மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கை சொல்கிறது.

மக்களவையில் இச்சட்டம் நிறைவேறி மாநிலங்களவையில் வைத்தபோது இச்சட்டத் திருத்த மசோதாவை வலிமையாக ஆதரித்த கட்சி அதிமுக. அவையில் வாக்கெடுப்பின் போது இச்சட்டத்திற்கு எதிராக 105 வாக்குகளும், ஆதரவாக 114 வாக்குகளும் என்று இருந்த போது, அதிமுகவின் 11 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்து 125 வாக்குகளில் நிறைவேற வலிமை சேர்த்து இம்மசோதா சட்ட வடிவம்பெறச் செய்ததே அதிமுகதான். இப்பொழுது அறிக்கை விடுகிறார்கள்.

சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவார்களாம். ஆனால் அவர்களின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவின் தமிழகப் பொறுப்பாளர் ரவி உடனே மறுத்துவிட்டார்.

வேதாரண்யத்தில் தேர்தல் பரப்புரையின் போது எடப்பாடியார் சொல்கிறார், ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வை அதிமுகவும் எதிர்க்கிறதாம். நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்தில் நீட் நுழைந்து விட்டதாம். அதை நீக்க இவர்கள் வலியுறுத்துவார்களாம்.

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வை வலிமையாக அன்று ஆதரித்துப் பேசிய அ.தி.முக உறுப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரன் என்பதை மறந்து அல்லது மறைத்து விட்டுப் பேசுகிறார் எடப்பாடி, மக்களை மடையர் என்று நினைத்துக் கொண்டு.

பா.ஜ.க ஒரு மதவாதக் கட்சி என்பது உலகறிந்த செய்தி. அதைப் பின்னிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து மதவெறி அமைப்பு என்பது மக்கள் அறிந்த செய்தி. குடியுரிமைச் சட்டத்திற்கும், நீட் தேர்வுக்கும் பின்னால் மதம் கோலோச்சுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்குத் துணையாக, பா.ஜ.கவின் அடிமையாக இருக்கிறது அதிமுக அரசு.

குடியுரிமைச் சட்டம், நீட் தேர்வை மிகக் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தவர்கள் தி.மு.க உறுப்பினர்கள். திருச்சி சிவா உள்ளிட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர்களின் உரைகள் இதற்கு ஒரு சான்று.

சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.கவிடம் அதிமுக அடகு வைத்த மாநில உரிமையை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிறது, தி.மு.கழகம்.

மாநில உரிமை என்பது மக்களின் உரிமை. இது உரிமைப் போராட்டம். இந்தப் பேராட்டத்தில் இலை உதிர வேண்டும், உதயசூரியன் உதிக்க வேண்டும். 

வாக்களிப்போம் "உதயசூரியன்" சின்னத்தில்; ஆட்சியமைப்போம், தளபதி ஸ்டாலின் தலைமையில்.

- கருஞ்சட்டைத் தமிழர்