தொடக்கத்திலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்.

இந்தக் கட்டுரை “அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?” என்று தான் முடியப் போகிறது. எனவே, அதை மனத்தில் கொண்டு கட்டுரையை வாசிக்கக் கோருகிறேன். ஆனால், நிச்சயம் பலரின் கேள்விகளுக்கான விளக்கமும், விவாதங்களுக்கான பதிலும் இருக்கும்... குறிப்பாகப் புதிய தோழர்களுக்கு! இனி மேற்கொண்டு செல்க!

கடந்த மாதத்தின் மத்தியில், ஆசிரியர் பேரன் தம்பி கபிலன் திருமணம் ஜாதி பார்த்து, தாலி கட்டி நடந்த திருமணம் என்றொரு அவதூறு; 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தோழர் ஹரிஷின் திருமணக் காணொளியை எடுத்துப் போட்டு, இது ஆசிரியர் பேரனின் திருமணம் என்றார்கள். விஜயபாரதம் வரை அந்தப் பொய் வெவ்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. உரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. பொய் என்பதற்குச் சான்றுகளுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ki veeramani in charrot

கடந்த வாரம் மற்றொன்று. “பெரியார் திடலில் திராவிடர் கழக ஏற்பாட்டில் ‘காமராஜர் காலம் இருண்ட காலம்’ என்ற தலைப்பில் வே.மதிமாறன் பேசினார். சவாலுக்கு வருவாரா வீரமணி?” என்று ‘ஒன்று’ மல்லுக்கு வந்தது. அக் கூட்டத்தினை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யவில்லை; தலைப்பும் அது இல்லை; கூட்டத்தின் நோக்கமும் அது இல்லை; வே.மதிமாறன் பேச்சிலும் அப்படி இல்லை; இதற்கும் ஆசிரியர் கி.வீரமணிக்கும் தொடர்பே இல்லை என்பதெல்லாம் தெரிந்தபின்னும் அவதூறுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை அளந்துவிட்ட ‘அவாள்’ சேவகர்கள்.

வீரமணி பல்லக்கில் போனார் என்பது நேற்று எழுப்பப்பட்ட இன்னொரு அவதூறு.

ஆசிரியர் பல்லக்கில் தூக்கி வரப்பட்டார் என்ற அவதூறு குறித்து நேரடியாகத் தொடர்பும், மாநாட்டுப் -பேரணியை நடத்திய திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் பதில் சொல்லக்கூடிய உரிமையும் உடையவன் என்ற வகையில் நான் எழுதுவது பொருத்தமானதாக இருக்கும்.

  1. 1. நேரடியாகப் பார்ப்பனர்கள்; ஆர்.எஸ்.எஸ்காரர்கள்; பார்ப்பனர்களின் அடிமையாகத் தான் இருக்கிறோம் என்று தெரிந்து, கால் நக்கிக் கிடப்பதில் சுகம் கண்டவர்கள்; டம்ளர்கள்
  2. 2. தங்களுக்கு நம்புவதற்கு வசதியாக எது வந்தாலும், அதை எவ்வித ஆராய்ச்சியும், கேள்வியும் இல்லாமல் அப்படியே பார்வேர்டு செய்யும் பார்வேர்டிஸ்டுகள்; பொதுப் புத்திக்காரர்கள்
  3. 3. திராவிடர் கழகம் என்ன செய்தாலும், அதில் எதையாவது நொட்டை சொல்லத் தேடும், இயல்பாகவே திராவிடர் கழகத்தின் மீது, ஆசிரியர் மீது கடுப்பில் இருக்கும் பார்ப்பனரல்லாத ஜாதி வெறியர்கள்.
  4. 4. உட்டோப்பியாவில் வாழும் முற்போக்காளர்கள், அதிலும் பெரும்பாலும் இயக்கம் சாராதவர்கள்.
  5. 5. இயக்கங்களில் பங்கேற்காமல், புதிதாகப் பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பேசத் தொடங்கியுள்ளவர்கள். இப்படி செய்வதால் கொள்கைத் தீட்டு எதுவும் பட்டுவிட்டதோ என்று பதறும் தோழர்கள். + பிறரிடம் தங்களைப் பியூரிஸ்ட்கள் என்று காட்டிக் கொள்ள விரும்பி, நடப்பு அரசியல்-சமூகச் சூழல் புரிதலின்றி எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுத்தே ஆக வேண்டும் என்று கருதுபவர்கள்.

