நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்கம் குறித்துப் பேசியுள்ள காணொளியை, உங்களில் பலர் இணையத்தளத்தில் பார்த்தும் கேட்டும் இருக்கக் கூடும். அந்த வாய்ப்பு இல்லாத நண்பர்களுக்காக, அவர் பேச்சை, ஓர் எழுத்தும் மாறாமல், அப்படியே கீழே தருகின்றேன்:&

“திராவிட முன்னேற்றக் கழகம் - முன்னேற்றம் என்பதற்குப் பொருள் என்ன - திருடர் முன்னேற்றம் - அதுதான் அதுக்குப் பொருள். அதிகபட்சம், திராவிடக் கொள்கை, திராவிடக் கொள்கைங் கிறாங்களே, என்ன? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வச்சோம். நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்தி வச்சோம். போங்கடா வெட்டிப் பயல்களா...

எங்க ஊர்ல பாத்தா..., அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது, தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்பிடித் தான் நடந்துகிட்டிருக்கு.

‘சீர்திருத்தத் திருமணம் நடத்தி வச்சிட்டோம்’... எங்க ஊர்ல எல்லாம், அய்யர், கிய்யர் எல்லாம் கெடையாது. சும்மா வருவாய்ங்க. மோளத்தைத் தட்டுவாய்ங்க. கல்யாணத்தை நடத்தி வச்சிட்டுப் போயிருவான்க.

இதுக்கு ஒரு இயக்கமா, இதுக்கு ஒரு... இது ஒரு தத்துவமா?

நாங்கதான் ‘ஜில்லாவ’ ‘மாவட்டம்’ ஆக்கினோம்.

திராவிட இயக்கம் இல்லேன்னா நாங்க எல்லாம் படிச்சே இருக்க முடியாது. அப்படியா? இந்தியாவிலே அதிகம் படிச்சவங்க இருக்கிற மாநிலம் கேரளாங்கிறான். அங்க திராவிட இயக்கந்தான் படிக்க வச்சுதா? இந்தியாவில மத்த மாநிலங்கள்ல எல்லாம், ஆடு மாடு மேய்ச்சுக் கிட்டுப் படிக்காமலா திரியரான்? எங்களவிட நல்லாப் படிச்சு, வேல வெட்டிக்குப் போயிட் டிருக்கான். நாங்க ஏன் இப்பிடித் திரியரோம்? இதெல்லாம் அரசின் கடமை. நான் வாக்குச் செலுத்தி, அதிகாரத்தைக் குடுத்து ஒருத்தனை ஆள வைப்பது என்பது என் தேவையை நிறைவு செய்ய”.

நண்பர்களே! மேலே காணப்படும் ‘அறிவார்ந்த’ பேச்சை, அவர் எந்த ஊரில், எப்போது பேசினார் என்ற குறிப்பு எதுவும், அந்தக் காணொளியில் இடம்பெறவில்லை. அவர் பேச்சையும், என் பேச்சையும் வெட்டி வெட்டி, ‘சீமான் $ சுப.வீரபாண்டியன்’ என்ற தலைப்பின் கீழ் யாரோ பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்தப் பேச்சிற்கு நாம் விடை சொல்ல வேண்டுமா, விதண்டாவாதம் செய்பவர்களோடு விவாதம் செய்து காலத்தை வீணாக்க வேண்டுமா என்ற வினாவை நண்பர்கள் சிலர் எழுப்பினர்.

நம் விளக்கங்களை எல்லாம் கேட்டுச் சீமான் மாறிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. திட்டமிட்ட உள்நோக்கங்க ளோடு, தூங்குவது போல நடிப்பவர்களை யாராலும் எழுப்ப முடியாது. ஆனாலும், அடுத்த தலைமுறை இளைஞர்கள், கேலியும் கிண்டலும் நிறைந்த அவர் பேச்சில் ஈடுபாடு கொண்டு, உண்மைக்கு எதிர்த்திசையில் பயணம் தொடங்கிவிடக்கூடாதே என்ற அச்சத்தில், சிலவற்றை நாம் விளக்கியே ஆக வேண்டியுள்ளது. மற்றபடி, சீமானை வசை பாடுவதோ, அவரோடு மல்லுக்கு நிற்பதோ நம் நோக்கமில்லை.

