rajini 220பாஜகதான் பலசாலி என்று ரஜினி சொல்வது குறித்து நமக்கு எந்தக் கவலையும் இல்லை. அது அவர் கருத்து. அதனை வெளியிடுவது அவர் விருப்பம், உரிமை. ஆனால், அவர் நேர்காணல் குறித்துப் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை "தன்னிலை விளக்கம்" அளித்திருப்பதுதான் இதுவரையில் நாம் காணாத புதிய அதிசயம்!

ஒருவர் அளித்த நேர்காணல் குறித்துப் பிற தலைவர்கள் கருத்து சொல்வது இயற்கைதான். அது சரி, தவறு, தெளிவாக இல்லை, கருத்து சொல்ல விரும்பவில்லை என்பன போன்ற விமர்சனங்கள்தாம் வெளிவரும். ஆனால் முதன்முதலாக, "அவர் சரியாகக் கேள்விகளை உள்வாங்கவில்லை. வேண்டுமானால், மறுபடியும் போய்க் கேட்டுப்பாருங்கள், சரியாகச் சொல்வார்" என்றார்  தமிழிசை.

அடுத்த நாள் மறுபடியும் ரஜினி பேட்டி கொடுத்தார். நேற்று தெரியாத செய்திகள் எல்லாம் இன்று அவருக்குத் தெரிந்தன. நேற்று சொன்ன விடைகளுக்கு இன்று புதிய பொழிப்புரைகளைத் தந்தார்.  ஆபத்தான கட்சி என்றால், எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்று பொருள் உரைத்தார். (எந்த ஒரு கட்சியும் அதன் எதிர்க்கட்சிக்கு ஆபத்தான கட்சிதானே)

அடிக்கடி நேர்காணலுக்கு ஒப்புக் கொள்கிறவர் இல்லை ரஜினி என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் அன்று தமிழிசை சொன்னது மாதிரி அடுத்த நாளே ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார். தமிழிசை சொன்னது போலவே, அவர்களுக்குப் பிடித்த  மாதிரி விடை சொல்கிறார்.

இரண்டாவது நாள் எல்லா வினாக்களையும் ரஜினி சரியாக  உள்வாங்கி விட்டாரா அல்லது ரஜினியைப் பாஜக உள்வாங்கி விட்டதா! 

அடுத்த நேர்காணலில் சொல்லுங்கள் ரஜினி!!