மாமழை போற்றுதூஉம் மாமழை போற்றுதூஉம் என்பார் இளங்கோ அடிகளார்.

மாமழையின் காரணத்தால் கர்நாடகக் கபினி அணை நிரம்பி வழிந்தது. இனியும் அங்கே நீரைத் தேக்கிவைக்க முடியாது என்ற நிலையில் திறந்து விடப்பட்ட “உபரி” நீர், காவிரியில் கரைபுரண்டோடி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி விட்டது!

அடடா! புளங்காகிதம் அடைந்து விட்டார்கள் நமது மந்திரிப் பிரதானிகள்.

அதிகாரிகளோ அவர்களையும் தாண்டி, தட்டுகளில் மலர்க்குவியலை ஏந்தி அணையில் கொட்டி மெய்சிலித்துப் போனார்கள், முதல்வர் எடப்பாடியுடன். டெல்டா பிரச்சனை தீர்ந்தது என்று கூட அது இருக்கலாம்! ஒருவேளை மந்திரங்கள் கூடச் சொல்லி இருக்கலாம்!

எல்லாம் சரி, மேட்டூருக்கு வந்த நீர், உச்சநீதி மன்ற ஆணையின் பேரில் அமைந்த காவிரி மேலாண்மை ஆணையம் இட்ட கட்டளையால், கர்நாடக அரசு திறந்துவிட்ட நீரா அல்லது உபரி நீரா!

வந்தது கபினியில் தேக்கி வைக்க முடியாமல் திறந்துவிடப்பட்ட உபரி நீர்தான்!

இந்த உபரி நீர் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு எவ்வளவு காலம் போதுமானதாக இருக்கும்? அதற்குப்பிறகு நிலைமை என்ன ஆகும்?

மழைவடியும்! கபினி மூடப்படும்! நீர்வரத்து குறையும்! மேட்டூர் அணை வற்றும், விவசாயப் பெருமக்கள் மீண்டும் வாடி வதங்கப் போகிறார்கள்!

வந்தது உபரிநீர், மேலாண்மை ஆணையத்தால் அனுப்பப்பட்ட நீர் இல்லை என்பதை இன்னமும் நமது மந்திரிமார்கள் உணர்ந்தாகத் தெரியவில்லை.

இப்போது இருக்கும் நீர் தீர்ந்து போவதற்குள் மேலாண்மை ஆணையத் தீர்ப்பில் சொல்லப்பட்ட நீர் இனிவருமா? கர்நாடக அரசு திறந்து விடுமா?

ஆம்! திறந்து விடத்தான் வேண்டும்! இது இருமாநிலப் பிரச்சனை, தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை என்பதை உணர்ந்து இப்போதே அதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும்!

வழக்கம் போல அ.தி.மு.க. அரசு இப்போதும் தூங்கிக் கொண்டிருந்தால், நாளை பாதிக்கப்படப் போவது தமிழக மக்கள்!

வருமுன் காக்க வேண்டும்! இது சாதாரணச் சொல்வழக்கு. ஆனால் பொருள் பொதிந்தது.

என்ன செய்வது!

உபரி நீரில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள் எடப்பாடியும் அவரின் மந்திரி கூட்டத்தாரும்!

என்ன நடக்கப் போகிறதோ நாளை, எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்!

காவிரித்தாயே! காவிரித்தாயே! எடப்பாடி அரசுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லம்மா! தமிழக விவசாயிகளுக்காகக் கொஞ்சமாவது நடவடிக்கை எடுக்கச் சொல்லம்மா!