சோவியத் யூனியன் சோசலிச ஆட்சியை அமைத்த போது மக்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் அளிக்க வேண்டும் என்னும் கொள்கையைக் கைக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பல முதலாளித்துவ நாடுகளும் மக்கள் சோசலிசத் தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கின.

1948ஆம் ஆண்டில் பிரிட்டன், மக்கள் அனை வருக்கும் இலவச மருத்துவம் அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது. இது முழுமையான இலவச மருத்து வத் திட்டம்; அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் அரை குறையாகவாவது பல நாடுகள் இலவச மருத்துவத்தை அரசின் கொள்கைகளாகக் கொண்டுள்ளன. அமெரிக்கா, இலவச மருத்துவம் என்பது மக்களின் (?!) சுதந்திரத் திற்கு எதிரானது என்று நினைக்கிறது. மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் இளைய சகோதரர் எட்வர்ட் கென்னடி தன் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவத்திற்காகப் போராடி அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளுடனேயே காலமானார். இப்போதைய அதிபர் ஒபாமாவும் இதற்காகப் போராடுகிறார். ஆனால் அவர் வெல்வார் என்பதற்கான அறிகுறி கூடத் தெரிய வில்லை.

இப்போது நம் நாட்டு விவரங்களுக்கு வருவோம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற முழக்கங்களுக்குக் காவு கொடுக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களில் மக்களின் உடல் நலனும் ஒன்று. இன்று நாட்டில் பல பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகள் உள்ளன. பல இலட்சக் கணக்கில் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு வந்திருக்கும் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் நாங்கள் போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கத் தைவிட, மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாக மனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு எதிரான தாகும். மேலும் மருத்துவமனைகள் அமைக்க ஈடுபடுத் தப்பட்டிருக்கும் முதலீட்டுக்கு இலாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் தியாகம் செய்துவிட முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பணம் உள்ளவர்களால் மட்டுமே உயர் திறமை பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற முடிகிறது. மற்றவர்கள், சரியான பயிற்சி பெறாத கற்றுக்குட்டிகளிடமும், விதிவிலக்காக மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டுள்ள மிகச் சில மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஒருபுறம் கற்றுக்குட்டிகளால் முறையான சிகிச்சை நிலையங்களை வைத்துக்கொள்ள முடிவதில்லை. இன்னொருபுறம் விதிவிலக்காக உள்ள நல்ல மருத்து வர்கள் சிறந்த மருத்துவ உபகரணங்களுக்காகப் பணத்தை முதலீடு செய்ய முடிவதில்லை. ஆகவே பணம் இல்லாத ஏழை மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சை பெறுவது என்பது அருகி வருகிறது. (அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைத் திட்டம், காப்பீட்டு நிறுவனங்களின் கருவூலத்தை நிரப்புவதில் ஆற்றும் பணியில் நூற்றில் ஒரு பங்குகூட சிகிச்சைப் பணிக்கு உதவுவ தில்லை என்பதை அத்திட்டத்தைபயன்படுத்த முனையும் போது தெரியும்).

இந்நிலையில் ஆயிரமாயிரம் குறைபாடுகள் இருந்தாலும் போலி மருத்துவர்கள் தான் ஏதோ ஒரு வகையில் ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளை, சரியாகவோ, தவறாகவோ நிறைவு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நோய்க்கு மருந்து கொடுங்கள் என்று மருந்துக் கடைகளில் மக்கள் கேட்கும் அவலமும் இதில் அடங்குகிறது.

நிலைமைகள் இவ்வாறு இருக்கும் பொழுது நமது அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது தெரியுமா? கொல்கத்தாவில் 14.1.2011 அன்று இந்திய அரசின் நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி ஆசாத், இசைவு பெறாமல் நடத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான ஒரே சீரான சட்டங்களை அனைத்து மாநில அரசாங்கங்களும் இயற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனைகள் உயர்தர மருத்துவத் துணைக்கருவிகளை வைத்துக் கொண்டிருந்தால் தான் இசைவு வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

தங்களிடம் துணைக்கருவிகள் இருக்கின்றன என்பதற்காக நோய்க்குத் தொடர்பே இல்லாத சோதனை களைச் செய்யச் சொல்லும் மருத்துவமனைகளைப் பற்றியும், தேவைப்படும் சோதனைகளைப் பிறிதோரி டத்தில் செய்திருந்தாலும் அவற்றை ஒப்புக் கொள்ளாது தங்களிடமே மீண்டும் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் மருத்துவமனைகளைப் பற்றி அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால் ஏழை மக்கள் அரைகுறையான சிகிச்சையாக இருந்தாலும், குறைந்த செலவில் குறையாகவாவது உடல்நலம் தேறி, மருத்துவமனை முதலாளிகளின் சுரண்டலிலிருந்து தப்புவதை எப்படியும் தடுத்திட வேண்டும் என்று அமைச்சர் வெகு அக்கறையாகப் பேசியிருக்கிறார். நாமும் அதைக் கேட்டுக் கொண்டு சும்மாவே இருக்கிறோம். என்ன செய்வது? சும்மாவே இருப்பது சுகமாக இருக்கிறது. அநீதியை எதிர்த்து ஒற்றுமைப்படுவது எட்டியாகக் கசக்கிறது.