karunchettai varalaru 450ஒரு புத்தகத்தின் சிறப்பை எது தீர்மானிக்கிறது?  அதன் பக்கங்களின் எண்ணிக்கையோ, அறிஞர்கள் மட்டுமே அறிகின்ற அழகான மொழி நடையோ, கற்பனை வளமோ அல்ல.  இவற்றையெல்லாம் விட அவசியமான ஒன்று, அதன் சமூகப் பயன்பாடு. சாதிய மற்றும் வர்க்க ஆதிக்கம் தலைவிரித்தாடும் சமூகத்தில் நசுக்கபடுபவனுக்குச் சுயமரியாதை உணர்வை உண்டாக்கும் எந்தப் புத்தகமும் சிறந்த புத்தகமே.

அவ்வகையில் சனாதன சக்திகள் ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில், திராவிட சித்தாந்தத்தின் மீது கடுமையான பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் சமயத்தில் , திராவிட இயக்கத்தின் அடையாளமாகிப் போன கருஞ்சட்டையின் வரலாற்றை, கருஞ்சட்டைப் படை உருவாக்கப்பட்டு 75 ஆண்டு விழா நிறைவடைகிற  சமயத்தில் காலம் கருதி வெளிக் கொண்டு வந்துள்ளதாலேயே இந்தப் புத்தகம் சிறப்பைப் பெறுகிறது. 

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு 1945 திருச்சியில் நடைபெற்ற திராவிட கழக மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட "திராவிடர் விடுதலைப் படை" அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து தொடங்குகிறது கருஞ்சட்டையின் வரலாறு.

பொது உளவியலில் தீமை என்றும், சாமிக்கு ஆகாது என்றும் ஒதுக்கி வைக்கப்படும் கருப்பு நிறத்தை ஏன் பெரியார் நமது அடையாளமாகத் தீர்மானித்தார்?

கருப்புச் சட்டை அணிபவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்?

கருப்புச்சட்டை அணிவதைக் கேலி பேசியவர்களுக்குப் பெரியார் எப்படி எதிர்வினை ஆற்றினார்? 

கருஞ்சட்டை அணிந்ததற்காக நம் முன்னோடிகள் எத்தகைய வன்முறைகளைச் சந்திக்க நேர்ந்தது? 

தாக்குதலுக்குள்ளான இயக்கத் தோழர்களைப் பெரியார் எவ்வாறு பக்குவப்படுத்தினார்? 

1948 இல் கருஞ்சட்டைப் படை தடைவிதிக்கப்பட்டபோது பெரியார் எப்படி அதைக் கையாண்டார்? 

- என்று பல முக்கியமான கேள்விகளுக்குச் செறிவான, ஆதாரப் பூர்வமான பதில்களை இந்தச் சிறிய புத்தகம் வழங்குகிறது. இந்தச் செய்திகள் ஒவ்வொன்றும் நம்மை இன்றைக்கும் வழி நடத்தக் கூடியவை.  

உதாரணமாக இரண்டு செய்திகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் முதலாவது கருஞ்சட்டைப் படையை இவ்வாறு அவர் வரையறை செய்கிறார் "கருஞ்சட்டைப் படை, அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டு பெறவோ அல்லது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாச வேலை செய்து நம் மக்களைப் பலி கொடுக்கவோ, நம் பொருளையே பாழாக்கிக்கொள்ளவோ அல்ல" என்கிறார் .  

இரண்டாவது கருஞ்சட்டைப் படையில் இணைபவர்கள் எத்தகையவர்களாக இருக்கவேண்டும்  என இவ்வாறு கூறுகிறார் "தன்னுடைய நலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தனது மான அவமானத்தை லட்சியம் செய்யாமல் இயக்கத்துக்காகத் தொண்டாற்றுபவர்கள்"

ஒரு இயக்கத்தைக் கட்டமைக்கும் போது அது வன்முறை அற்றதாகவும், வெறுப்புணர்வை விதைக்காமலும், தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமலும் அதேசமயம் தீவிர செயல்பாட்டினால் தன்னையே அழித்துக் கொள்ளாமலும் மிகத் தெளிவான வரையறைகளை கொண்டதாக அமைக்க வேண்டும்.  அதுவே இலக்கை எட்டும்வரை நிலைக்கும் இது ஒரு இயக்கத்தை முன்னெடுக்க விரும்பும் எவருக்கும் பெரியார் கற்றுத் தரும் பால பாடம். அதேபோல சமூகப் பணிக்கு வருபவர்களிடம் பெரியார் எதிர்பார்க்கும் அடிப்படை தகுதி, சமூகத்திற்காக தொண்டாற்றுபவன் தன்மானம் பார்க்கக் கூடாது என்பது. இதுபோன்ற  பல படிப்பினைகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

காவிகளை எதிர்கொள்ளக் கருப்பை நோக்கி நகர்கின்ற இளைஞர் கூட்டம் அதிகரிக்கும் இந்தக் காலகட்டத்தில் கருப்புச் சட்டை அணிவது எதோ பேஷனாக மாறி விடாமல், அதன் ஆழமான அடையாள அரசியலை உணர்ந்து இந்தத் தத்துவத்திற்குத் தன்னையே ஒப்படைக்கக் கருஞ்சட்டை அணிந்தவர்களிடம், அணியவிருப்பவர்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் இது.

கருஞ்சட்டையின் வரலாறு
ஆசிரியர்: வெற்றிச்செல்வன்
வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை: ரூபாய் 25
தொடர்புக்கு: 9940407468, 044 24726408