2022, ஜனவரி மாதம், ஒன்பதாம் நாள். தஞ்சை, திருக்காட்டுப் பள்ளி, தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்த 12ஆம் வகுப்பு மாணவி லாவண்யா, பூச்சி மருந்து குடித்துள்ளார்.

4 நாட்கள் வீட்டில் மருத்துவம் பார்த்தும் கேட்காததால் 15ஆம் நாள் அவரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் தந்தை. அங்கு மருத்துவ ஆய்வில் அவர் பூச்சி மருந்து குடித்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தற்கொலை முயற்சியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், 16ஆம் நாள் காவல் துறை அவரிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளது. அதில் எதிலும் லாவண்யா மதமாற்ற நிர்ப்பந்தம் இருந்ததாகக் கூடக் கூறவில்லை. தன்னிடம் அதிகமான வேலை வாங்கியதாக அவர் விடுதிக் காப்பாளர் பெயரைச் சொல்லி இருக்கிறார். 18ஆம் நாள் விடுதிக் காப்பாளர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழக அரசு எல்லாக் கோணங்களையும் ஆய்வு செய்து, குற்றவாளிகளைத் தண்டிக்க உறுதி பூண்டுள்ளது.

இதன் நடுவே, வடுகபாளையத்தைச் சேர்ந்த விசுவ இந்து பரிஷத்தின் பொறுப்பாளர்கள் முத்துவேல், சேகர், அசோக் ஆகியோர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுத் தங்கள் அரசியலுக்கு ஒரு தூண்டில் மீன் கிடைத்ததாகக் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் அந்த மாணவியிடம் மதமாற்றக் கோணத்தைப் போட்டு வாங்கி உள்ளதாகவே சந்தேகிக்க வேண்டி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு கன்னியாத்திரீ அவருடைய பெற்றோரை மதம் மாறக் கேட்டதாக அவர் அந்தக் காணொளியில் கூறுகிறார். உடனடியாக அந்தக் காணொளியை எடுக்கும் நபரே, “அதனால்தான் உன்னைத் தொந்தரவு செய்தார்களா?” என்று முடிக்கிறார்.

இந்தக் காணொளியை பா.ஜ.க. வினர் ஒரு மத வெறுப்பு அரசியலுக்கான ஆயுதமாக எடுத்திருப்பதையே தொடர்ந்து நடக்கும் செய்திகள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. “இருக்கலாம்” என்று அக்கேள்விக்குப் பதில் சொன்ன மாணவி இன்று உயிரோடில்லை. பா.ஜ.க. இந்தச் சத்தற்ற மிகப் பலவீனமான, கேட்டு வாங்கப்பட்ட அந்த ஒரு வாக்கியத்தை வைத்தே ஒரு பெரும் அரசியல் அதிரடிக்கு, கலவரத்திற்குத் தயாராகி உள்ளது. 19ஆம் நாள் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்குத் தயார் செய்த நிலையில், அன்றுதான் மாணவி இறக்கிறார்.

சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், பார்ப்பனப் பேராசிரியர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு மன உளைச்சலால் பாத்திமா என்ற மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்தபோதோ, ஹைதராபாத்தில் பல்கலையில் ரோஹித் வெமூலா என்ற ஒடுக்கப்பட்ட மாணவன் தன் முனைவர் ஆய்வுப் படிப்பை எல்லாம் துறந்து தற்கொலை செய்தபோதோ, இன்னும் இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினரோ, அல்லது இடை நிலை அல்லது உயர் சாதியினரோ கூட பார்ப்பன அதிகார மையங்களால் துன்புறுத்தப் படும்போது அதைப் பொருட்படுத்தக் கூடச் செய்யாத காவிக் கூடாரங்கள்தான் சிறுபான்மை நிறுவனங்கள் எங்காவது சிக்கினால் அதை வைத்து இங்கே சடலங்கள் விழ வைக்கவும், அதன் வழி தங்கள் அரசியல் இருப்பை வலுப்படுத்தவும் முயல்கின்றன.

அண்ணாமலைக் குழுவினரின் இரத்த வரலாறுகளுக்குத் தமிழ்நாட்டைப் பலி கேட்கிறது இந்துத்துவம். அவர்களுடைய சதி வலைக்குள் சிக்கிய மாநிலங்கள் யாவும் வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி ஒருவரை ஒருவர் வெறுத்து, மோதல் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த வழக்கின் போக்கு இந்துத்துவ கலவர அரசியலுக்கு வழி கோலுவதை எண்ணி மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றன காவிக் கூடாரங்கள். இந்தியா முழுவதிலும் இதைப் பெரிது படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளது பா.ஜ.க. வடக்கின் ஊடகங்கள் இந்த வழக்கை பூதாகரமாகப் பேச வைக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு தனித்த நாடு. இங்குக் காவிக் கூடாரங்கள் வாலாட்ட இயலாது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கோவை மட்டுமல்லாது, தற்போது திருச்சியும், தஞ்சையும் கூட வெறுப்பரசியலில் சிக்கி இருப்பதை நாம் மிகுந்த கவலையோடும் பொறுப்போடும் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. மக்கள் இயக்கங்கள் மிகவும் கூடுதலாக மட்டுமல்ல மிக அவசரமாகவும் தேவைப் படுகின்றன. லாவண்யா வழக்கில் உண்மைகளை உரத்துச் சொல்ல சுதந்திரமான கள ஆய்வுகள் தேவைப் படுகின்றன.