அக்கதைச் சொன்ன தைப்போல்
அரக்கர்கோன் அவளைத் தூக்கி
மிக்கவான் வெளியே செல்ல
மீள்வகை அறியாச் சீதை
அக்கணம் ஆடை எல்லாம்
அணங்கவள் வீசி னாளாம்!
திக்கறிந் தவளை மீட்கத்
திருமகன் வருகைக் காக!

கற்பனை மலைமே லேறிக்
காட்டிய கற்புக் காட்சி
அற்புதம் என்பார் கொஞ்சம்
ஆய்ந்தறிந் தெண்ணிப் பார்க்க!
நற்றமிழ்ச் செஞ்சொல் லாடை
நாமவிழ்த் தெறிந்தா லந்தக்
குற்றமும் சீதை செய்த
குற்றமென் றாகு மன்றோ?

நாளெலாம் தமிழ்ச்சொல் நீக்கி
நாடகம் கவிதை காதை
ஆளலாம் பிறச்சொல் லென்றால்
அழிவதெம் தமிழ்தா னன்றோ?
மீளலாம் பிறசொற் சேர்த்து
மிளிரலாம் என்பார்க் கொன்று
ஏலலாம் எளிமை மற்றோர்
இரவலை நீக்கிப் போக்கி

தனித்தியங் கிடுமோர் ஆற்றல்
தாங்கினாள்! பல்லாய் வாளர்
கனித்தமிழ் மூத்த தென்றுங்
கழறினார்! கண்டம் ஏழில்
இனித்தசெந் தமிழ்ச்சொல் எங்கும்
இருக்குதென் றியம்பி னார்கள்!
அணித்தமிழ் அறிவைக் கொஞ்சம்
அறிந்தபின் எழுத லாமே!

வரம்பிலாப் புளுகைக் கொட்டி
வடித்தவால் மீகிப் பாட்டில்
அறம்பல அடுக்கிச் சொல்லி
அருந்தமிழ்ப் பண்பை நாட்டித்
திறம்பல வுடைய கம்பன்
தீட்டிய தேன்சொற் பாப்போல்
உரம்பல இட்டுத் தூய
ஒளிர்தமிழ் உயர்வைக் காப்போம்!

- பாத்தென்றல். முருகடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It