ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளன. இந்த நிமிடம் வரை தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது.

அந்தத் தொகுதி மக்கள், அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் வரிசையில் நின்று பணம் வாங்கும் காட்சியை ஊடகங்கள் ஒளி பரப்பின. இன்று வரையில் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர் கூட இதனைக் காரணம் காட்டி, இடைத் தேர்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று தொலைக்காட்சியில் கூறுகின்றனர்.

இது என்ன நியாயம்? தவறு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டுமே அல்லாமல், தேர்தலை ஏன் நிறுத்த வேண்டும்? சென்ற முறை பணம் கொடுத்தார்கள் என்று கூறித்தான் தேர்தலை நிறுத்தினார்கள்.

அவர்கள் மீது இன்று வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. தவறு செய்தவர்களைத் தண்டிக்க வழியின்றி தேர்தலை மட்டுமே நிறுத்துவது என்பது இயலாமையா, சூழ்ச்சியா?

subhavee rk nagar 600ஓர் இடைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத நிலைக்குத் தேர்தல் ஆணையம் வந்துவிடுமானால், பிறகு பொதுத் தேர்தலை அது எப்படி நடத்தும்?

திமுகவின் வெற்றி தெளிவாகத் தெரிகிறது. ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தளவு, இரண்டாம் இடம் யாருக்கு என்பதற்கான போட்டிதான் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது, அ.தி.மு.க. மூன்றாம் இடத்துக்குப் போய்விடக் கூடாது என்று கருதுகிறவர்கள் தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வினர் இம்முறை அதில் வெற்றி பெற முடியாது. தேர்தலில் அவர்கள் தமிழ் நாட்டில் எக்காலத்திலும் வெற்றிபெற முடியாது.