"நீங்கள் யார்" என இரஞ்சித்தைப் பார்த்து அய்யா சுப.வீ கேள்வி எழுப்பினால் இரஞ்சித்தான் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், திடீரெனக் குறுக்கே வந்து பாய்ந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி!

நீங்கள் பா.இரஞ்சித்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியிருப்பதில் மிகைத்திருப்பது.., பா.இரஞ்சித் மீதான பாச உணர்வா அல்லது ஆதரவா? திராவிட இயக்கத்தின் மீதான காழ்ப்புணர்வா?

panagal arasarநிச்சயமாக, திராவிட இயக்கத்தினர் மீதான காழ்ப்புணர்வே என்பேன்.

ஏனெனில், பா.இரஞ்சித் மீதான பற்றோ அல்லது அவர் பேசிய பேச்சின் மீதான ஆதரவோ உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அய்யா சுப.வீ அவர்களுக்கு முதலில் பதில் எழுதியிருக்க மாட்டீர்கள். அதற்கும் முன்பாக தோழர் வன்னியரசு அவர்களுக்குத்தான் பதில் எழுதியிருப்பீர்கள்.

அய்யா சுப.வீ அவர்களோ "இரஞ்சித் நீங்கள் யார்?" என்று கேட்டது மட்டுமின்றி.., "தானுண்டு, தன் வேலையுண்டு என்று திரைப்படங்களை மட்டும் இயக்கிக் கொண்டு, தனக்குக்  கிடைத்துள்ள புகழைப் பணமாக்கிக் கொண்டு வாழும் தன்னலவாதியில்லை இரஞ்சித். சமூகச் சிந்தனையோடு பல நேரங்களில் குரல் கொடுப்பவர். அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, வெளிப்படையாக வெளியில் வந்து தன் கருத்துகளை வெளியிடும் போர்க்குணமுடையவர். தன் படத்தில் வரும் வில்லனை ஒரு இராம பக்தனாகக் காட்டக்கூடிய அளவிற்குத் துணிச்சல் உள்ளவர். படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல், 'பரியேறும் பெருமாள்'  போன்ற தரமான  படங்களைத் தந்திருக்கும் தயாரிப்பாளர். சமூகநீதிக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள், இயக்குனர் ரஞ்சித்தைப் பாராட்டுவதற்கு இவற்றை விட வேறு தகுதிகள் என்ன வேண்டும்?" என அய்யா சுப.வீ இரஞ்சித்தை மனதாரப் பாராட்டிய வரிகள் மட்டும் உங்கள் கண்களுக்கே தெரியாமல் போய்விட்டதா? அல்லது கவனமாக மறைத்து விட்டீர்களா?

வன்னியரசு அவர்களோ "இரஞ்சித் ஓர் RSS இன் கையாள்" என்று நேரிடையாகவே குற்றம் சாட்டியிருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இரஞ்சித் குறித்த தோழர் வன்னியரசு அவர்களின் குற்றச்சாட்டுக்கு கள்ள மவுனம் காப்பதும், "நீங்கள் யார்?" எனக் கேட்ட சுப.வீ அவர்களை எப்படிக் கேட்கலாம் எனக் கேட்டு அலறுவதும் ஆகப்பெரிய நகைமுரண்.

வாசுகி பாஸ்கர் அகராதியில் "நீங்கள் ஒரு RSS கையாள்" என்பது தவறில்லை போலும்! "நீங்கள் யார்?" எனக் கேட்பதுதான் மாபெரும் குற்றம்!!

பெரியாருக்கும், நீதிக்கட்சிக்கும் ஏதோ பெரிய முரண்பாடு இருந்ததைப் போல் காட்ட முனைந்திருக்கிறீர்கள். அதைக் குறித்த வரலாற்றுச் செய்திகளை நிச்சயமாக என் அடுத்த முகநூல் பதிவில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறேன்.

தற்போது, உங்கள் இரஞ்சித் ஆதரவு என்பது எப்படிப்பட்ட தன்மை கொண்டது என்பதை தலித் தோழர்களுக்கும், சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள்.

தோழர் வன்னியரசு பேசியதைப் போல் ஒருக்கால் திராவிட இயக்கத்தவர்களோ, அய்யா சுப.வீ அவர்களோ பேசியிருந்தால் வன்னியரசுவிடம் அமைதி காப்பதுபோல் அமைதியாக இருந்திருப்பீர்களா?

