“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.
அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக் கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது. அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.
மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள் பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர். ஆம். சிங்கள அரசின் முயற்சிக்கு சிங்கள அதிகார வர்க்கத்தின் நீண்ட நாள் ‘நண்பர்’ ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலி உதவினார். ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நினைத்த சிங்கள அரசின் எண்ணத்திற்கேற்ப தாளமிட்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள். ஆம் சிங்கள அரசுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சிலருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர் அசன் அலி. அதற்கு அவர்கள் தலைவி ராஜிவ்காந்தி கொலை பயன்பட்டது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை மட்டுமே வெறும் சாக்காக வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஈழ ஆதரவையும் விடுதலைப் புலிகளின் ஆதரவு போராட்டம் என்றும், விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்தி எங்கள் தலைவர். அவரைக் கொன்றவர்களை நாங்கள் எப்படி ஆதரிப்பது? என்றும் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிப்பது தேசத் துரோகம் என்றும் ஆகவே நடைபெறும் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானது என்றும் ஆகவே அதை ஆதரிக்க முடியாது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை கணிசமாக நீர்த்துப் போகச் செய்ததில் காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதன் உச்சகட்டமாக எழுந்த வசனங்கள் தான். ‘‘ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’. என்னும் திரைப்பட பாணியிலான வசனம்.
பதவிக்காக எந்த இழி செயலையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸ், தாம் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா, கருணாநிதி, கம்யூனிஸ்டுகள் ஏன் பெயரளவு கொள்கை கூட இல்லாமல் நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உட்பட யாருடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் காங்கிரசார். பதவிக்கு வந்து விட்டால் இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்திலும் ஊழல் புரிவதில் கை தேர்ந்த காங்கிரசார் 17 வருடங்களுக்கு முன் செத்துப் போன ராஜீவ்காந்தி விஷயத்தில் மட்டும் அவர் ஆவியே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் ராஜீவ்காந்தி பேரிலான தீராத அன்பின்பால் குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்களா? என்று பார்த்தால் அது நீலிக் கண்ணீர் என்று நடந்தவற்றை ஆராயும் போது தெரிகிறது.
ஆம். சில ஓட்டுக்கள் வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை மாயாவை களத்தில் இறக்கும் காங்கிரசாருக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்குவதற்காக ராஜீவ்காந்தி மரணம் பயன்படுகிறது ஆகவே களத்தில அவரை வைத்து தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று மேலோட்டமாக கருத முடியாது. ராஜீவ்காந்தி அவர்களுக்கு இன்னும் ‘மதிப்பு’மிக்க தலைவர். அதை அவர்களுக்கு ராஜபக்ஷே ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி மூலம் புரிய வைத்தார். அசன் அலிக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் இடையேயான தொடர்பு பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.
ராமநாதபுரம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கும், இலங்கையின் தற்பொழுதைய அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நீண்ட காலமாக ‘நெருக்கமான’ தொடர்பு உண்டு. ஆகஸ்டு மாதம் 2005 ஆம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பாக அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வாழ்த்துக் கூறி அசன் அலி கடிதம் எழுதுகிறார். அவரது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார். அப்பொழுது அசன் அலி சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அதன்பின்பு மகிந்த ராஜபக்ஷே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அசன் அலிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார் (கடிதம் பார்க்க). இலங்கை எதிர்க்கட்சிகள் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் அசன் அலியை வாழ்த்துகிறார். மற்றும் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராஜ்பக்ஷ எழுதிய வாழ்த்துக் கடிதம்)
இங்கு நம் முன் எழும் வினாக்கள்
1) பிரதமராக இருக்கும் ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படும் பொழுது அசன் அலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுகிறார். அசன் அலி எந்தப் பதவியிலும் அப்பொழுது இல்லை. சென்னையில் வாழும் சாதாரண இந்தியக் குடிமகன். ஆனால் அவர் ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
2) அசன் அலி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதும் அவருக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். தமிழகத்தின் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கு இன்னொரு நாட்டின் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவரும் போட்டி போட்டு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
3) காங்கிரஸ் கட்சியில் இங்கு பலபேர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி போட காத்திருக்கையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத அசன் அலிக்கு சீட் கிடைத்தது எப்படி?
4) ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர வன்னி, மலேசியா பாண்டியன் போன்றோருக்கு தான் சீட் கிடைக்கும் என்று அங்குள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, தொகுதிக்கு தொடர்பில்லாத அசன் அலிக்கு சீட் எவ்வாறு கிடைத்தது?
