chennai police statement

ஒளிவு மறைவாக இருந்த நிலை மாறி, நேரடியாகவே வெளிவந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. நாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும், மத்திய அரசு மனு நீதிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டது என்பதாகவே உள்ளது.

அண்மையில், தமிழ் விடுதலைக் கழகத்தின் சார்பில், சென்னை, தியாகராயநகர், முத்துரங்கன் சாலையில் கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர். அவர்களுக்கு அனுமதி அளித்த காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. 7 ஆவது நிபந்தனை, “மனு சாஸ்திர புத்தகங்கள் மற்றும் சட்ட புத்தகங்கள் எதனையும் எரிக்கக்கூடாது” என்று உள்ளது. மனு சாஸ்திரம் எப்போது சட்டமானது? இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆக்கித் தந்த குழுவின் தலைவரான அண்ணல் அம்பேத்கரே, 1927 இல் மனு சாஸ்திரத்தை எரித்துள்ளாரே! மனு நீதியே இனி இந்தியாவின் நீதி என்று மறைமுகமாகச் சொல்கின்றனரா?

கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியைப் பார்க்க நான்கு முறை அனுமதி கேட்டு, நான்கு முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும், காவிரி ஆணையத்துக்கு எதிராகவும் பேசக்கூடும் என்பதால், கர்நாடக முதலமைச்சருக்குப் பிரதமரைச் சந்திக்க உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு நடிகை தில்லிக்குப் போனால், பிரதமரை உடனே சந்தித்து விட முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து விவசாயிகள் சென்றால் சந்திக்க முடியவில்லை.

மக்களுக்கு ஆதரவாக, மக்களிடையே மாணவி வளர்மதி பேசினால், வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்கின்றனர். ஆனால், பெண் ஊடகவியலாளரைப் பற்றி அவதூறு பரப்பிய காமெடி நடிகர் எஸ்.வி.சேகரை நீதிமன்றம் பிணை மறுத்த பிறகும், ஏறத்தாழ 60 நாள்கள் கைது செய்யவில்லை. இறுதியாகவும், அவர் நீதிமன்றம் வந்தவுடனேயே பிணை கிடைத்து விடுகிறது.

மோடி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எடப்பாடி தரையில் கைகட்டிக் காத்திருக்கிறார். மனு நீதி ஆட்சி செய்கிறது!