கவிஞர் இசாக் எழுதிய 'மௌனங்களின் நிழற்குடை' கவிதை நூல் வெளியீட்டு விழா 22.08.2008 வெள்ளிக்கிழமை துபாய், கராமா சிவ்ஸ்டர் பவன் உணவக விழா அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் மீரா. அப்துல் கதீம் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தோரை பேரவையின் விழா ஒருங்கிணைப்பாளர் வெ. பாரத் வரவேற்றார்.

கவிஞர் இசாக்கை அவையோருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் கவிஞர் சே. ரெ. பட்டணம் மணி 'கவிதை எழுதும் இசாக்' என்னும் தலைப்பிலும், அமீரகத் தமிழ் மன்ற தலைவர் விமர்சகர் ஆசிப் மீரான் 'இசாக் எழுதிய கவிதை' என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். அதன் பின் கவிஞர் பேரவையின் தலைவர் மீரா.அப்துல் கதீம் நூலை வெளியிட காயிதே மில்லத் பேரவை செயலாளர் குத்தாலம் லியாகத் அலி பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீட்டிற்கு பிறகு கவிஞர் நண்பன் வழங்கிய நூல் பற்றிய ஆய்வுரையில் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தன்மைகள் பற்றியும் இனி இசாக் கவனத்தில் கொள்ள வேண்டிய கவிதை நெறிகள் பற்றியும் விரிவாக பேசினார், அவரைத் தொடர்ந்து ஆய்வுரை வழங்கிய கவிஞர் மு.முத்துகுமரன் அவருக்கு பிடித்த கவிதைகளைக் குறிப்பிட்டு அவை உணர்த்தும் கருத்துகளை விளக்கி நூலில் இடம் பெற்றுள்ள படங்கள் வாசிப்பவனின் ரசனையை இடையூறு செய்கிறது என்றார்.

அமீரகத் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களான முத்தமிழ்வளவன், சி.கருணாநிதி (தாய்மண் வாசகர் வட்டம்), கலையன்பன் (சங்கமம் தொலைக்காட்சி), தாகா (துபாய் தமிழ்ச் சங்கம்) அன்வர் பாட்சா (வளைகுடா தமிழர் பேரவை) ரகுராஜ் (சுடர்வம்சம்) அப்துல் காதர் (உ.அ.கு தமிழர் நற்பணி மன்றம்) காவிரிமைந்தன் (வானலை வளர்தமிழ்) தொழிலதிபர் ஆலிம் செல்வன், எம். அப்துல்ரகுமான் (ஈமான்) மற்றும் சமூக ஆர்வலர்கள் இஸ்மத், எஸ்.எம்.பாரூக் உள்ளிட்ட சான்றோர்கள் வாழ்த்தும், கருத்தும் சொல்ல, கவிஞர் இசாக்கின் ஏற்புரைக்குப்பின் குமார் நன்றியுரை ஆற்ற விழா நிறைவடைந்தது.

- இசாக்

Pin It