சோறுபடுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிதெறல் அறியா வாழ்வே வாழ்வு
போரின் வெம்மையும் சுரண்டலின் கொடுமையும்
பாரினில் உழைப்பவர் மகிழ்வையும் அன்றி
ஆள்பவர் அமைதியை அழிக்கவுஞ் செய்யும்
மகிழ்வும் அமைதியும் இழந்த பின்னும்
தகிக்கும் வாழ்வு நிலைப்பட் டதுவே
சந்தையின் துரத்தலில் தேரும் தொழிலால்
செந்தணல் வேகுது புவிமீ தினிலே
பண்பின்றித் தொடரும் ஆளும் வர்க்கமே
மண்ணும் உண்ணக் கிடைக்காது போகுமே
 
(சோறாக்கும் நெருப்புடனே, செஞ் ஞாயிற்றின் வெம்மையும் அன்றி, போர், வறுமை முதலிய வெம்மைகளை அறியாமல் வாழ்வதே நல்ல வாழ்வாகும். போரின் வெம்மையும் சுரண்டலின் கொடுமையும், உலகில் உள்ள உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியை மட்டுமன்றி ஆள்பவர்களின் (மன) அமைதியையும் அழிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இழந்த பின்னர் கொடுமையாக இருப்பினும் வாழ்வு என ஒன்று நிலையாக இருக்கவே செய்தது. (ஆனால்) சந்தைப் பொருளாதாரத்தின் வழிகாட்டுதலில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்களால் இப்புவியில் வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. (இந்நிலையை மாற்றி புவியைக் காப்பதற்காக, சந்தைப் பொருளாதார உற்பத்தி முறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற) பண்பு இல்லாமல் (சந்தைப் பொருளாதார வழியிலேயே) தொடர்ந்து செல்லும் ஆளும் வர்க்கமே! (இனி) உண்பதற்கு மண்ணும் கிடைக்காமல் போய்விடும் (அதாவது வாழ்க்கை என்பதே யாருக்கும் இல்லாமல் போய்விடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்).
 
- இராமியா

Pin It