முக்கியக் கதாபாத்திரங்கள். பரியன், அவனது செல்லநாய் கருப்பி, பரியனின் காதலி ஜோ, ஜோவின் தந்தை, பரியனின் நண்பன் ஆனந்த், அவன் தந்தை, ஒரு பேராசிரியர் மற்றும் ஒரு கிழவர். சமூகத்தின் நல்லது தீயது என உலவும் அத்தனை உணர்வுகளையும் இந்தக் கதாபாத்திரங்களின் வழி கடத்துகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

கருப்பியைக் காதலிக்க ஆயிரம் காரணங்கள் இருப்பினும், நீல நிறப் பூச்சு பூசி தண்டவாளத்தில் தன் பரியனைத் தேடி வரும் கருப்பியை எத்தனை ரயில்கள் வந்தாலும் அழிக்க முடியாது. தன் குடும்பத்தில் ஒருத்தியான அவனது நாயைச் சாதியம்

கொன்று பசியாற, நாயைப் பறிகொடுத்த நாயகனோ, தானும் இரையாகப் போவதை அறியாமல் கல்லூரியில் சேர்கிறான்.

"அம்பேத்கர் ஆகனும்'னு சொல்றான், சீக்கிரம் பிரச்சனை பண்ணுவான்", "கோட்டா'ல வந்த கோழிக்குஞ்சு", போன்ற வசனங்கள் மனிதர்களின் உள்ளத்தில் தோய்ந்திருக்கும் சாதிய வன்மங்களை வெளிப்படுத்துகின்றன. சாதியத்தின் வன்மத்தைப் பாதுகாத்து வருவது குடும்பம் எனும் அமைப்புதான் என்பதற்கு இன்னொரு சான்று ஜோவின் குடும்பம். தன் சொத்தை, சாதியை, அதிகாரத்தைத் தன் வசம் வைத்துக்கொள்ளப் பாசம், அன்பு என்ற போர்வையை அணிந்து கொள்கிறது இந்தக் குடும்ப அமைப்பு. இயற்கையான காதலை எதிர்க்கக் குடும்ப நிறுவனத்தை முன்னிறுத்தும் சூட்சுமம் தான் அதிகார வர்க்கத்தின் வெற்றி.

பரியனின் தோழன் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவனாகக் காட்டப் பட்டிருப்பினும், அவனது செயல்பாடு இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

சட்டக் கல்லூரியில் படிக்கும் பரியனுக்கு இரண்டு பேராசிரியர்களுடனான உரையாடல் நடைபெறுகிறது. தன் மேஜையில் காந்தி புகைப்படம் வைத்துள்ள ஒருவர். அம்பேத்கர் படம் வைத்துள்ள ஒருவர். இருவருக்குமே பரியன் சட்டம் பயில வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. ஆனால் ஒருவர் பரியனைப் பரிதாபக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார். மற்றொருவரோ கோழையாகத் தூக்கில் தொங்கும் பரியனை விடப் போரிட்டுச் சாகும் பரியன்களை ஊக்குவிக்கிறார். சாதியக் கேள்வியில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த முரண்களை இரண்டே காட்சிகள் மூலம் இவ்வாறாகத் தெளிவுபடுத்துவது இயக்குநரின் வெற்றி.

 பரியனின் தந்தையாகத் தோன்றும் பெரியவர் , நடிப்பின் உச்சம். சமூகத்தின் விளிம்புநிலை மக்களை முக்கியக் கதாபாத்திரமாக நிறுவியிருக்கும் இயக்குநர் நம் நெஞ்சில் நிறைகிறார். நிர்வாணமாக ஓடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் காட்சியில் இந்தச் சாதியச் சமூகத்தால் கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் நாமும் நிர்வாணமாக நிற்கிறோம்.

ஒரு நாய், இரண்டு தேநீர் கோப்பைகள், பல கேள்விகள் எனப் படம் பார்த்து வெளியே வரும் நம்மை ‘‘உரையாடுங்கள், உரையாடுங்கள்’’ எனத் தன் பாணியில் கேட்டுக் கொள்கிறான் பரியன் எனும் போராளி.

ஹரி தாதாக்களுக்குக் காலா அவசியம். ஜோவின் தந்தைகளுக்குப் பரியன்கள் அவசியம். தமிழ்த் திரையில் பரியேறும் பெருமாள் ஒரு முக்கியத் தொடக்கம். மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் பாராட்டுகள். இந்த உரையாடலைச் சாத்தியப்படுத்திய பா.ரஞ்சித்திற்குப் பாராட்டுடன் கூடிய நன்றிகள். உரையாடுவோம்!