‘சாவு ஊர்வலம், பிண ஊர்வலம் போக வேண்டிய வயசில சாரட்டு வண்டியில ஊர்வலம் போற’ என்று சிலர் எழுதியிருந்தார்கள். இவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர்கள் எல்லாம் அல்ப ஆயுசில் போய்விட வேண்டும்‘ என்று சிலர் நினைக்க நினைக்க, பாவம் எம் தலைவர்கள் எல்லாம் நிறைவாழ்வு வாழ்ந்து, ஆரியத்துக்கான சவப்பெட்டியில் ஆணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தலைவர் வீரமணி அவர்களுக்கு இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளுக்கு முன்பே பாடை கட்டித் தூக்கினார்கள் பார்ப்பனர்கள். பின்னர் “சக பார்ப்பான் பிணத்தையே தூக்காத பார்ப்பான், சூத்திரன் வீரமணிக்கு பாடை கட்டித் தூக்கினால் அதுவும் பெரியாரின் வெற்றியே” என்று ஆசிரியர் வீரமணி சொன்ன பதிலில் மூக்கறுபட்டுப் போனார்கள் என்பது வரலாறு!

அய்ந்து முறைகளுக்கு மேலாக, தன் கொள்கைப் பணிகளுக்காக உயிர்த் தாக்குதலுக்கு இலக்காகி மீண்டவர்தான்; மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் ஓயாமல் உழைப்பவர்தான். அதனால் உங்கள் வயிற்றெரிச்சல் எங்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

ஆசிரியர் கி.வீரமணி பல்லக்கில் வந்தார் என்று புரளி கிளப்பியவர்களும் இவர்களே! படத்தைக் கிராப் செய்து சக்கரமும், குதிரையும் தெரியாமல் படத்தைப் பரப்பியவர்களும் இவர்களே! இதைப் பார்த்துத்தான் பல பேர் பொங்கித் தீர்த்தார்கள். பிறகு உண்மை தெரிந்தபின்னும் பின் வாங்க மனமில்லாமல், அடுத்தடுத்து சமாளிபிகேஷன் பதிவுகளைப் போட்டார்கள். குதிரைக்கு வலிக்கிறது என்று புளூ கிராஸ் அவதாரம் எடுக்கவில்லை என்பதைத் தவிர, எல்லாவிதமான வாதங்களையும் வைத்துப் பார்த்துவிட்டார்கள், பாவம்.

நிற்க, எது வந்தாலும் அப்படியே பரப்பிக் கொண்டிருக்கும் இன்னொரு குருப் இதையும் பரப்பியது. அரசியல்வாதிகள் என்றாலே அலர்ஜி என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்களுக்கு, பெரியார் தொண்டர்கள் என்றால் கூடுதலாகக் கொஞ்சம் அலர்ஜி அவ்ளோதான்!

மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது; மனிதனை வைத்து மனிதன் வாகனம் இழுக்கக் கூடாது என்று தடை போட்ட திராவிட ஆட்சியின் சிறப்பெல்லாம் சிலருக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. அதைத் தமிழகத்தில் திராவிட இயக்கம் எப்போது செய்தது? வங்காளம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எப்போது செய்தன என்பதையும் வசதியாக மறந்துவிடுவார்கள். பல்லக்கில் தூக்கிச் செல்லக் கூடாது; பார்ப்பனர்களைச் சுமக்கக் கூடாது என்று கடந்த ஆண்டுவரை போராடி வருவதும், அரசுத் தடை இருந்தும் திருட்டுத் தனமாக பார்ப்பனர்கள் பல்லக்கில் ஏறிச் செல்ல முயன்று நடத்துவதையும் கண்டுகொள்ளவோ தெரிந்துகொள்ளவோ மூளை வேலை செய்யாது இவர்களுக்கு!

