இந்தியா முழுவதும் 14 லட்சம் பள்ளிகளும், 40 ஆயிரம் கல்லூரிகளும், 800 பல்கலைக் கழகங்களும் உள்ளன. இவற்றில் சுமார் 30 கோடிப் பேர் பயின்று வருகின்றனர். இந்தியக் கல்வித் துறையின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பு ரூ. 7 லட்சம் கோடி என்று அண்மைக்காலப் புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தியாவின் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் "புதிய தேசியக் கல்விக் கொள்கையை" உருவாக்கிட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது வரைவு அறிக்கையை 15.12.2018 அன்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடம் அளித்தது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வரைவு அறிக்கை வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பின் வரைவு அறிக்கை 31.05.2019 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களால் வெளியிடப்பட்டது.

brahmin childrenதேசத்தின் எதிர்காலக் கல்வி முறையைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக விளங்கப் போகும் இந்த வரைவு அறிக்கை அச்சு, மின்னணு, ப்ரெய்லி மற்றும் ஒலி (Audio book) வடிவங்களில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் (இயலாவிடில் குறைந்த பட்சம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலாவது) வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் மின்னணு வடிவில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது.

கல்வியாளர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இந்த அறிக்கையின் சுருக்கம் மட்டும் இந்திய மொழிகள் பலவற்றில் அரசால் வெளியிடப்பட்டது. முதலில் இந்த அறிக்கை மீது கருத்துகளைப் பதிவு செய்யக் குறைந்த கால அவகாசம் மட்டுமே வழங்கிய அரசு, பல்வேறு விமர்சனங்களுக்குப் பிறகு 15.08.2019 வரை அவகாசத்தை நீட்டித்தது. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வி:

உலகின் சிறந்த பள்ளிக் கல்வித் திட்டமாக "பின்லாந்து கல்வி முறை" போற்றப்படுகிறது. அங்கு மழலையர் கல்வி 6 வயதிலும், முறையான கல்வி 7 வயதிலும்தான் தொடங்குகிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை, 3 வயதிலேயே முறையான கல்வியைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. தற்போது வசதி படைத்த மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் மட்டுமே மழலையர் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். வசதி குறைந்த கிராமப்புற குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்குச் செல்கின்றனர். அங்கு கல்வியை விட ஊட்டச் சத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கல்வி (மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இனிக் கல்வி அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிக்கை பரிந்துரை செய்துள்ளது) அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுப் பள்ளிகளோடு இணைக்கப்படும். இதனால் ஊட்டச்சத்துக்கான முக்கியத்துவம் குறையும். அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால், அவர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டால் கல்வித் தரம் குறையும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

10 முதல் 20 அரசுப் பள்ளிகள் இணைக்கப்பட்டு "பள்ளி வளாகங்கள்" உருவாக்கப்படுகின்றன. நீண்ட தூரம் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டால் இடைநிற்றல் அதிகமாகும்.

3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை ஒழிக்கப்பட்டு மேல்நிலைக் கல்வியில் செமஸ்டர் முறை (4 ஆண்டுகளில் 8 செமஸ்டர்) அமல்படுத்தப்படும்.

15 ஆண்டு காலப் பள்ளிக் கல்வியில் பயிற்றுமொழி குறித்த தெளிவு இல்லை. சமஸ்கிருதம் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுகிறது. உயர்கல்வி பெறக் கல்லூரிகளில் சேரும்போது NEET, NEXT எனத் தனித்தனி நுழைவுத் தேர்வுகளைத் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும். அதன் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்

உயர்கல்வி :

800 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 15,000 சிறந்த நிறுவனங்களாக வலுப்படுத்தப்படும். அவை மூன்று வகைகளாகத் தரம் பிரிக்கப்படும். அனைத்து நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களாகவோ, பட்டம் அளிக்கின்ற தன்னாட்சிக் கல்லூரிகளாகவோ இருக்கும். கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக இணைப்புப் பெறும் முறை ஒழிக்கப்படும். 2020க்குப் பிறகு புதிய கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்புப் பெற முடியாது. தன்னாட்சிக் கல்லூரிகள் தொடங்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தன்னாட்சித் தகுதிக்குத் தங்களை உயர்த்திக் கொள்ளாத கல்லூரிகள் 2032க்குள் மூடப்படும்

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவை ஆய்வு செய்த வகையில், கல்வித் துறையின் பங்காளர்களாக விளங்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனியாவது அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை ஏற்று இந்த அறிக்கை திருத்தப்படுவதே இந்தியா போன்ற பன்முக தேசத்தின் கல்வித் துறைக்குப் பயன் விளைவிப்பதாக இருக்கும். அத்துடன் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட "கல்வி", மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குத் தக்க தீர்வாக அமையும்.

- இராம.வைரமுத்து