மேடையேறத் தொடங்கிய காலத்தில், சீமான் தன்னை, “நான் மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டுதான் பேசத் தொடங் குவார். அதனால்தான் பெரியாரின் பிள்ளைகளும் அவரை நம்பி, மதித்துக் கூட்டங்களுக்குப் பேச அழைத்தனர். இப்போது கிளை மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுகின் றார். திராவிட இயக்கம் என்ன செய்து விட்டது என்றும், இது வெல்லாம் ஒரு கொள்கையா, இதற்கெல்லாம் ஓர் இயக்கமா என்றும் கேட்கின்றார்.

மேலே உள்ள அவருடைய பேச்சில், அவர் முன்வைக்கும் செய்திகள் மூன்று -

1. சுயமரியாதைத் திருமணம், விதவைத் திருமணம் போன்றவைகள் எல்லாம், திராவிட இயக்கத்திற்கு முன்பே இருந்தன.

2. ‘ஜில்லா’வை மாவட்டமாக்கிய, ‘தமிழ்மயமாதல்’ ஒன்றும் பெரிய செயல் இல்லை.

3. திராவிட இயக்கம்தான் கல்வியைத் தந்தது என்பது உண்மையில்லை.

ஆக மொத்தம், திராவிட இயக்கத்தின் சமூகப் பணி, மொழிப் பணி, கல்விப்பணி ஆகிய அனைத்தையும் சீமான் மறுக்கிறார். ‘துக்ளக்’ இதழைத் தவிர, மற்ற பார்ப்பனர்கள் கூட, இப்படிக் கூசாமல் பொய் சொல்வதற்குச் சற்றுத் தயங்குவார்கள். முற்றிலும் பொறுப்பற்ற தன்மையும், சமூக அக்கறையும் அற்றவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் பேசமுடியும்.

சங்ககாலம் தொட்டே, கணவனை இழந்த பெண்கள், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ள போதிலும், புறநானூற்றில் இடம் பெற்றுள்ள, ‘பல்சான்றீரே, பல்சான்றீரே!’ எனத் தொடங்கும், அரசி பெருங்கோப்பெண்டு எழுதியுள்ள ஒரு பாடலே போதுமா னது. ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்றுதான் சிலம்பும் கூறுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில், அந்தக் கொடுமை அப்படியேதான் தொடர்ந்துள்ளது. அதற்கு இரு சான்றுகளைக் காணலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1887ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, டபிள்யு. ஜே. வில்கின்சின் ஆங்கில நூல் ஒன்று அண்மையில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி யுள்ளது. ‘நவீன இந்துத்துவம்’ என்பது அதன் பெயர். அந்நூலிலிருந்து சில வரிகள் கீழே :-

“(விதவையானவள்) ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உண்ண வேண்டும். மாதத்தில் இருமுறை, அதனையும் தவிர்த்து, உணவும், தண்ணீரும் அருந்தாமல் 48 மணிநேரம் இருக்க வேண்டும்.......வங்காளத்தில் உள்ள ‘சநாதன தர்ம ரட்சிணி சபா’, மருத்துவக் காரணங்களுக் காக, முற்றிலும் உண்ணாமல் இருப்பது உகந்தது அல்ல என்றால் தண்ணீரை மட்டும் அருந்தலாம் என்று விதித்திருக்கிறது.”

இதுபோல இன்னும் பல கொடுமை யான செய்திகளை அந்நூல் விளக்குகிறது. இன்னொரு பகுதியில், கொட்டும் பனியில், ஈரப் புடவையுடன் அந்தப் பெண் நிற்க வேண்டிய சடங்கை எடுத்துக் காட்டுகிறது-. இவ்வாறு ‘கைம்மை நோன்பு’ என்னும் பெயரால், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

இன்னொரு சான்றாக, 20ஆம் நூற்றாண்டில், காந்தியார் கூறுவதைக் கவனிக்கலாம். “15 வயதுள்ள ஒரு பால்ய விதவை, தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வது, அவ்விதமாகச் சொல்வோரின் கொடூர சுபாவத்தை யும், அறியாமையையுமே விளக்குகிறது” என்கிறார் காந்தியார்.

15 வயதிலேயே ஒரு பெண் விதவை ஆகிவிட்டாளா என்று எண்ண வேண்டாம். அப்போது குழந்தை மணம் நடைமுறையில் இருந்ததால், 1 வயதுக்கும் 5 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தை விதவைகளின் எண்ணிக்கை 11,892 என்று, 1921ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகின்றது. அதே கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும், 30 வயதுக்குட்பட்ட விதவைகள் 26,31,788 பேர் இருந்துள்ளனர்.

