மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 10ஆம் தேதி அறிவித்தது

தேர்தலுக்கான நடத்தை விதி முறைகள் அன்று தொடக்கம் நடைமுறைக்கு வந்து விட்டன

சாதி, மதம், இராணுவம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவைகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளுள் அடங்கும்

இந்நிலையில் ‘‘இந்துக்களைக் காங்கிரசார் அவமதிக்கின்றனர். அக்கட்சி இந்துக்களைப் பார்த்து பயப்படுகிறது. அதனால் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார்’’ என்று ஏப்ரல் 1ஆம் தேதி வார்தாவிலும்-

‘‘நான் முதல் முறையாக வாக்காளர்களிடம் கேட்கிறேன். பாலக்கோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு உங்கள் வாக்குகளை அளிப்பீர்களா? புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தத் தியாகிகளுக்கு உங்கள் வாக்குகளை அர்ப்பணிப்பீர்களா?’’ என்று ஏப்ரல் 8ஆம் தேதி லத்தூரிலும் பேசிப் பிரச்சாரம் செய்திருக்கிறார் மோடி.

இவைகளில் வார்தா பேச்சு மத அடிப்படையிலும், லத்தூர் பேச்சு நாட்டின் பாதுகாப்பு, இராணுவம் குறித்த பேச்சாக இருப்பது அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.

இதுபோன்ற நாற்பது விதிமீறல்களைப் பாஜகவின் மோடியும், அமித்ஷாவும் செய்திருக்கிறார்கள்

தேர்தல் ஆணையத்தில் இவை குறித்து காங்கிரஸ் கட்சி புகார்கள் கொடுத்தும், ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. பெயருக்கு இரண்டு புகார்களை மட்டுமே பரிசீலனை செய்தது

இதை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது காங்கிரஸ்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரனைக்கு எடுத்துகொண்டு, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஏன் இதுவரை இந்தப் புகார்களைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்த அறிக்கையை மே 6ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டனர்.

ஒரு சனநாயக நாட்டில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம், இப்படி ஆளும் கட்சிக்கு அடிபணிந்து போவதும், அவைகளுக்கு ஆதரவாகச் செயல் படுவதும் வன்மையான கண்டனத்திற்கு உரியன

இது மக்கள் விரோத ஆணையம் என்று நாளைய வரலாறு பேசும்.