ஆசிரியர் அவர்களை சாரட்டு வண்டியில் தான் அழைத்து வந்தோம். நாங்கள் தான் அழைத்து வந்தோம். எங்கள் தலைவர்களை நாங்கள் கொண்டாடத்தான் செய்வோம். இதுவரையும் கொண்டாடித் தான் வந்திருக்கிறோம். எங்களுக்குத் தலைவர்கள் இருக்கிறார்கள் - நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்தம் உழைப்பால் பலன்பெற்ற சமூகத்தில் நன்றியுடையோர் நாங்கள்! அதைக் காட்டத்தான் செய்வோம்.

குறிப்பாக, குடந்தை மண்ணில் எங்களுக்கு சங்கர மடத்தின் போலிக் கிளையின் பூர்வாசிரமம் என்று சொல்லப்படும் குடந்தையில்...

இரட்டைத் தண்ணீர்ப்பானை வைத்து கல்லூரியில் பேதம் பார்த்த குடந்தையில்...

அக்ரஹாரத்தில் இருக்கும் கழிவறையைச் சுத்தம் செய்யவோ, மலத்தை எடுக்கவோ கூடத் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது; தாழ்த்தப்பட்டவர்கள் தொட்டால் எங்கள் மலம் கூடத் தீட்டாகிவிடும் என்று நகராட்சியில் தீர்மானம் போட்ட குடந்தையில்...

தங்களுக்கென காவிரியில் தனிப் படித்துறை ஒன்று கட்டிக் கொண்ட குடந்தையில்...

இது எங்களின் வெற்றிப் பேரணி தான்!

அந்த வெற்றியைக் குறிக்கும் விதமாக சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக நாளும் உழைக்கும் தலைவரை அப்படித் தான் அழைத்து வருவோம்! இப்போ என்னான்றீங்க?

இப்போது மட்டுமல்ல... இதற்கு முன்னும் பல முறை அழைத்து வந்திருக்கிறோம்... இனியும் அழைத்து வருவோம்!

தோளில் துண்டு அணிவது கூடாது என்றவர்களை எதிர்க்கும் அடையாளமாகத் தான் அண்ணா, கலைஞர், ஆசிரியர் உள்ளிட்ட இரண்டாம் தலைமுறைத் திராவிட இயக்கத் தலைவர்கள் துண்டு அணிந்தார்கள். வரலாற்றைத் தொடர்ந்து படிக்காவிட்டால் இந்தத் ‘துண்டு வரலாறு’ புரியாமல், துண்டு துண்டாகத்தான் தோன்றும்.

சாரட்டு வண்டிக்கே இப்படின்னா? தந்தை பெரியாரைப் போலவே, தமிழர் தலைவர் ஆசிரியருக்கும் எடைக்கு எடை வெள்ளிக் காசுகள், காசுகள், ரூபாய் தாள்கள், பிறகு வெள்ளி, தங்கம் கொடுத்தோம். இனியும் கொடுப்போம். ஏனெனில் அவை எப்போதும் அவர் வீட்டுக்கோ, இரத்த உறவுகளுக்கோ போகப் போவதில்லை. அனைத்தும் தந்தை பெரியார் தந்த சொத்துகளைப் போல், கொள்கை பரப்பப் பயன்படும். அவருக்கு எடைக்கு எடை வெள்ளியாகத் தந்த பணம்தான் டெல்லியில் இடமானது. எடைக்கு எடை தங்கமாகத் தந்த பணம் தான் பெரியார் மய்யமானது. அவருக்குத் தரும் ஒவ்வொரு காசும் இந்த இனத்திற்கான பிரச்சாரத்திற்கு அடித்தளம்!

