புத்தர் பெண்களை அனுமதிக்க மறுத்ததற்கு காரணம், அவர் அவர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதினார் என்றும், அவர்களால் சங்கத்தின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினார் என்றும் கூறும் வாதம் – குறிப்பிடப்படுவதற்கு அருகதை உள்ளதே அல்ல. ஏனெனில், அதுதான் அவருடைய உணர்வு எனில், அவர் பெண்களை அனுமதித்திருக்கவே மாட்டார்.

ambedkar_412பிக்குணி (பெண் துறவியர்) சங்கத்தை பிக்கு (ஆண் துறவியர்) சங்கத்தின் கீழ் புத்தர் கொண்டு வந்தார் என்ற வாதம் தவறானது. இத்தகைய ஏற்பாட்டின் பின்னே உள்ள காரணம், முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்டதேயாகும். பெண் துறவிகளை அனுமதிப்பதில், புத்தர் இரண்டு கேள்விகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சங்கம் வைத்துக் கொள்வதா? இரண்டு தனித்தனி சங்கங்களை வைத்துக் கொள்வதென்று புத்தர் முடிவு செய்தார். ஆண்களையும் பெண்களையும் ஒருசேர வைத்துக் கொண்டால், பிரம்மச்சரியம் என்ற விதி முழுமையாகத் தொலைந்து போய்விடும் என்று அவர் அஞ்சினார்.

எனவே, பெண்களை அனுமதிக்கும்போது, அவருடைய சொந்த சொற்களையே பயன்படுத்துவதெனில் – இரு தனித்தனி அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு இடையில் ஓர் தடுப்பை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் எண்ணினார். இரு தனித்தனி அமைப்புகளை உருவாக்குவதென்று முடிவு செய்து விட்ட பிறகு, மற்றொரு கேள்வி அவரை எதிர்கொண்டது. ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் இரு தனித்தனி சங்கங்கள் இருக்க வேண்டுமெனில், அவை முற்றிலும் சுதந்திரமான தனி அமைப்புகளாக இருப்பதா அல்லது அவற்றுக்கு இடையில் ஏதாவது ஒருவகை தொடர்பு இருக்க வேண்டுமா?

முதலாவது பிரச்சினையைப் பொருத்தவரை, பெண்களின் சங்கம் ஆண்களின் சங்கத்திலிருந்து தனியாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எந்த முடிவும் சாத்தியமல்ல. இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும் பிரம்மச்சரிய விதியிலிருந்து எழுகின்ற இது, தவிர்க்க முடியாத விளைவாகும். ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பாலியல் உணர்வு எவ்வளவு வலுவான ஆற்றலுடையது என்பதை புத்தர் அறிந்திருந்தார். புத்தரின் சொந்த சொற்களிலேயே கூறுவதெனில், இந்த உணர்வுதான் ஓர் ஆணைப் பெண்ணின் பிணைப்புக்குள்ளும், ஒரு பெண்ணை ஆணின் பிணைப்புக்குள்ளும் செல்வதற்கு உந்தித் தள்ளுகிறது. இது, தன் முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால், பிரம்மச்சரிய விதி ஒரு நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாது. பிரம்மச்சரிய விதியைப் பாதுகாப்பதற்கு, அவர் இரு தனித்தனி சங்கங்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

இரண்டாவது பிரச்சினையை எடுத்துக் கொண்டால், புத்தர் மேற்கொண்ட முடிவைத் தவிர வேறு எந்த முடிவும் சாத்தியமா? அவருடைய சமயத்தில் சேர்ந்த பெண்கள் (பயிற்சி பெறாத) திருமணமாகாத பெண்களாவர். அதிலும் அவருடைய தத்துவத்தில் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. அவருடைய கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டியிருந்தது. இந்தப் பணியை வேறு யாரிடத்தில் அவரால் ஒப்படைத்திருக்க முடியும்? அவருடைய சங்கத்தைச் சேர்ந்த ஆண் பிக்குகளைத் தவிர, வேறு யாரிடமும் ஒப்படைத்திருக்க முடியாது. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே அவருடைய தத்துவத்தில் பயிற்சி பெற்றிருந்தனர். அவருடைய ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் பயிற்சி பெற்றிருந்தனர். இதைத்தான் புத்தர் செய்தார்.

முன்னவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியைப் பின்னவர்களிடம் ஒப்படைத்ததன் மூலம், பிக்குகளுக்கும் பிக்குணிகளுக்கும் இடையில் எத்தகைய உறவு ஏற்படுத்தப்பட்டது? இது, எழுப்பப்பட வேண்டிய ஓர் அவசியமான கேள்வியே. இது இல்லாமல், பிக்குகள் சங்கத்திடம் பிக்குணி சங்கம் பணிந்து போகாதது பற்றிய விளக்கம் தெளிவாகவில்லை. இந்தக் கேள்விக்கான வெளிப்படையான பதில், பிக்குணிகளைப் பயிற்றுவிக்கும் பணியை பிக்குகளிடம் ஒப்படைத்ததன் மூலம் –அவர்களிடையிலான உறவு, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவாயிற்று. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு, மாணவரின் மீது ஆசிரியருக்கு ஒரு வகை அதிகாரம் கொண்டதாகவும், மாணவர்கள் ஆசிரியருக்குப் பணிந்து போக வேண்டும் அல்லது அடங்கிப் போக வேண்டும் என்பதைக் கொண்டதாகவோ இல்லையா? புத்தர் வேறு என்ன செய்தார்?

இது தொடர்பாக, கிறித்துவ மதத்தில் ஆண் துறவியர் மடங்களுக்கும், பெண் துறவியர் மடங்களுக்கும் உள்ள உறவு முறையை ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். பெண் துறவியர் மடம், ஆண் துறவியர் மடத்திற்கு கீழ்ப்பட்டதல்லவா? ஆம், அவை அவ்வாறுதான் இருக்கிறது. எனவே, இதிலிருந்து, கிறித்துவ மதம் பெண்களை ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகக் கருதுகிறது என்று எவராவது கூற முடியுமா? அப்படியெனில், பிக்குகளுக்கும் பிக்குணிகளுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவதற்கு – புத்தர் செய்த ஏற்பாடு தொடர்பாக வேறு எவ்வாறு விவாதம் செய்ய முடியும்? சுத்த பிடாகத்தைப் பொருத்தவரை, பெண்களுக்கு எதிராக புத்தர் தப்பெண்ணம் கொண்டிருந்தார் என்றும், பெண்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி ஆண்களை எச்சரித்தார் என்றும் கூறக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 115

Pin It