ஓர் இயக்கம் ஒரு நாட்டிற்கு என்ன செய்தது என்பதுதான் முதன்மையானது. அதனைப் புறந்தள்ளிவிட்டு, அந்த இயக்கத்தின் பெயரில் உள்ள ஒரு சொல்லை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, அந்த இயக்கத்தையே கொச்சைப்படுத்தும் நோக்கும், போக்கும் இன்று மிகுதியாகிக் கொண்டுள்ளது.

திராவிடம் தமிழ்ச் சொல் இல்லையாம். எனவே, அந்தத் திராவிடத்தினால்தான் இன்று நாட்டில் தமிழ் உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டதாம். இப்படி நா கூசாமல் சொல்கிறவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். அதே போல ஆரியர்- திராவிடர் என்பதே ஒரு வரலாற்றுப் பொய் என்றும் சொல்லத் தொடங்கியுள்ளனர். திராவிட இயக்கத்தால் பயன் பெற்ற 'நன்றியுடைய' சிலர், இன்னும் மேலே போய், திராவிட இயக்கக் கொள்கைகளே தோல்வியடைந்து விட்டன என்கின்றனர்.

justice party leadersஇப்படிப்பட்ட அவதூறுகளுக்கெல்லாம் விடை சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்று நம்மவர்கள் சிலர் கருதுகின்றனர். அவர்களுக்கு விடை சொல்ல வேண்டியதில்லை என்பது சரிதான். ஆனால் பொதுவான மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதன்றோ!

திராவிட இயக்கம் இந்நாட்டிற்கு என்னென்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைப் பட்டியலிடுவது நமக்கு எளிதானது. ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒரு சொல்லை மட்டுமே மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் பிடித்துக் கொண்டிருப்பதால், நாமும், சொற்களின் அடிப்படையிலேயே நம் விடையை முன் வைக்கலாம்.

ஒரு மொழியில் சொற்கள் புதிதாகத் தோன்றுவதும், பழைய சொற்கள் திரிவதும், மறைவதும், பழைய சொற்களுக்கான பொருள் மாறுவதும் எல்லாம் உலக இயற்கை. அப்படிச் சிலவற்றை முதலில் பார்ப்போம். எத்தனையோ சங்க இலக்கியச் சொற்கள் இன்று வழக்கில் இல்லை. ‘படிறு’ என்றால் கொடுமை என்று பொருள். "நுந்தை கடியுடை மார்பில் சிறுகண்ணும் உட்காள்" என்னும் சங்க இலக்கியத் தொடரில் வரும் ‘உட்காள்’ என்னும் சொல்லுக்கு ‘அஞ்சாத’ என்னும் பொருளை நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளோம்? எனவே அவையெல்லாம் நம் சொற்கள் இல்லை என்று ஆகிவிடாது.

அதனைப் போலவே பல சொற்கள் பிற்காலத்தில் வழக்கிற்கு வந்தன. சங்க இலக்கியத்தில் ‘திராவிடம்’ என்ற சொல் இல்லை என்று சொல்லும் ‘பெரும்புலவர்கள்’ அவ்விலக்கியங்களில், ‘அம்மா, அப்பா’ என்ற சொற்களே இல்லை என்பதை அறிவார்களா என்று தெரியாது. ‘ஆய், எந்தை’ போன்ற சொற்கள்தான் பயன்பாட்டில் அன்று இருந்தன. ஆதலால் அம்மா, அப்பா எல்லாம் தமிழ்ச் சொல் இல்லை என்று சொல்லிவிடலாமா?

அவ்வளவு ஏன், தமிழ் என்ற சொல்தான், தொல்காப்பியம் தொடங்கி எல்லா இலக்கியங்களிலும் காணப்படுகின்றதே அல்லாமல், ‘தமிழன்’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லையே! "ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்" என்று அப்பரும், "செந்தமிழோர் பரவியேத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி" என்று சம்பந்தரும், "இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது" என்று பூதத்தாழ்வாரும், "பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்" என்று நம்மாழ்வாரும் பாடிய பிறகுதான் தமிழன் என்னும் சொல் பிறந்தது என்று சொல்ல முடியுமா? மற்றவர்களெல்லாம் 'தமிழனை' மறைத்துவிட்டனர் என்பார்களோ!