சாரட்டு வண்டிகளில் அழைத்து வரலாமா? பெரியார் காலத்தில் இப்படி உண்டா? பெரியார் இதை ஏற்பாரா? பெரியார் கொள்கையை இப்படி செய்கிறார்களே? என்று சிலர் புலம்பினார்கள். ‘பெரியாரையே அழைத்து வந்திருக்கிறோம். பெரியாரும் அழைத்து வந்திருக்கிறார்’ என்றதும், ‘பெரியாரே செய்தாலும் சரியாகுமா? இப்படிச் செய்வது பகுத்தறிவுக்கு முரணாகாதா? ஏதாவது கொள்கைக் குத்தமாகிவிடப் போகிறது?’ என்றெல்லாம் பிறகு டிராக் மாற்றினார்கள். அவ்வளவு பதற வேண்டிய அவசியமும் இல்லை. இது வழக்கமான நடைமுறை தான். இந்த வரலாறு தெரியாததனால் பலர் குழம்பினார்கள்.

சாரட்டு வண்டிகளின் சரிதம்!

அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் தலைவர்களை அழைத்துவருவது தமிழர்களின் பழக்கம் தான். வரவேற்பு உலா நடத்துவதும், வெற்றி உலா வருவதும் நம் பண்பாட்டின் நீட்சிதான்.

தந்தை பெரியாரை இப்படி அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் அழைத்துச் சென்றது உண்டு. மாட்டுவண்டியிலோ, குதிரை வண்டிகளிலோ, திறந்தவெளி டிரக்குகளிலோ, கார்களிலோ, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களிலோ எல்லா ஊர்களிலும் அழைத்துச் சென்றிருக்கிறோம். முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தபோது தொடங்கி, தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும், தங்கள் சுயமரியாதை இயக்கத் தலைவர்களை தெருத் தெருவாய் இப்படித் தான் ஊர்திகளில் அழைத்துவந்து சிறப்பித்தார்கள்.

1948 ஈரோடு தனி மாநாட்டில் அறிஞர் அண்ணா, தோழர் குஞ்சிதம், தோழர் குருசாமி, தோழர் இந்திராணி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரை இரட்டைச் செங்காளைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் அழைத்து வந்து, உற்சாக நடை நடந்து வந்தார் பெரியார்!

1958 நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சட்டத்தை எரித்து சிறை சென்ற தோழர்களில் விடுதலை ஆகியிருந்த தோழர்களுக்கான வரவேற்பு விழாவில் சிதம்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் பெரியார். அவருடன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், ‘அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்’ என்று ஒப்புமை காட்டி புரட்சிக் கவிஞரால் எழுதப்பட்டதுதான் ‘அவர் தாம் பெரியார்.. தொண்டு செய்து பழுத்த பழம்!’ என்ற பாடல்.

1967 செப்டம்பர் 17 திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அழைத்து வரப்பட்டார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து உற்சாகப்படுத்தியது பேரணி!

1971 சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் தந்தை பெரியார் வந்த டிரக் மீது வீசப்பட்ட செருப்பு தான் தவறி அடுத்த வண்டியில் விழுந்து, ராமனுக்குச் செருப்படி வாங்கித் தந்தது.

திருவாரூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, காரைக்குடி என ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய வரவேற்புகள் நடத்தப்பட்டதுண்டு.

பேரணியில் தலைவர் வர வேண்டுமென்பதற்காக யாருமே வண்டி தராத சூழலில், ராமேஸ்வரத்தில் கடும் எதிர்ப்புக்கும், அச்சுறுத்தலுக்கும், வன்முறைகளுக்கும் மத்தியில் நடைபெற்ற மாநாட்டில், இந்தத் தலைவருக்குத் தராமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தன் சைக்கிள் ரிக்சாவின் மேற்பகுதியைக் கழற்றிவிட்டு ஒரு ரிக்சாக்காரர் தந்த வாகனத்தில் ஊர்வலம் விட்ட வரலாறுகள் உண்டு.

