ஜெயலலிதாவின் கார் டயரோடு டயராக விழுந்து கும்பிடு போட்டவர்களுள் இவர்களும் அடங்குவர். இவர்கள் இருவருக்கும் ஏலாப் பொருத்தம். இவர்கள் இருவரின் நோக்கம் மட்டும்  ஒன்று. அது முதல்வர் நாற்காலி. தனக்கு ஆள்பலம் இல்லை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தன் ‘தியான’ பலத்தால் மோடியிடம் சரணம் ஆனார், முதல்வர் ஆசையில்.

கூவத்தூர் தலைகளை வைத்து முதல்வர் நாற்காலியைப் பிடித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இவர்கள் இருவரும் அடிக்கடி சொன்னார்கள் ‘சூது கவ்வும்’ என்று. கவ்விக் கொண்டது பா.ஜ.க. இரண்டு பேரின் குடுமிகளும் இப்பொழுது மோடியின் கையில்.

ஓ.பி.எஸ் இப்பொழுது பதவியில் இல்லை. அறுபட்ட பல்லியின் வாலாய் துடிக்கிறார்.

எடப்பாடி தமிழகத்தின் முதல்வர்தான். ஆனால் அந்த வேலை எப்படிப்பட்டது, எப்படிச் செய்வது என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.

அண்மையில் மாட்டுக் கறி உண்ணத் தடைவிதித்தப்போது, செய்தியாளர்கள் அது குறித்து எடப்பாடியிடம் கேட்டனர். எடப்பாடி சொன்னார் நான் இன்னும் அந்த அறிக்கையைப் படிக்கவில்லை, படித்தபிறகு சொல்கிறேன் என்று. இரண்டு வாரங்கள் ஆகின்றன இன்னும் படித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி அந்த அறிக்கையை. இவர்தான் நம் முதல்வர்?

வேளாண்மைப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் பாதிப்பு, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு, குடிநீர், ஏரி, குளங்கள் தூர்வார்தல் போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் தமிழகத்தில் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு கோடுக்க வேண்டிய ஓய்வூதியப் பணம் என்னாயிற்று? அவர்கள் ஏன் போராடுகிறார்கள்.

வணிகர்கள், உணவகங்கள், மருந்தகங்கள் என்று அனைத்து வணிக நிறுவனங்களும் அரசுக்கு எதிராகக் கடை அடைப்புப் போராட்டங்கள் என வீதிக்கு வருகின்றன.

எதைப் பற்றியும் கவலைப்படாத முதல்வர் எடப்பாடி, ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ என்ற பார்ப்பனக் கருத்தியலின்படி நடந்து கொண்டிருக்கிறார்.

எதிர்கட்சித் தலைவர் தளபதியார் ஏரி குளங்களைத் தூர்வார தானே களத்தில் இறங்கினார். இதைக் கேள்விப்பட்ட எடப்பாடி நானும் தூர்வரப் போகிறேன் என்று ஓடினார் மேட்டூருக்கு. அதுவும் 8 மணி நேரத்தில் மூடிக்கொண்டது.

மொத்தத்தில் முதல்வர் பதவிக்கு எந்தத் தகுதியும் இல்லா எடப்பாடி, ஓ-.பி.எஸ். உடன் போட்டி போட்டுக்கொண்டு டெல்லிக்கு காவடி தூக்குவதிலே கவனமாக இருக்கிறார்.

இப்படி ஒரு முதல்வர் தேவைதானா?

இவரின் பொதுச் செயலாளர் பெங்களூர் சிறையில். துணைப் பொதுச் செயலாளர் திகார் சிறையில். இவரோ பா.ஜ.க. சிறையில்.

தண்டனை மட்டும் மக்களுக்கா!