நிச்சயமாக வானமே இடிந்து வீழ்ந்தது போல் துள்ளிக் குதித்திருப்பீர்கள்!

உங்களின் சூழ்ச்சி அரசியலை என்றோ எதிர் கொண்டவர்கள் நாங்கள்!

எழுச்சித் தமிழரோடு இணைந்திருந்த காலத்தில் தலித்துகளையும், திராவிட இயக்கத்தையும் பிரித்தாள முயன்ற பா.ம.க வின் அதே லாபியைத்தான் தற்போது இரஞ்சித் மூலம் அரங்கேற்ற முயல்கிறீர்கள்.

தோழர் வன்னியரசுவை விமர்சித்தால் தனக்கிருக்கும் தலித் ஆதரவாளன் எனும் பிம்பம் நொறுங்கி விடும் என அஞ்சுகிறீர்கள்.

தலித் அல்லாத திராவிட இயக்கத்தவர்களை நோக்கிக் கேள்வி எழுப்புவதன் மூலம் தன்னைத் தலித் போராளியாக கட்டமைத்துக் கொள்ள முயல்கிறீர்கள்.

இதன் மூலம் திராவிட இயக்கத்தையும், தலித்துகளையும் பிரித்துவிடலாம் என எண்ணுகிற உங்களின் எண்ணம் ஒருக்காலும் நிறைவேறாது.

இப்போது கேட்கிறேன்.., "வாசுகி பாஸ்கர், நீங்கள் யார்?"

சுமந்த் சி இராமன், மாலன் போன்றவர்கள் தங்கள் மனத்தளவில் பா.ஜ.கவை ஆதரிப்பார்கள், ஆனால் பொதுவெளியிலோ அ.தி.மு.கவை ஆதரிப்பார்கள்! இதன் மூலம் தங்கள் உண்மையான முகத்தை காட்டாது, தி.மு.க எதிர்ப்பை அ.தி.மு.க கூடாரத்திற்குள் நின்று வெளிப்படுத்துவார்கள்.

இதோ, தற்போது தாங்கள் திராவிட இயக்க எதிர்ப்பை, குறிப்பாக தி.மு.க மீதான எதிர்ப்பை, தலித்துகளின் களத்தில் நின்று வெளிப்படுத்துகிறீர்கள்.

மனத்தளவில் தாங்கள் ஆதரிப்பது யாரை? உங்கள் உள்ளக்கிடக்கை எது?

"நீங்கள் யார்?"

\இன்னும் கொஞ்சம் தெளிவாகவே சொல்கிறேன்..

தி.மு.க ஆதரவாளர்களைக் கண்மூடித்தனமாக விமர்சித்த நீங்கள் என்றாவது மறந்தும் எம் தோழர் வேல்முருகனின் தி.மு.க ஆதரவு நிலையை விமர்சிக்காததன் இரகசியம் என்னவோ?

சமூகநீதிக் களத்தில் நேர்மையாகப் போராடுகிற வேல்முருகன் போன்றோரை மென்மையாகப் பார்க்கிற நீங்கள் எங்களிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வது ஏன்? உங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு, ‘ராஜாங்கம்’ நடத்துவது யார்?

வாசுகி பாஸ்கர் அவர்களே! "நீங்கள் யாருக்கானவர்? உங்கள் அரசியல் யாருக்கானது?"

இன்னும் எவ்வளவோ செய்திகளைச் சொல்ல இயலும்!

வேண்டாம்..!

பார்ப்பனியத்தின் கொடூரமான ஆதிக்கத்திலிருந்து விடுபட அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சியச் சித்தாந்தங்களும், தோழமைகளும் ஒன்றிணைய வேண்டிய தேவையைச் சிதறடித்து விடாதீர்கள்!

அனைத்து மக்களுக்குமான அருமையான ஆளுமையாக உயர்ந்து நிற்கிற எங்கள் எழுச்சித் தமிழரின்பால் இணைந்து நிற்கிற இளைஞர்களைக் குழப்பி, மீன் பிடிக்க முயலாதீர்கள்!

அய்யா சுப.வீ அவர்களையும், திராவிட இயக்கங்களையும் தலித்துகளுக்கு எதிரானவர்களாய்க் கட்டமைக்கிற சூழலைத் தொடர்ந்து முன்னெடுப்பீர்களானால் "நீங்கள் யார்?" என்பதைத் தனியாகக் கேட்க வேண்டியதிருக்கும்!