யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்களுடைய ஒரு சுற்றறிக்கை எல்லா ஆளுநர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தச் சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாள், அரசமைப்புச் சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட நாள் என்பதனை ‘இந்தியா - ஜனநாயகத்தின் தாய்’ என்ற ஒரு தலைப்பில் கொண்டாடப்பட வேண்டும் என்றும், அதற்கான சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அனைத்து மாநிலங்களிலும் இல்லை. ஆளுநரை வைத்துக் கொண்டு மாநிலத்தின் கல்வி உரிமைகளில் தலையிடுவது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு கல்வி வளாகத்திலும் இந்தக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று சொல்வது அத்துமீறிய செயல். யுஜிசியினுடைய பணி அது அல்ல. யுஜிசி, ஒரு பாசிசச் செயல் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் பல சிறப்புக் கூறுகளை விளக்குவதற்கு முயற்சி எடுங்கள் என்று சொன்னால் அதற்குப் பொருள் இருக்கிறது. ஆனால் இந்த நாளை, பழைமையை மீட்டுருவாக்கம் செய்வதற்காக, பழைமையைப் போற்றுகின்ற நாளாக இவர் வைத்திருக்கின்றார். 18 தலைப்புகளை இவர் கொடுத்து இருக்கின்றார். இந்தத் தலைப்புகளின் மீது உரைகள் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுகின்றார்.18 தலைப்புகளும், நாம் வெறுக்கின்ற பழையகாலத்து அமைப்புகளின் நிகழ்வுகளைச் சிறப்பிக்கும் முறையில் அமைந்திருக்கின்றன. இந்தத் தலைப்புகள் குறித்த விமர்சனப் பார்வைகள் வரக்கூடாது என்பதற்காக, இவர் இதைப்பற்றி பேசுகின்றவர்கள், ICHR வெளியிட்டுள்ள, “இந்தியா - ஜனநாயகத்தின் தாய்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உரைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது எப்படி கல்வி சுதந்திரம் ஆகும்?

ஹரப்பாவில் ஜனநாயக நிறுவனங்கள் உலகிலேயே முதலாவது தோன்றுகின்றன என்பதாக, ஹரப்பாவை வேத காலத்திற்குக் கொண்டு வந்து, அந்த வேதத்தில் இருக்கிற சில நிறுவனங்களை, சபா சமிதி போன்றவற்றை ஜனநாயக நிறுவனங்கள் என்று இவர்களே விளக்கம் தந்து, அது ஹரப்பா-சிந்துவெளி நாகரீகத்தில் ஆரியர்களால் கொண்டுவரப்பட்டதாகச் சித்தரிக்கும் ஒரு முயற்சி நடக்கிறது. இதைத் தவிர இவர்கள் கட்டப்பஞ்சாயத்து என்று நாம் அருவருப்பாகப் பார்க்கின்ற காப் பஞ்சாயத்து என்பதை ஜனநாயகத்தின் ஒரு மரபு என்று கூறுகின்றார்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படையே ‘Rule of Law’ என்பதுதான். சட்டத்தின்முன் அனைவரும் சமம், அதே சட்டம் அனைவருக்கும் பொருந்தும், இதை மீறி யாரும் இருக்க முடியாது என்ற மூன்று அடிப்படையைக் கொண்ட சட்டத்தின் ஆட்சி. இந்தச் சட்டத்தின் ஆட்சியை மறுக்கின்ற தலைப்புகளைக் கொடுத்து, அதைப் பற்றி உரை நிகழ்த்த வேண்டும், அதை இந்தியாவின் பெருமை என்று கூற வேண்டும் என்று கூறியிருக்கின்றார். கட்டப்பஞ்சாயத்து என்பது இந்தியாவில் ஜாதிப் பஞ்சாயத்துகள். ஆதிக்க ஜாதிகள் நடத்துகின்ற நீதிமன்றங்கள் என்று சொல்லப்படுகின்ற அநீதிமன்றங்களைப் புகழ்கின்ற வகையில் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் இருந்த ‘Local self government’ - மகாசபையைக் குறிப்பிடுகிறார்கள். மகாசபை என்பது, பிராமணர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட பேரரசுகள் கூட தலையிட முடியாத பிரம்மதேயங்கள் இருந்ததைச் சுட்டிக் காட்டுபவை. அந்தச் சலுகை பிற சமூகப் பிரிவினர்களுக்குத் தரப்படுவதில்லை. பிராமண ஆதிக்கத்திற்கான ஏகபோகத்திற்கான அந்த ஆட்சி முறையை ஜனநாயக முறை என்று குறிப்பிடுகிறார்கள். ஜனநாயகம் என்பதின் பொருளைக் கூட இவர்கள் திரிக்கின்றார்கள். ஜனநாயகம் என்றால் அனைவருக்குமானது, அனைவருக்கும் சமத்துவத்தை அளிப்பது, அனைத்து மக்களையும் சமமாக ஏற்றுக் கொள்வது. நான்கு வர்ணங்களைக் கூறுகின்ற அந்தப் பழைய காலம், ஐந்தாவது வர்ணத்தையும் உருவாக்கிய அந்தக் காலத்தை, எப்படிச் சமத்துவ காலம் என்பது? ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அமைப்பு என்றால் அது எப்படி ஜனநாயக அமைப்பாகும்? ‘Mobocracy’ என்ற கும்பல் ஆட்சியை, ஜனநாயகம் என்று கூறிவிட முடியாது. வெறியூட்டப்பட்ட கும்பல்கள், பிற கும்பல்களை அடக்குவதை ஜனநாயகம் என்று கூற முடியாது.

ஆகவே நவம்பர் 26 என்பதை இந்திய அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின் ஆட்சி, ‘secular’ மதச்சார்பற்ற ஆட்சி, கூட்டாட்சி, குடியாட்சி, ஜனநாயகம் என்பதைச் சிறப்பிக்கும் நிகழ்வை நடத்துவதற்குப் பதிலாக, அவற்றைக் குழி தோண்டிப் புதைப்பதற்காகவே, இவர்கள் அவற்றிற்கு முரண்பட்டத் தலைப்புகளைத் தந்து இந்த நிகழ்வுகளை நடத்தச் சொல்லுகிறார்கள். இந்தப் பாசிசத் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு, இப்போது ஆளுநர்களைத் தூண்டிவிடுகிறார் யுஜிசியின் தலைவர் ஜெகதீஷ் குமார் என்பவர்.

பிஜேபி அரசாங்கம் ஒவ்வொரு நிறுவனத்தையும் தன்னுடைய கம்யூனல் அஜெண்டாவிற்காகத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே அனைவருக்குமான பொது தேசிய வரலாற்றுப் பாடப் புத்தகங்களைத் தந்தார்கள். நம்மைப் போன்றவர்கள் எதிர்த்தோம். ஆனால் கல்வியாளர்களோ, கல்வி உலகமோ,

அரசியல் உலகமோ போதுமான எதிர்ப்பைக் காண்பிக்கவில்லை. அதனால் அவர்கள் துணிச்சல் பெற்று, இப்பொழுது அரசியலமைப்புச் சட்ட நாளை, சமத்துவத்தைக் கொண்டாட வேண்டிய நாளை, ஜாதியப் படிநிலை சமுதாய அமைப்பைக் கொண்டாடும் வகையில் தலைப்புகளைத் தந்துள்ளார்கள். இதை நாம் வன்மையாகக் கண்டித்தாக வேண்டும்.

- பேராசிரியர் கருணானந்தன்