1993 மதுரை சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், எஸ்றா சற்குணம், மலேசியா திருச்சுடர் கே.ஆர்.ஆர் உள்ளிட்டோர் அலங்கார ஊர்தியில் அழைத்து வரப்பட்டனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எத்தனையோ முறை இப்படிப்பட்ட வரவேற்புகள் தரப்பட்டதுண்டு.

தலைவர்களுக்கு மட்டுமல்ல... இசைஞானி இளையராஜா அய்ரோப்பா சென்று சிம்பனி வாசித்து மேஸ்ட்ரோ பட்டத்தோடு திரும்பியபோது அவருக்கு வரவேற்பளித்து பெரியார் திடலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது தந்தை பெரியார் தமிழிசை மன்றம். அப்போது இசைஞானியை அழைத்து வர, இதே தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்ததும் இதே போல சாரட்டு வண்டி தான். பாராட்ட, உயர்த்திப் பிடிக்க இது பண்பாட்டு ரீதியாக ஒரு வழிமுறை... இது ஒரு பெருமிதம். நாங்கள் இவரை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று சொல்லும் செய்கை.

இதையெல்லாம் தனி மனிதத் துதி என்றும், வழிபாடு என்றும் கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஒரு நடைமுறை உண்டு. திராவிட இயக்கம் தத்துவங்களையும், அதை வழிநடத்தும் தலைவர்களையும் அடிப்படையாகக் கொண்டதுதான். இங்கே தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. உருவாகிறார்கள். பிற இயக்கங்களில் வேறு நடைமுறை இருக்கலாம். யாருக்கு எது சரிப்பட்டு வருகிறதோ, அதை எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு தலைவரைப் பின்பற்றுவது என்றால், அவரது சிறப்பு கருதி அவரைக் கொண்டாடத்தான் செய்வோம். தலைவர்கள் லெனினையும், ஸ்டாலினையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் கொண்டாடாதவர்களா? இந்தியாவில் எவரும் பிற தலைவர்களைக் கொண்டாடுவதில்லையா? அப்படித்தான் நாங்கள் பெரியாரை, அண்ணாவை, ஆசிரியரை, கலைஞரை, அம்பேத்கரை, இன்னபிற முற்போக்குத் தலைவர்களைக் கொண்டாடுகிறோம். கண் முன்னே எங்கள் சமூகத்தை உயர்த்தியவர்களை, எங்கள் பாதுகாப்பு அரண்களை நாங்கள் தூக்கிப் பிடிப்பது கொண்டாட மட்டுமல்ல.. கூடுதலாக, கேடயங்களாகவும்தான்!

எனவே, இங்கு யாரும் யாரையும் தூக்கிச் சுமப்பதில்லை. திராவிடர் கழகத்தில் சூத்திரனும் இல்லை; பஞ்சமனும் இல்லை. இங்கு எல்லோரும் இந்த இழிவுகளை உதறித் தள்ளிய தமிழர்கள் - திராவிடர்கள். வர்க்க பேதம் வர்ண பேதம் இல்லாத இயக்கம் திராவிடர் கழகம்.

குதிரையா, மாடா, சைக்கிள் ரிக்சாவா, டிரக்கா, டிராக்டரா, மகிழுந்தா என்பதெல்லாம் சூழலையும் வசதியையும் பொறுத்தது. அதெல்லாம் ஊர்வலத்தின் ஒரு பகுதி அவ்வளவே!

இதைத் தவிர மாநாட்டில் நடந்தவை எவ்வளவோ! வழிகாட்டும் தீர்மானங்கள், வியக்க வைத்த உரைவீச்சுகள், மாணவச் செல்வங்களின் உணர்வுப்பூர்வமான முழக்கம், கட்டுப்பாடு நிறைந்த அணிவகுப்பு, எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்று பேசுவதற்கு எவ்வளவோ உண்டு. இவை பற்றியெல்லாம் எதுவும் பேசிவிடக் கூடாது என்று தானே சாரட்டு வண்டியின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மறைப்பு வேலைகளையெல்லாம் கடந்துதான் எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். இனியும் செய்வோம்.

