jayalalitha ingulab

2015 டிசம்பர், மழை வெள்ளத்தோடு முடிந்தது. கடந்த டிசம்பர் மாதம் சென்னையைப் புயல் தாக்கியது. அதற்கு முன்பே டிசம்பர் 1 தொடங்கி, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட, தமிழகம் அறிந்த ஆளுமைகள் பலரை, காலம் அள்ளிக்கொண்டு போய்விட்டது.

செல்வமும் செல்வாக்கும் சேர்கின்ற இடம் என்பதால், அரசியல் எப்போதுமே போட்டி, பொறாமைகளுக்கு உரிய இடமாக உள்ளது. அதிலும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் அரசியலின் உச்சத்திற்கு வருவது என்பது ஒரு சாதனை என்றே கூற வேண்டும். அத்தகு சாதனையை நிகழ்த்தி விட்டுத் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்துள்ளார்.

‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ போன்ற போர்க்குணம் மிக்க பாடல்களால், மக்கள் கவிஞராய் நம்மிடையே வாழ்ந்த போற்றுதலுக்குரிய கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் தோழர் இன்குலாப் டிசம்பரின் தொடக்கத்திலேயே மறைந்து போய்விட்டார்.

கரூருக்கு அருகில் உள்ள வாங்கலாம் பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, அறிவியல் உலகில் புகழ் பெற்றுத் திகழ்ந்து, குலோத்துங்கன் என்னும் கவிஞராகவும் உயர்ந்து, இறுதி வரையில் பகுத்தறிவாளராய் வாழ்ந்து, தமிழகத்திற்கே பெருமை சேர்த்த அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களையும் இந்த டிசம்பரில் நாம் இழந்து விட்டோம்.

‘மேக்கிலி மங்கலத்துப் போக்கிலி’ என்று அறிஞர் அண்ணாவால் செல்லமாய் அழைக்கப்பட்ட, ‘தஞ்சை மண்டலத்தின் தளகர்த்தர்’ என்று கலைஞரால் பாராட்டப்பெற்ற, தி.மு.கழகத்தின் தளபதிகளில் ஒருவராய் விளங்கிய, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களையும் இந்த டிசம்பர் மாதம் எடுத்து சென்றுவிட்டது.

இறுதிநாள் வரையில் திராவிட இயக்கத்திற்கு எதிரான கருத்துகளைத் தன் எழுத்தில் பதித்து வந்தாலும், இந்துத்துவ & பார்ப்பனியச் சிந்தனைகளுக்கு அடித்தளமாய் இருந்து வந்தாலும், தன் நையாண்டி எழுத்தால், தன் பன்முக ஆற்றலால் புகழ்பெற்றவராய் விளங்கிய நடிகர், துக்ளக் இதழின் ஆசிரியர் சோ ராமசாமியும் சென்ற மாதம் இறந்து போய்விட்டார்.

மறைந்துவிட்ட அனைவரின் உறவினர்கள், நண்பர்கள், கட்சியினர், அமைப்பினர் அனைவருக்கும் நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.