மதுரை ஆதின மடத்தின் 293ஆவது ஆதினமாக ஹரிஹர தேசிகர் 23.08.2021 அன்று பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைப் பேசி வருகிறார். அத்துடன் ஆன்மிகவாதிகளுக்கான வரம்பை மீறி அரசியல்வாதியைப் போன்று அவர் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களை ஒரு சாதிக்கான தலைவர் போன்று அவர் பேசி, அதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பியவுடன் அக்கருத்தைத் திரும்பப் பெற்றார்.

madurai adheenamதொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தமிழ்ப்புத்தாண்டு தையா சித்திரையா என்ற வினா அவர் முன் வைக்கப்பட்ட போது, அதற்கு சரியான விடையைக் கூறாமல் புத்தாண்டை எப்போது கொண்டாடினால் என்ன என்று இலங்கைப் பிரச்சனையைக் கூறி மழுப்பினார். அவர் சைவர் என்பதால் வைணவப் பிண்ணனி கொண்ட சித்திரையை அவர் ஏற்க மறுத்தே இப்படித் திசை திருப்பினார் என்ற உண்மை உற்று நோக்கினால் விளங்கும்.

அதே போல் இன்னொரு தொலைக்காட்சி நேர்காணலில் பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பெண்களைப் பெருத்த அவமானத்திற்கு ஆளாக்கியது.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் மற்றும் அத்துறையின் அமைச்சர் மாண்புமிகு பி. கே. சேகர்பாபு அவர்கள் குறித்து அவர் கேலியும் கிண்டலுமாக பேசி வருவது ஆன்மீகவாதிக்கு அழகல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அதன் பிரதிநிதியாக உள்ள அமைச்சரையும் மனம் போன போக்கில் மதுரை ஆதினம் பேசி வருவது வெட்கக்கேடானது.

திராவிடம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் மதுரை ஆதினம், அவர் இருக்கும் மடத்தை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியவர் “திராவிட சிசு” என்று அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர் என்பதை இதைப் படித்த பிறகாவது உணர்வாரா?

ஓரிரு நாட்களுக்கு முன்பு மதுரையில் விஸ்வ ஹிந்து பரிசத் நடத்திய துறவியர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பை வெளிக்காட்டி இருக்கிறார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் குறித்து அவர் கூறிய கருத்துகள் வெறுப்புணர்வின் உச்சம். சுயவிருப்பு வெறுப்பைத் துறந்தவர்கள்தான் துறவியாக இருக்க இயலும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் இவர் துறவியாக அல்ல மனிதராகவே மதிக்கத் தகுதியற்றவர் என்பதை இவரது தொடர் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

கற்றறிருந்த பெருமகன்கள் தாங்கள் படித்த கருத்துகளில் சிறந்த கருத்துகளை மேற்கோள் காட்டுவது இயல்பு. அதை வைத்துத் திருமூலரின் கருத்தைப் பேரறிஞர் அண்ணா திருடி விட்டதாகக் கூறும் இவரது நயவஞ்சகத்தைக் கண்டு நமக்கெல்லாம் உள்ளம் கொதிக்கிறது.

அந்த உரையில் அவர் பிரதமர் மோடியைப் பாராட்டுவதிலும், சீமானை அன்புச் சகோதரர் என்று அழைப்பதிலும் இருந்து அவர் யாருடைய ஊதுகுழல் என்பது தெரிந்து விட்டது. தமிழ்நாட்டில் எப்படியாவது மதக் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் இந்துத்துவாவை இந்த மண்ணில் வேரூன்றச் செய்து விட வேண்டும் என்ற பா.ஜ.கவின் பசப்பு வேலைக்குப் பலியாகி இருக்கிற மதுரை ஆதினம் இனியாவது தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் முன்பு நித்தியானந்தா நியமனத்தின் போது 292வது மதுரை ஆதினகர்த்தருக்கு எதிராக “ஆதின மீட்புக் குழு” உருவானதைப் போல மதுரையில் மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி பிறக்கும். மதுரை ஆதினத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

இராம.வைரமுத்து