‘தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ என்ற நிலையிலிருந்து, ‘தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலும் தமிழ் இல்லை’ என்னும் நிலையை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பள்ளி களில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்னும் அரசின் ஆணையை, மெட்ரிகுலேசன் பள்ளிகள் கடுமையாக எதிர்க்கின்றன. அரசின் ஆணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன. ஆங்கில வழிப் பள்ளிகளின் வரைமுறை யற்ற வளர்ச்சியினால், தமிழ்வழியில் படிக்கும் தமிழ்ப் பிள்ளைகள் மிகவும் அருகிவிட்டனர். குறைந்தளவு, தமிழை ஒரு மொழிப்பாடமாகவாவது படித்து, தங்கள் இனத்தின் அடையாளத்தை இழக்காமல் இருக்கட்டுமே என்ற எண்ணத்திலும் மண்ணைப் போடப் பார்க்கின்றனர், கல்வி முதலாளிகள்.

1968இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலங்களிலும், பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் வகையில் அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டன. 68ஆம் ஆண்டு அரசாணையில், ‘பயிற்று மொழியாக வட்டார மொழி அல்லது தாய்மொழி இருக்கலாம்’ என்று இருந்ததை, 1999ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு, ‘பயிற்று மொழியாகத் தமிழ் அல்லது தாய்மொழி இருக்கலாம்’ என்று திருத்தி அமைத்தது. நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக வைக்கும் கல்வி நிறுவனங்களுக்குப் பதிவுக் கட்ட ணம் போன்றவற்றில் சலுகை அளிக்கப் படும் என்றும் கணிதம், விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் இரண்டைத் தமிழில் பயிற்றுவிக்கும் பள்ளிகளின் ஏற்பிசைவு மட்டுமே புதுப்பிக் கப்படும் என்றும், பாடப்புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தி.மு.கழக அரசு ஆணை பிறப்பித்தது.

1999ஆம் ஆண்டின் பயிற்றுமொழி ஆணையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதி மன்ற முழு அமர்வும் அந்த மனுக்களை ஏற்று, அந்த அரசாணையை ரத்து செய்தது. அதை எதிர்த்து, அன்றைய கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு, இன்றும் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், 2003 - 2004ஆம் கல்வியாண்டில், எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்புவரை அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ‘அறிவியல் தமிழ்’ என்னும் ஒரு சொல்லைப் போட்டு, தமிழ்ப் பயிற்று மொழி என்னும் சிக்கலை அப்படியே ஒதுக்கிவிட்டது அ.தி.மு.க. அரசு. எப்போதும் போல், ஜெயலிதாவின் தமிழ் விரோத, தமிழர் விரோதப் போக்கினைப் பட்டும்படாமலும் கண்டிக்கும் தமிழ் உணர்வாளர்களும், தமிழ்த் தேசியக் குழுக்களின் தலைவர்களும் இதிலும் அந்தப்படியே நடந்துகொண்ட காரணத்தால், அம்மையார் அதற்கு மேல் சிறிதும் முக்கியத்துவம் தரவில்லை.

இன்று மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழைக் கற்பியுங்கள் என்று ஆணை பிறப்பிக்கும் நிலையே மோசமா னது என்றால், தமிழைச் சொல்லித்தர முடியாது என்று சொல்வது அதைவிட மோசமானதாகும். ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் தாய் மொழியைப் புறக்கணித்துவிட்டுக் கற்கும் கல்வியால், அவர் சார்ந்த இனமோ, நாடோ எள்முனையளவும் பயனடையப் போவதில்லை. தனி மனிதனின் தற்காலிக நலனை மட்டுமே முன்னிறுத்துகின்ற ஆங்கில வழிப் பள்ளிகளின் பொறுப்பற்ற தன்மையே இந்நிலைக்குக் காரணம்.

திசையெங்கும் சிதறுண்டு கிடந்த போதும், தாய்மொழியை மறவாமல், அதை மீண்டும் உயிர்ப்பித்த காரணத்தால்தான், யூத இனம் இன்று வலிமை பெற்ற இனமாக உருவாகியிருக்கிறது. சீனாவின் வல்லரசுக் கனவு நமக்கு உடன்பாடில்லாத ஒன்று தான் என்றாலும், உலகெங்கும் சீனர்களும், சீன உற்பத்தியும் பரவிக் கிடப்பதற்கு, சீன மொழியின் பால் அவர்கள் கொண்டிருக் கும் பற்றுதலும், அதை உயர்த்திப்பிடிக்கும் போக்குமே அடிப்படை என்பதை நம்மால் மறுக்க முடியுமா?-

