1969-ஆம் ஆண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மறைந்த நேரம். தமிழர்கள் நெஞ்சைப் பிளக்கும் சோகத்தில் மூழ்கியிருந்தனர். தமிழகமே இருண்டிருந்தது. இரண்டாண்டே அரசாண்ட அண்ணா தமிழர் இதயங்களில் இறவாப் புகழ் பெற்றிருந்தார்.

அந்த வேளையில் கொடிய நஞ்சினைக் கக்கும் நாகப்பாம்பாய் ஒருவர் நெய்வேலியில் மேடை ஒன்றில் இப்படிப் பேசினார்; “அண்ணா அவர்கள் கடவுள் பற்று இல்லாத நாத்திகராய் இருந்தார். அதனாலே எவ்வளவோ லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்தும் டாக்டர்களால் பிழைக்க வைக்க முடியவில்லை; அதனால் இறந்தார்” - இப்படிப் பேசியவர் அன்றைய ஆன்மிகச் சொற்பொழிவாளர் என்று அறியப்பட்ட கிருபானந்த வாரியார். இதோடு நில்லாமல் தந்தை பெரியார் குறித்தும், அமைச்சர் நெடுஞ்செழியன் குறித்தும் அவதூறாகவும் பேசினார்.

 ஏற்கெனவே கொதிநிலையில் இருந்த தமிழகம், வாரியாரின் பேச்சால் எரிதழலானது. அடுத்த நாளே நெய்வேலி மக்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்தனர். அதன் பிறகு, அந்நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கடிதமும் (பார்க்க: படம்) கொடுத்தார் வாரியார். இச்செய்தியினை விடுதலையில் வெளியிட்டதோடு, வாரியாரைக் கண்டித்துத் தலையங்கம் ஒன்றையும் எழுதினார் பெரியார். தமிழர் இனத்தைச் சேர்ந்த அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களே தமிழர்களைக் காட்டிக் கொடுக்கின்றனர் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டி, பார்ப்பனியத்தை ஒழிக்க, கலைஞரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

krubanandha vaari apology letterஇதனை எதிர்க்கட்சிகள் பெரிய பிரச்சினை ஆக்கிடத் திட்டமிட்டன. இந்நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விநாயகம் கேள்வி கேட்டார். அதற்கு அப்போதைய முதலமைச்சரான கலைஞர் அளித்த பதில் முக்கியமானது.

“வாரியார் தமது புராண காலட்சேபங்களில் கேலி கிண்டல்கள் கலந்து பேசுவது வழக்கம். “நான் தவறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியிருப்பதிலிருந்து அவர் அவ்வாறு பேசினார் என்று தெரிகிறது. நெய்வேலியில் மட்டுமல்ல தஞ்சை ஆலயம் ஒன்றிலும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். “அமெரிக்காவுக்குப் போனாலும் மில்லரே வந்தாலும் ஆண்டவனை நம்பாதவர்களுக்கு இப்படிதான் முடிவு ஏற்படும்” என்று பேசியிருக்கிறார்” என்று வாரியாரின் செயலைத் தவறானது என்று உறுதிப்படுத்துகிறார் கலைஞர்.

 என்றாலும் வாரியார் அவ்வாறு பேசுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று சொல்கிறார். அது மட்டுமல்ல, எது எப்படியாகிலும் அதற்காக வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதை அரசு ஆதரிக்காது, நடவடிக்கை எடுக்கும் என்று கண்டிப்புடன் சொல்கிறார்.

 எம். ஜி. ஆர். மறைந்தபோது, கலைஞரின் சிலையை உடைத்த சிறுமதியினரும், ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் தீர்ப்பு வந்தபோது பேருந்தை எரித்த பேதையினரும் இங்கு நினைவுக்கு வருகிறார்கள். உயிருக்கு உயிரான தனது தலைவர் இறந்தபோதும், அவரை அவதூறு செய்தவரைப் பெருந்தன்மையோடு அணுகும் கலைஞரின் செயல் போற்றத்தக்கது. மேலும் வன்முறைக்கு இடம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தி, திராவிட இயக்கம் எப்போதும் ஓர் அறிவியக்கமாகவே இருந்தது, வன்முறையை ஒருபோதும் அது நாடியதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும் கலைஞரின் செயல் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம்.

வாழ்க கலைஞர்!

வளர்க அவரது புகழ்!

- வெற்றிச்செல்வன்