"தோழமை என்றவன் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ' என்று பாடினான் கம்பன். ஆதலால் கார்ல் மாக்ஸ்க்கும் முந்திய முதல் கம்யூனிஸ்ட் கம்பன்தான் என்று இந்தச் சொல் ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தாலும் வந்து விடுவார்கள்.

திராவிடம் பற்றிய சிலரின் சொல் ஆராய்ச்சி இன்று இப்படித்தான் உள்ளது. தமிழ் என்னும் சொல்லே, தமிழம், திரமிளம், திராவிடம் என்று மருவிற்று என மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் என்ன? அந்தச் சொல்லா முதன்மையானது? அந்தச் சொல்லைக் கொண்டு இயங்கிய இயக்கம் என்ன செய்தது என்பதுதானே பேசப்பட வேண்டியது!

திராவிட இயக்கம், இன, மொழி உணர்வு மேம்படப் பாடுபட்டது. அதற்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தது. சமூக நீதிப் போர்க்களங்களைக் கண்டது. பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியது. பெண் விடுதலையைப் பெருமளவிற்கு முன்னெடுத்துச் சென்றது. இவைகளைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்களாம். திராவிடம் என்னும் சொல் பற்றி மட்டுமே பேசுவார்களாம். என்ன நியாயம் இது?

சொற்களின் பொருள் கூட, காலப்போக்கில் மாறிவிடுமே! பழம் இலக்கியங்களில் மணம் என்னும் பொருளைத் தந்த நாற்றம் என்னும் சொல் இன்று வேறு பொருளில் ஒலிக்கிறதே. சூழ்ச்சி என்பது அன்றைய நாளில் கலந்துரையாடல் என்னும் நற்பொருளைத் தந்தது. இன்று 'சதி' என்னும் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

‘செம்மல்’ என்பது இன்று உயர்ந்த பொருளில் ஆளப்படும் சொல். ஆனால் வள்ளுவர், ஒரு குறளை, " உயிர்ப்ப துளரல்லர் மன்ற செயிர்ப்பவர்/ செம்மல் சிதைக்கலா தார்" என்று அமைத்துள்ளார். இங்கே செயிர்ப்பவர் என்னும் சொல் பகைவரையும், செம்மல் என்னும் சொல் ஆணவத்தையும் குறிக்கின்றது. ‘திராவிடம்’ சொல் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆரிய- திராவிடப் போராட்டம் என்பதே, 20 ஆம் நூற்றாண்டில் கால்டுவெல் போன்ற ஐரோப்பியர்களாலும், பெரியார் வழிவந்த திராவிட இயக்கத்தினராலும் கட்டிவிடப்பட்ட கதை என்று சிலர் இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனர். இவர்கள் அயோத்திதாசப் பண்டிதர், நேரு, அம்பேத்கர் ஆகியோரின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் போலும். போகட்டும், தமிழின், சங்க, பக்தி இலக்கியங்களையாவது படித்திருப்பார்கள் அல்லவா! 35 ஆண்டுகளுக்கு முன், பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்த பேராசிரியர் ப.கிருஷ்ணன், தன் ஆய்வேட்டில், "ஆரியர், தமிழர் என்ற பிரிவுணர்ச்சி, 20ஆம் நூற்றாண்டில் தோன்றியதன்று. அது சங்க காலத்திலிருந்தே வருகிறது. சமய காலத்தில் இவ்வுணர்ச்சி தெளிவாகத் தெரிகிறது" என்று எழுதுகின்றார். அந்த நூலுக்கு, திராவிட இயக்கத்தைத் தமிழ் நாட்டில் முதலில் எதிர்த்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி அணிந்துரை வழங்கியுள்ளார்.

திராவிடம் என்பது வெறுமனே ஒரு சொல் அன்று. ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் தன்னுள் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கும் பேரகராதி. எல்லாச் சொற்களுக்கும் அகராதியில் பொருள் தேட முடியாது. வரலாற்றில், நடைமுறையில் அவற்றுக்கான பொருளைத் தேடுவோரே உண்மை அறிஞர்கள்!