இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இணைக்கப்பட்டவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்.

இக்கொலை வழக்கில், சிறப்புக் கண்காணிப்புக் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவர்களைக் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்து, மரணதண்டனை விதித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து நெடிய போராட்டத்தை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், புலனாய்வு அமைப்பின் விசாணை நிறைவுதராததால், மறுவிசார ணை தேவை என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்துள் ளார் பேரறிவாளன்.

சிறப்புக் கண்காணிப்புக் குழுவின் விசாரணை முறையாக நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றால் இச்சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிவரும். பெயர் குறிப்பிடப்படாத சில அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. அதனால் விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை.

குற்றம் சாட்டப்பட்டு ஆனால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்களைச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேரறிவாளன் தன் மனுவில் கூறியு-ள்ள கோரிக்கைகள் நியாயமானவைகள்.

இவ்வழக்கு முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி என்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது புலனாய்வு அமைப்பு பதில்மனு தாக்கல் செய்தது. அதில் ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்க, சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை 1998இல் அமைக்கப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடையவர்களைக் கண்காணித்தும், விசாரித்தும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையை முறையாக முடிக்கவில்லை என்பதை சி.பி.ஐ. ஒப்புக் கொண்டுள்ளது. குறிப்பாக ஜெயின் கமிஷன் சந்தேகத்திற்குரியவர்கள் என்று சுட்டிக்காட்டிய சுப்பிரமணியசாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்படவில்லை.

பேரறிவாளன் கோரிக்கையில் அரசு அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் வருகிறார்கள். குற்றப்புலனாய்வு அமைப்பின் பதில் மனுவின் மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. அதாவது ராஜீவ் கொலைக் குற்ற வழக்கின் விசாணை முழுமையாக முடிக்கப்படவில்லை, விசாரணை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தொடர்புடையவர்கள் இன்னமும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விசாரணையே முடியாமல் தண்டனை வழங்கியது என்ன நீதி? சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அதுவே கேள்விக்குரியதாக மாறிவிடக் கூடாது.

***

ஒரு நூலகம் மறைந்துவிட்டது

நாமக்கல் நா.பா.இராமசாமி அய்யா அவர்கள் சென்ற மாத இறுதியில் இறந்துவிட்ட செய்தி, ஒவ்வொரு தமிழ் உணர்வாளரின் நெஞ்சிலும் மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்தவர் தனி மனிதரில்லை, அவரே ஒரு நூலகம் என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். ஏறத்தாழ 35 ஆயிரம் நூல்களை வாங்கிப் பாதுகாத்த பெருமகன் அவர். அவர் வீடு முழுவதும் நூல்கள்தான். அனைத்தும் அரிய நூல்கள். எங்கும் கிடைக்காத, ஒரு நூற்றாண்டுக்கு முந்திய நூல்கள் பல அவர் வீட்டில் இருக்கின்றன.

உடல்நலமில்லாமல் இருந்த நேரத்திலும் கூட, நூல்களைப் பற்றியே கூடுதலாக அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எல்லா நூல்களையும் ஈழத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தோடும் அவர் இருந்தார். பழகுதற்கு இனிய அப்பெருமகனாரின் நினைவுகள் நம் நெஞ்சை வாட்டுகின்றன. அவர் குடும்பத்தினரோடு இணைந்து நாமும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வோம்.

Pin It