கைதட்டல்களுக்காக, எல்லோரையும், எல்லாவற்றையும் கேலி செய்து பேசும் சீமான்களுக்கு இந்த வலியும் வேதனையும் புரியாது. இதயமும், அதில் ஈரமும் உள்ளவர்களுக்கு மட்டுமே அவை விளங்கும்.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ இதே நிலைதான் இருந்தது. ஆங்காங்கே தோன்றிய சமூக இயக்கங்கள்தாம் இந்நிலையைச் சிறிது சிறிதாக மாற்றின. அவற்றுள் திராவிட இயக்கத்திற்குக் குறிப்பி டத்தக்க பங்கு உண்டு. ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், சுயமரி யாதைத் திருமணம், கைம்பெண் மறுமணம் ஆகியவை, ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்திய கிளர்ச்சிகளைச் சீமான் போன்றவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. படித்தும் அறிந்து கொள்ள முயலவில்லை.

அடுத்ததாக, சமற்கிருதத்திற்கு எதிராகத் திராவிட இயக்கம் தொடுத்த போரையும், ஜில்லாவை மாவட்டம் ஆக்கிவிட்டால் போதுமா என்று கேட்டுக் கேலி செய்கிறார். அக்கிராசனர் தலைவர் ஆனதும், காரியதரிசி செயலாளர் ஆனதும், நமஸ்காரம் வணக்கம் ஆனதும் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே, தமிழகத்தின் தமிழ்த் தெருக்களில் தமிழோசை கேட்கத் தொடங்கியது. தனித்தமிழ் இயக்கத்திற்கு அதில் பெரும்பங்கு உண்டு. எனினும் அந்த உணர்வை வெகுமக்களிடம் கொண்டு சென்ற இயக்கம் திராவிட இயக்கம்தான்-.

தமிழ் உணர்வைக் கூடக் கேலி செய்யும் சீமான் நடத்தும் இயக்கத்திற்கு, நாம் தமிழர் இயக்கம் என்று பெயர்!.

மூன்றாவதாக, திராவிட இயக்கத்தின் கல்விப்பணியை அவர் மறுக்கின்றார். திராவிட இயக்கம்தான் படிக்க வைத்தது என்றால், கேரள மக்களை யார் படிக்க வைத்தார்கள் என்று கேட்கிறார். கேரளாவிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதனால்தான், கேரள அரசும், தமிழக அரசும் இணைந்து வைக்கத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துள்ளன. எனினும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் திராவிட இயக்கம்தான் படிக்க வைத்தது என்று நாம் கூறவில்லை. தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு பற்றிப் பேசும்போது தான் அவ்வாறு குறிப்பிடுகிறோம்.

ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப, சமூக இயக்கங்கள் தோன்றி வளரும் என்பதுதானே இயல்பு. கேரளாவில் பொதுவுடைமை இயக்கம், நாராயண குரு இயக்கம் போன்றவை செயலாற்றின. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, மராட்டியத்தில் மகாத்மா ஜோதிராவ் பூலே தொடங்கிய இயக்கம், கல்வி மற்றும் சமூகப் பணி ஆற்றியது. வட இந்தியாவில் ராம் மனோகர் லோகியாவின் இயக்கம் சமூக நீதி விழிப்புணர்வை உருவாக்கியது.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். திராவிட இயக்கம் தோன்றியிராவிட்டால், தமிழகம் அப்படியே தேங்கிப் போயிருக்கும் என்று நாம் கூறவில்லை. அது இயங்கியல் கோட் பாட்டிற்கே எதிரானது. இன்னொரு இயக்கம் தோன்றி அப்பணி யைச் செய்திருக்கும் என்பதுதான் உண்மை. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதே அறிவியல்.

ஆனால் அதற்காக, பணியாற்றிய இயக்கங்களின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மார்க்சும், பிரபாகரனும் தோன்றியிராவிட்டால், அந்த இடத்திற்கு வேறு இருவர் வந்திருப்பார்கள் என்பது சரிதான். அதற்காக மார்க்சை யும், பிரபாகரனையும் கேலி செய்து பேசுவது அநாகரிகம்.

இறுதியாய் நண்பர் சீமானுக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்களின் அரசியல் நோக்கங்களுக்காகவும், அதிகாரக் கனவுகளுக்காகவும், உங்களை நம்பி உங்கள் பின்னால் வரும் இளைய தலைமுறையினரிடம் வரலாற்றைத் திரித்துச் சொல்லி, அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாதீர்கள்!