mettupalayam honor killing"யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும்  எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே“ 

 எனக் காதலர்களைத் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில்தான் இன்று ஆணவப் படுகொலைகள் தொடர்கின்றன.. 

தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதால், தம்பியை அண்ணனே ஆணவக்கொலை செய்த கொடூரம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்திருக்கிறது. 

மேட்டுப்பாளையம் ரங்கராயன் ஓடைப் பகுதியினைச் சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வர்சினி பிரியா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ய முயன்றதால் சொந்த அண்ணனாலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கனகராஜூம், வர்சினி பிரியாவும் பெற்றோர் மற்றும் உறவினர்களின்  அரட்டல் மிரட்டல்களுக்கு  அஞ்சாது  நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோரின் கடும் எதிர்பை மீறி, சாதி மறுப்புத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த  கனகராஜின் அண்ணன் வினோத் கனகராஜ், வர்சினி பிரியா இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில், கனகராஜ்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது காதலி வர்சினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

mettupalayam honor killerஇந்தச் சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகராஜும் - வர்சினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகராஜின் அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வர்சினி பிரியாவின் தாய் அமுதா செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

"என் மகள், கனகராஜைக் காதலிப்பது எங்களுக்கு முன்னரே தெரிய வந்தது. நாங்கள் அருந்ததியர்கள், அவர்கள் வேறு ஒரு இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள். சில நாட்களுக்கு முன்  வினோத், மற்றும் அவருடன் சில பேர் ‘உங்கள் பெண்,எங்கள் சாதிப் பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம்’ என்று எங்களை மிரட்டினார்கள். எனவே, நாங்கள் என் மகளை அவளது பாட்டி வீட்டில் கொண்டு போய் வைத்து இருந்தோம். அங்கிருந்து வெள்ளிக்கிழமை வீட்டை விட்டுச் சென்று விட்டார். இது தெரிந்து நாங்கள் அவர்களைத் தேடி வந்த பொழுது, அந்தச் சாதியை சேர்ந்த ஒரு சிலர் நடு இரவில் எங்கள் வீட்டிற்கு வந்து உன் மகள் மட்டும் கனகராஜோடு போய் இருந்தால் அவ்வளவுதான் என்று, எங்கள் சாதியின் பெயரைச் சொல்லி மோசமான வார்த்தைகளால் மிரட்டினார்கள். எங்கள் பெண்ணுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று பதற்றத்தோடு தேடிய பொழுதுதான் நேற்று இந்தச் செய்தி வந்தது,"  என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

தமிழகத்தில் ஆணவக் கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், பாஜகவின் எடுபிடியாக இருக்கும் அதிமுக அரசு இதை ஒப்புக் கொள்வதே இல்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் ஆய்வறிக்கை, 80-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் கடந்த ஓராண்டில் நடந்திருப்பதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.

தர்மபுரி இளவரசன்,  உடுமலைப்பேட்டை சங்கர்,  கோகுல் ராஜ்,  என  ஆணவக் கொலைகள் தொடர்வதன் காரணம் சமீபகாலமாகத் தமிழகத்தில்  வேரூன்றியிருக்கும் மதவாதமும்  சாதியப் போக்குமே ஆகும். 

இத்தகைய சாதிவெறிக்கு இரையாகிக் கொண்டிருக்கும் மக்களின் வலியைப் புரிந்துகொண்டு அரசு உடனடியாக ஆணவப் படுகொலைக்கு எதிரான கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும் சாதி ஒழிப்பில், காதல் திருமணத்தில் நம்பிக்கையுடையவர்கள் இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

அது மட்டுமன்றி சாதி ஒழிப்பின் தேவை குறித்தும் ஆண் பெண் உறவு பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளையும்  மேற்கொள்ள வேண்டும். 

ஏனெனில் ஆணும் பெண்ணும் காதலிப்பது, திருமணம் புரிவது, அல்லது திருமணமின்றி ஓர் இல்லத்தில் சேர்ந்து வாழ்வது, எல்லாம் அவர்களின் அடிப்படை உரிமை. இதில்  மூக்கை நுழைப்பதற்கு யாருக்கும்  உரிமையும் கிடையாது.

"சுதந்திரமான காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு நாடோ ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரிகம்,  முதலியவற்றில் பெருக்கமடையும். நிர்ப்பந்தத் திருமணம் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும் அடிமைத் தன்மையும்தான் பெருகும்" என்கிறார் தந்தை பெரியார்