‘இனியாவது...’ என்று ஆலோசனை சொல்ல ஆரம்பித்தால், “வெயிட் தோழர், அய்டியா கேட்கும் போது சொல்லுங்க!”

இந்த விவாதங்களில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. இயக்கம் சார்ந்து இயங்கக் கூடியவர்களும், இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்தவர்களும், திராவிடர் கழகத்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தவர் மட்டுமல்ல, மற்ற பிறரும், பேரணியைப் பெரிதாகக் கருதினார்கள்; அதன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்கள்; கட்சி மாச்சரியங்களைக் கடந்து இந்துத்துவா கூட்டத்திற்கு இப் பேரணியும், அணிவகுப்பும், மாநாடும், வரவேற்பும் தந்திருக்கும் செய்தி என்ன என்பதையும் புரிந்துள்ளார்கள். இன்னும் களத்திற்குப் பழக்கப்படாதவர்களும், ‘நீங்கள் இதைக் கண்டித்தீர்களா?’ என்று யாராவது நாளை கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சகல பிரச்சினைகளுக்கும் அட்டெண்டன்ஸ் போடும் தொடக்க கால மனநிலையில் இருக்கும் இயக்கங்கள் சாராத தோழர்களுக்குத் தான் அணுகுமுறைக் குழப்பம்.

85 வயதிலும், கல்வியில் திணிக்கப்படும் அத்தனை ஆபத்துகளையும் முன்னுணர்ந்து, எச்சரித்து, ஒருங்கிணைத்து, களம்கண்டு முறியடிக்கும் எங்கள் பாதுகாவலரை, இனத்தின் விளக்கொளியை, மாணவர் சமூகத்தவர் நாங்கள் இன்னும் உயர உயரத் தூக்கிப் பிடிப்போம்! இன்னும் இன்னும் வேலை வாங்குவோம்! இதுவும் அவர் சொன்னது தான். எப்போதெல்லாம் அவருக்குச் சிறப்பென்று நாங்கள் செய்கிறோமோ, அப்போதெல்லாம் “இன்னும் என்னை வேலை வாங்கத்தானே இதனைச் செய்கிறீர்கள். என் ஆயுள் முடியும்வரை அப் பணியைச் செய்து கடன் தீர்ப்பேன்” என்று தான் அவர் உறுதியேற்பார்.

எனவே, வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் சில்லறைப் பிரச்சினைகள், துருப்பிடித்த தூய்மைவாதக் குழப்பங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு களத்திற்கு வாருங்கள். களநிலவரமும் அங்கு செயல்படுவது எப்படி என்பதும் உங்களுக்குப் புரியும். பேரணியில் சிறப்பு ஊர்தியில் தலைவர் வருவதைக் கண்ட பொதுமக்கள் எத்தனை மகிழ்வோடு இதனை வரவேற்றார்கள்; கொள்கை மாறுபாடு கொண்டவர்களாக, கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும், பார்ப்பனியத்திடமிருந்து நம்மை மீட்கும் இயக்கம், தலைமை இதோ நம் ஊரில் என்று பெருமை கொண்டார்கள் என்பதும் புரியும்.

கொஞ்சம் நீளமாகிவிட்டதற்காக வருந்துகிறேன்.

மற்றபடி இறுமாப்போடு சொல்கிறோம்... எங்கள் தலைவர்! தன்னலம் பாராத தலைவர்! நாங்கள் தூக்கிப் பிடிப்போம்! கொண்டாடுவோம்! அப்படித்தான் செய்வோம்! இப்போ

என்னான்றீங்க?  

நன்றி: விடுதலை