ஆனால் நாமோ தமிழ் தெரியாத, தாய்மொழியை அறியாத ஒரு தலை முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில், தமிழர்கள், தமிழை எழுதப்படிக்கத் தெரியாமலேயே, படித்துப் பட்டம் பெற்று, ஒரு வேலை யிலும் அமர்ந்து, வாழ்ந்து மடிந்துபோக முடியும் என்ற அவலத்தை என்னவென்று சொல்வது? மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடமாகக் கூட வேண்டாம் என்பது நியாயமா என்று கேட்டால், ‘பிற மாநிலங்களிலிருந்து வருகின்ற பிள்ளை களுக்கு, பணி இடமாற்றம் காரணமாக வருகின்றவர்களின் பிள்ளைகளுக்கு இது எப்படிப் பொருந்தும்?’ என்று கேட்கி றார்கள். பணி இடமாற்றம் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து வருகின்றவர்களின் பிள்ளைகளுக்கு, மத்திய அரசு பாடத்திட் டத்தின்படி நடத்தப்படுகின்ற வித்யோதயா பள்ளிகள் இருக்கின்றனவே?

இவர்களுக்கு இது ஒரு சிக்கலே இல்லை. கல்வி வியாபாரத்தில், தங்களு டைய கடை மற்றவற்றிலிருந்து வேறுபட் டது, அதுவே சிறப்பானது என்று காட்ட வேண்டிய கட்டாயம் கல்வி வியாபாரி களுக்கு இருக்கிறது. அதனால்தான், எங்கள் பள்ளியில் பிரெஞ்ச், இந்தி, இத்தாலி கற்றுத் தருகிறோம், தமிழை நாங்கள் தொடவே மாட்டோம் என்று விளம்பரப்படுத் துகின்றனர். பெற்றோரும், தமிழைத்தான் வீட்டில் பேசுகிறோமே, பள்ளியில் வேற்று மொழியைப் படித்தால் என்ன என்ற முடிவுக்கு வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால், வீட்டில் பேச்சு மொழியாகக் கூடத் தமிழைக் கேட்க முடியாமல் போகும்.

செத்த மொழி என்றுகூட சொல்ல முடியாத, சமற்கிருதத்தை தேவ மொழி என்று கோயிலுக்குள்ளே அனுமதித்து விட்டு, செம்மொழித் தமிழைக் கல்விக் கூடங்களில் இருந்து வெளியேற்றத் துடிக்கும் தமிழர்களின் அறியாமையை, சுயநலத்தை என்ன செய்து துடைத் தெறிவது? தமிழ்நாட்டில் வெள்ளமெனப் பாய்ந்த தமிழ் ஒளியை, சமற்கிருதம் என்னும் மாயப்போர்வை கொண்டு மறைப்பதற்கு நடந்த சதிச் செயல்களையும், தந்தை பெரியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், தமிழவேள் உமாமகேசுவரனார், திருமணம் செல்வகேசவனார் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் அவற்றை முறியடித்ததையும் வரலாற்றில் பார்க்கலாம்.

ஆனால் இன்று நடப்பது என்ன? அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. ‘தாயே நீயே துணை’ என்று சொல்லப்படுபவர் தாய் மொழிக் கல்விக்கு, தமிழ்வழிக் கல்விக்குக் குழிபறிக்க முயல்கிறார். பன்மொழிகள் பேசப்படும் இந்தியாவின் பிரதமரோ, நான் இந்தியில்தான் பேசுவேன் என்று உறுதி பூண்டுவிட் டார். தமிழகத்தின் மீது கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டதாகத் தெரி கிறது. மாடு விரட் டுக்காக மல்லுக் கட்டும், தமிழ் அறிஞர் களும், உணர்வாளர் களும் இதிலும் சற்றுக் கவனத்தைத் திருப்பினால் நன்றாக இருக்கும் என்பது நம் தாழ்மையான கருத்து.

திருப்பூர், திண்டிவனம், கோபிச்செட் டிப்பாளையம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. மிகுந்த இடர்பாடுகளுக்கு நடுவிலும், தமிழ் மொழி, இன உணர்வோடு, சிறப்பான ஆங்கில மொழிப் பயிற்சி, மனிதநேயத்தோடு கூடிய மனிதகுல மேம்பாடு ஆகிவற்றைப் பாடத் திட்டத்தோடு இணைத்து, தமிழினத்தின் வலிமைமிக்க தலைமுறையை உருவாக்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ்நாடெங்கும் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் பெருகிடச் செய்தால், தமிழினம் அடையாளம் இழக்காமல் இருக்கும் என்பது உறுதி.

Pin It