அசன் அலி தமிழக சட்டமன்ற உறுப்பினரான பின்பு இலங்கையின் அதிகார மட்டத்தினருடன் தொடர்பு அதிகரிக்கிறது. தனது நட்பு வட்டாரத்தை காங்கிரஸ் எம். எல். ஏ. க்களில் அதிகரித்து வந்தார். வேலூர் எம். எல். ஏ. ஞானசேகரன் போன்றோர் இதில் அதிக நெருக்கமாகின்றனர். ‘ஒற்றுமை’யாக இருக்கின்றனர். தங்களுக்குள் அனைத்தையும் ‘பகிர்ந்து’ கொள்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் தற்பொழுதைய சம்பவங்களை ஒட்டி ஈழத்தமிழர் ஆதரவு அலை அதிகரிக்கவே அதனைக் குறுக்குச் சால் ஓட்டிக் கெடுக்கும் விருப்பத்தின் விளைவாக 29. 10. 2008 அன்று ராஜபக்ஷே அசன் அலியுடன் பகல் 11 மணிக்கு பேசுகிறார். தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் பரிமாறப்படுகின்றன. தொலைபேசி பேச்சுக்குப் பிறகு அசன் அலி துரிதமாகச் செயல்படுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அவரே அனைத்து காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் அவரது தொலைபேசியில் இருந்து பேசுகிறார். அதன்படி 23 நவம்பர் 2008 அன்று காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.
எதிர்பார்த்தபடியே வேலூர் ஞானசேகரன் எம். எல். ஏ. உட்பட பலரும் வஞ்சனை இன்றி வீர உரை நிகழ்த்துகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார். கூட்டத்திற்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மனித சங்கிலியில் தமிழக காங்கிரஸ் பஙகேற்கவில்லை என்ற நிலைப்பாடு எடுக்கிறது. அதற்கு அவர்களுக்கு ராஜீவ்காந்தி கொலை பயன்படுகிறது. மனித சங்கிலி போராட்டத்திற்கு பின்பு நிலவரம் மாறுகிறது. பிரணாப் முகர்ஜி வருகைக்குப் பிறகு தமிழக முதல்வர் எம். பி. க்கள் ராஜினாமா இல்லை என்ற முடிவுக்கு வரும் தமிழக முதல்வர் ஈழத் தமிழர் நிவாரண நிதி வசூல் செய்கிறார்.
அதன்பின்பு 4. 11. 2008 அன்று காலை 10 மணியிலிருந்து அசன்அலி ராஜபக்ஷேவுக்கு தொலைபேசியில் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. அதன்பின்பு காலை 12 மணிக்கு ராஜபக்ஷே நேரடியாக அசன் அலியின் கைபேசி 9444112374 எண்ணுக்கு பேசுகிறார். தொலைபேசியில் ராஜபக்ஷேவுடன் பேசியதை அசன் அலியே குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடமும், ஜூனியர்விகடன் நிருபரிடமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏறத்தாழ 25 நிமிடம் பேசிய பின்பு அசன் அலி சக தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுடன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அன்றே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் மிக முக்கியமானது.
‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க ஒரு தூதுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை (!) நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்துகிறார். அந்தத் தூதுக்குழுவில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்களிடமும் மற்றும் இலங்கை அதிகாரிகளிடமும் பேசி 50 ஆண்டுகளாகத் தீராத இலங்கைப் பிரச்சனையைத் தான் தீர்த்து வைப்பதாக நமது முதல்வருக்கே உத்தரவாதம் (!) அளிக்கிறார். அதேபோல அக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தானே செய்து தருவதாக உறுதிமொழி அளிக்கிறார். ’’
(ஹசன் அலி முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம்)
இங்கு நமக்கு எழும் வினாக்கள்
1) ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் இன்னொரு நாட்டு அதிபருடன் சரளமாகப் பேச முடிகிறது?
2) அசன் அலி பேசுவது அவரது கட்சித் தலைவி சோனியாவுக்குத் தெரியுமா? இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? நமது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?
3) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும் என்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடிவு செய்துள்ளதா? அவ்வாறு தலையிட முடிவெடுத்து அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியை நியமனம் செய்துள்ளதா?
4) அவ்வாறு இல்லாமல் யாருடைய அனுமதியும் பெறாமல் யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி பேசியிருந்தால் அதற்கு என்ன தண்டனை?
5) சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இலங்கை அதிபருடன் அசன் அலி பேசுவதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். அதற்கு என்ன தண்டனை?
6) 3. 11. 2008 அன்று 12 மணிக்கு ராஜபக்ஷேவுடன் பேசிய உடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?
(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரணில் எழுதிய வாழ்த்துக் கடிதம்)
7) கடிதத்தில் இந்திய தூதுக்குழு இலங்கை சென்றால் அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடிகிறது? அசன் அலிக்கு அங்கு அதிகார மட்டத்தின் அனைத்து நபர்களுடனும் நட்பு உண்டா?
8) அசன் அலி காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தனது தொலைபேசியில் இருந்து அனைத்து எம். எல். ஏ. க்களுக்கும் பேசுகிறார்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவரைத் தாண்டி ராஜபக்ஷேவின் நண்பருக்கு இதில் என்ன அக்கறை?
