அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இரயில்கள், பேருந்துகள் தீக்கிரையாகி எறிகின்றன. உடைந்து நொறுங்குகின்றன. வட இந்தியா முழுவதும் போராட்டங்கள். குறிப்பாக பீகார், இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் பட்டாளத்தின் நிலை கட்டுப்பாடுகளுக்கு முற்றிலுமாக அப்பாற்பட்டு மோடி அரசின் செயல்பாட்டை எதிர்க்கின்றனர். கடுமையான போராட்டங்களைப் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறுகின்றன.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் உங்களை நடக்க வைத்தபோது வராத கோபம், புதைக்க இடமில்லாமல் கங்கைக்கரை ஓரம் அலைந்தபோது வராத கோபம், புதைக்க எரிக்க வழியில்லாமல் பிணங்களைக் கங்கையில் தூக்கிப்போட்டுப் போனபோது வராத கோபம், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் அல்லாடிய போது வராத கோபம் வட இந்திய இளைஞர்களுக்கு இப்போது மட்டும் எப்படி வந்தது?

 வடஇந்தியாவின் கணிசமான இதர பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் அதிகம் நம்பி இருக்கும் வேலைவாய்ப்பு இராணுவமே. பணிக்குப் பிறகு ஓய்வூதியம், காப்பீடு ஆகியவை கொடுக்கப்படும். பின் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரியும் வாய்ப்பும் பெறுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே இராணுவப் பணி என்ற அக்னிபாத் திட்டத்தால் இராணுவத்தில் நேரடியாக ஆள் எடுக்கும் முறை கைவிடப்படுமோ என்ற அச்சம் வடஇந்திய இளைஞர்களைப் பற்றிக் கொண்டது. அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய பின்னர் அதில் இருந்து 25% மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.

எஞ்சிய 75% பேர்கள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட எதுவும் கிடைக்காது.

இந்தத் திட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸ் உட்பட சில எதிர்க்கட்சியினர் அறிக்கை வெளியிட்டாலும் இளைஞர்கள் தன் எழுச்சியாகவே போராடுகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் இளைஞர்களை அரவணைத்து சரியான திசையைக் காட்டி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்று கொடுக்க வேண்டும். “அந்த அதானியின் வேலைக்காரனிடம் சொல், இராகுல் வந்து சென்றார் என்று” என பஞ்ச் அடித்துக் கலக்கிய இராகுல் காந்தி, இது போன்ற நிகழ்வில் எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை நிறுவவேண்டும் என்பது ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இதில் சில விஷயம் தெரிந்த நபர் முன்வைக்கும் சந்தேகங்களும் கவனிக்க வேண்டியதே. அதில் முதலாவது, நிரந்தரம் செய்ய இருக்கும் 25% பேரை எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள், இராணுவம் காவி மயம் ஆகுமோ என்ற அச்சத்தை எழுப்புகின்றார்கள். அதேவேளையில் நான்காண்டு கழித்து வெளிவரும் 75% பேர், தன் மீதி வாழ்க்கையை எதை நம்பி இருப்பார்கள் அல்லது என்ன செய்வார்கள்? பெருமளவு வேலையில்லாமல் இருக்க நேரிடும். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போக வழிவகை செய்துவிடும். இது போன்ற நிலையை மதவாத அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவானதாகிவிடும். இராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் வேலையில்லா நிலையில் இந்துக்களை இராணுவ மயமாக்குவோம் என்று கூறும் காவி மதவாதிகள் உள்நாட்டில் கலவரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்ற பெரும் இரு அபாயங்களை இதில் சுட்டிக் காட்டுகின்றனர்.