muthulakshmi ammaiyarஇந்தியாவிலேயே மருத்துவப்பட்டம் பெற்ற முதல் பெண்மணியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெண்ணினத்திற்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர். நீதிக்கட்சி அரசின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பெரும்பங்காற்றியவர் இவர். அன்றைய தமிழ்ப் பேரரசர்களின் நிலவுடைமைச் சமூகத்தில் தோன்றிய தேவதாசி முறை பிற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேடுகளில் ஒன்றாக ஆகியது. பொட்டுக் கட்டுதல் என்னும் சடங்கின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்பட்டது. கோயில் புரோகிதர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பாலியல் தேவைகளை நிறைவு செய்வது தேவதாசிகளின் பணியானது.

இத்தகைய சூழ்நிலையில், தேவதாசி முறையின் கொடுமையினை எதிர்த்துப் பேசியும், எழுதியும் தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் முத்துலட்சுமி அம்மையார். The awakening demand for Devadasi legislation, Why should the Devadasi institution in the Hindu temples be abolished ஆகிய அவரது இருநூல்கள் தேவதாசி முறை ஒழிப்பின் அவசியத்தை எடுத்துரைப்பன.

முத்துலட்சுமி அம்மையாரின் தேவதாசி ஒழிப்பு மசோதாவை ஆதரித்து, தந்தை பெரியார் குடிஅரசு இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார். “கடவுளின் பெயரால் பெண்களுக்கு, விபச்சாரித்தனம் செய்ய பொட்டுக்கட்டுதல் என்னும் பெயரில் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது” என்று சாடிய பெரியார், “ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாகத் தங்கள் பெண்களை இதற்காக உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்ற வகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை?” என்று கேட்கிறார். (குடி அரசு, 30.10.1927). ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் (1930) முத்துலட்சுமி அம்மையாரின் மசோதா விரைவில் சட்டமாக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தைத் தந்தை பெரியார் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

டாக்டர் முத்துலட்சுமியின் பணி பெண்கள் நலத்துடன் நின்றுவிடவில்லை. 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் நிவாரண நிதி அமைப்பை ஏற்படுத்தினார். சென்னை அடையாறில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தையும், மருத்துவமனையையும் உருவாக்கினார்.

பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்த நாள் ஜூலை 30.

தேவதாசி முறை, தனியுடைமையின் சித்தாந்தப்படி ஏற்பட்ட சமூக ஊழல், அனைத்தும் தனிப் பொருளாக மதிக்கப்படுகின்ற படியால், பெண்களும் இந்த சித்தாந்தப்படி தனியுடைமையாகின்றனர். காசு கொடுத்தவனுக்கெல்லாம் சொந்தமாகக் கருதப்படுகின்றார்கள். பொதுவுடைமையில் ஆணும், பெண்ணும் சரி சமத்துவமுள்ளவர்களாதலால் ஒருவரை ஒருவர் காசு கொடுத்து வாங்க முடியாது. - தோழர் சிங்காரவேலர் (குடி அரசு, 15.11.1931)