9) ராஜபக்ஷேஉடன் பேசிய பின்பு முதல்வருக்கு அன்றே கடிதம் எழுதும் அசன் அலி அதில் இலங்கை பிரச்சனை தீர அனைத்துக் கட்சி தூதுக் குழுவை அமைக்க வலியுறுத்துகிறார். இது அவர் விருப்பமா? இல்லை தொலைபேசியில் பேசிய ராஜபக்ஷே விருப்பமா?
10) ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் நீடிக்கும் இலங்கை பிரச்னையில் இங்கிருந்து செல்லும் தூதுக்குழு பேசி தீர்க்கும் என்று முதல்வருக்கு உத்திரவாதம் அளிக்கிறாரே? இது உண்மையான விருப்பமா? அல்லது பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் இழுத்தடித்துக் கொண்டு மறுபக்கம் தமிழனைக் குண்டு வீசிக் கொலை செய்யும் ராஜபக்«க்ஷவின் விருப்பமா?
11) அசன் அலி மட்டும் ராஜபக்ஷே உடன் நட்பு வைத்துள்ளாரா? பிற காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் தொடர்பு உள்ளதா?
12) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ வைகோ, சீமான், அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழனைக் கொலை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்ஷே உடன் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் யாருக்கும் தெரியாமல் ‘கள்ள உறவு’ வைத்துள்ளனரே? அதற்கு என்ன தண்டனை?
(ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது எழுதிய கடிதம்)
13) அசன் அலி இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் அம்சா உடன் எப்பொழுது பேசினாலும் சிங்களத்தில் மட்டும் பேசுகிறாரே. அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் தாய்மொழி தமிழாக இருந்தும் வேற்று மொழியில் பேச என்ன காரணம்?
இதுபற்றி யாரும் அசன் அலியிடம் வினா எழுப்பினால் எந்த மொழியில் பேசினால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்கிறார். நாம் கேட்பது இதுதான். எந்த மொழியில் பேசினால் என்ன என்று கூறுபவர் தமிழ்மொழியில் ஏன் பேச மறுக்கிறார் என்பதுதான். பேசும் ‘ரகசியம்’ அருகிலிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலா?
14) இலங்கை துணைத் தூதர் அம்சா இங்கு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் உல்லாச விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தும் பல்சுவை விருந்துகளில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்? அதில் எந்தெந்த காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் பங்கேற்கின்றனர். அதில் என்னென்ன ‘பரிமாறப்’படுகின்றன? இது போன்ற பல வினாக்கள் நம்முன் எழுகின்றன. ஆனால் யாரிடமும் பதில்தான் இல்லை. வாசகர்களாகிய தாங்கள் பதிலை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.
ஈழத்தமிழர் பிரச்னையில் இன உணர்வாய் இங்கு எழுச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அசன் அலி, வேலூர் ஞானசேகரன் மற்றும் சில காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ராஜீவ்காந்தி கொலையைச் சாக்காக வைத்துக் கொண்டு ‘அதீத’ ஆர்வம் காட்டுகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குறுக்குச் சால் ஓட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் ராஜீவ்காந்தி மீதான பற்று காரணமல்ல என்று அசன் அலி மகிந்தா ராஜபக்ஷே தொடர்பைப் பார்த்தாலே புரிகிறது. தமிழர்கள் அங்கு தனது இனத்தைப் பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பெரும்பாலாக நினைப்பது இங்குள்ள தமிழனின் தார்மீக ஆதரவைத்தான்.
ஆனால் இங்கோ சில சில குரல்களைத் தவிர்த்து கனத்த மௌனம் நிலவுகிறது. குரல் கொடுக்கும் கொஞ்சப் பேரும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். தமிழக காங்கிரசாரோ ராஜிவ்காந்தி கொலையை முகமூடியாக அணிந்து கொண்டு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்ஷேஉடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். குழி பறிக்கின்றனர். ஒரு காலத்தில் பெரியார் போன்ற தலைவர்கள், இருந்த தமிழக காங்கிரஸ் இன்று சிங்கள அதிபர் ராஜபக்«க்ஷவின் ஆலோசனை கேட்டுச் செயல்படும் நிலைக்கு மாறிவிட்டது என்பது எவ்வளவு சீரழிந்த நிலைக்கு தமிழக காங்கிரஸ் சென்றுவிட்டது என்பதை அறியலாம்.
இறுதியாக ஒன்று மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக காங்கிரஸ் அறிவித்ததற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அசன் அலி இவ்வாறு வருத்தப்பட்டார். எங்களை எல்லாரும் அம்மா (ஜெயலலிதா) காங்கிரஸ் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை என்று வருத்தப்பட்டார். அது தவறு. அவர்களை சிங்கள காங்கிரஸ் என்று அழைப்பதே ஏகப் பொருத்தம். அதைத்தான் அசன் அலி உள்ளிட்ட அவரது ஆதரவு எம். எல். ஏ. க்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர்.