செயலி அறிவோம் - எவர் நோட்

சென்னை, சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல்., சென்னை புத்தகக் காட்சியின் அரங்கில் இறையன்பு ‘தலைமைப் பண்பு’ குறித்து பேசிக்கொண்டு இருந்தார். பத்து பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையைக்கூறி அற்புதமாக முடிந்த உரை அது. இறையன்பின் தனித்துவம் என்பது பல்வேறு நூல்களில் இருந்து எடுத்துத் தொடுக்கப்பட்ட அற்புதமான மேற்கோள்கள் உள்ளடக்கிய தெள்ளிய நீரோடை போன்ற சிறப்பான பேச்சு நடை. அதை கேட்டுக்கொண்டு இருந்த வேளையில் நான் எங்கே, எந்த நிலையில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் என்பதையே மறந்த அற்புதமான மாலைப்பொழுது அது.

ஐந்தாறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் சொன்னவை பட்டும் படாமலும் நினைவில் இருந்தது. நினைவில் நின்ற அருமையான உரைகளின் சுருக்கத்தை எப்போதும் என் மகளிடம் பகிர்வது என்னுடைய வழக்கம். ஒரு குறிப்புக்காக அந்த ஒலிப்பதிவினை தேடியபோது கிடைக்கவில்லை. ஆனால் அந்த மேடைப்பேச்சினை நான் பதிவு செய்த ஞாபகம் மட்டும் நினைவில் இருக்கிறது.

ஆனால் அதன் பிறகு ஐந்தாறு மொபைல் ஃபோன்கள் மாற்றிவிட்டேன். பழைய கைபேசியில் இருந்த எந்த பதிவுகளும் தற்போது என்னிடத்தில் இல்லை. முதன்மையான ஒலிப்பதிவுகளை எப்போதும் எவர்நோட்டில் பதியும் ஒரு பழக்கம் அப்போது எனக்கு இருந்தது.

கணினியில் எவர் நோட்டை நிறுவி தேடிப்பார்க்கிறேன். இறையன்பு அவர்களின் உரைவீச்சு மட்டுமல்ல, நான் தொழிற்சங்கத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த அனைத்து கார்ட்டூன்களையும் மீட்டெடுத்தேன். காணாமல் போன குழந்தையைத் தொட்டு அணைத்து உச்சி முகர்ந்த இன்பத்தை அடைந்தேன். தோழர்களே உங்களிடத்தில் அந்த வழிமுறையினை சொல்லாமல் போய்விடுவேனா என்ன?

அப்படி என்னதான் இருக்கிறது எவர்நோட்டில். எங்கேயும் எப்போதும் ஓர் உற்றத் துணைவன் உடன் இருந்தால் எப்படி இருக்கும். அந்தத் துணைவனுக்கான பணியைத்தான் செய்கிறது இந்த எவர் நோட் (Evernote) .

இந்த செயலியினை பிளே ஸ்டோர் சென்று நிறுவிக்கொண்டால் போதும். உங்கள் மின்னஞ்சல் முகவரியும், ஒரு கடவுச்சொல்லையும் வைத்து உள்ளே நுழையலாம். ஓர் அற்புதமான செயலி நமக்கு கிடைத்து விட்டது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

முக்கிய ஆவணங்கள், நிழற்படங்கள், உங்கள் கைப்பிரதிகள், பட்டியல்கள் என எது வேண்டுமானாலும் இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு அங்காடியில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள். பொருளுக்கான பட்டியல் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்பதாக வைத்துக் கொள்வோம். இதனை கைபேசி கேமராவைக் கொண்டு ஒரு க்ளிக் செய்தால் போதும். ஒரே சொடக்கில் உங்கள் மொபைலுக்கு வந்துவிடும்.

ஒரு அற்புதமான கருத்தரங்கில் கலந்து கொள்கிறீர்கள், அங்கே உங்கள் மனம் கவர்ந்த தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார். குறிப்பெடுக்க நேரமில்லை என்ற கவலையெல்லாம் இனியில்லை. கைப்பேசியில் இருக்கும் எவர் நோட் செயலி வழியே ஒரே சொடக்கு. அனைத்தும் உங்கள் கைகளில். நீங்கள் பாதுகாக்க வேண்டிய ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணம், குறிப்புகள், நிழற்படங்கள் என அனைத்தையும் பல்வேறு ஃபோல்டர்கள் வழியே சேமித்து வைத்துக்கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வேர்டு, எக்செல், பவர்பாய்ன்ட் என எந்த வகை ஆவணமாக இருந்தாலும் இதில் சேமிக்க முடியும்.

இது ஒன்றும் பெரிய வியப்பு இல்லை, இது சாதாரண திறன்பேசியிலேயே சாத்தியம் தானே என நீங்கள் நினைக்கலாம். சாதாரணமாக திறன்பேசியில் சேமிப்பதின் மூலம் அவை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே நிரம்பிவிடும். எதை எங்கே சேமித்தோம் என்பது நமக்கே சில நேரங்களில் குழம்பிவிடும். இந்த செயலியின் உதவியால் அனைத்தும் ஒரே இடத்தில், அதுவும் நாம் விரும்பும் தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

சிறப்பான செய்தி என்னவெனில், நீங்கள் எந்த ஆவணத்தை சேமித்தீர்களோ அதனை உங்கள் கணினி வழியே நொடிப்பொழுதில் பெறலாம். ஆம், கணினியில் சேமிப்பதைத் திறன்பேசியிலும், திறன்பேசியில் சேமிப்பதைக் கணினியிலும் எளிதில் ஒத்திசைவு ஆகிவிடும். எனவே நீங்கள் எங்கு சென்ற போதும் உங்கள் ஆவணம் கூடவே வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட உபகரணத்தில் ஒரே நேரத்தில் சேமித்து வைக்கலாம்.

திடீரென உங்கள் திறன்பேசி தொலைந்து போனாலோ, அல்லது சேதமடைந்தாலோ இனி நீங்கள் அச்சமோ, கவலையோ கொள்ளத்தேவையில்லை. பயனர் சொல்லையும் கடவுச்சொல்லையும் இட்டால் போதும். நீங்கள் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக துள்ளிக் குதிப்பீர்கள்.

மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இன்னும், இன்னும் கூடுதல் வசதிகள் தருகின்றனர். அதற்கு நாம் இந்த செயலிக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக இந்த செயலி, பல முதன்மையான செய்திகள் தன்னகத்தே எப்போதும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களும், எழுத்தாளர்கள், செய்தியாளர்கள், ஊடகப்பிரிவைச் சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள் என நிச்சயம் தங்கள் திறன்பேசியில் வைத்திருக்க வேண்டிய செயலியாகும்.

பல மில்லியன் பேர் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ளியீயீறீவீஸீமீ லும் பயன்படுத்தலாம். எப்போது இணையத்தை நீங்கள் இணைக்கிறீர்களோ அப்போது இதுவாகவே ஒத்திசைவு ஆகி உங்கள் பதிவுகள் பாதுகாக்கப்படும்.

இடைத்தேர்தல் இருபது ரூபாய் நோட்டை நீங்கள் வைத்திருந்தால் அது உங்களுக்குப் பயனளிக்குமா என்பதெல்லாம் எனக்குத்தெரியாது. ஆனால், இந்த எவர்நோட் செயலி உங்களிடத்தில் இருந்தால் உங்கள் தனிச்செயலர் போல உங்களுக்கு அவசர நேரத்தில் உதவும் என்பதில் ஐயமேதுமில்லை.

இந்த செயலியினைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

https://play.google.com/store/apps/details?id=com.evernote&hl=en