தமிழக தேர்தல் கமிஷனின் அதிரடி கட்டுப் பாடுகளால் அசந்து போய் நிற்கின்றன அரசியல் கட்சிகள். அதிலும் குறிப்பாக திமுக, தேர்தல் கமிஷனால் எந்த வகையில் பாதிக்கப்பட்டதோ தெரியவில்லை. அல்லது திருமங்கலம் பாணியில் "களப்பணி'யாற்ற விடாத கோபமோ என்னவோ தொடர்ந்து திமுக தலைவரும் அவரது கட்சியினரும் தேர்தல் கமிஷனை எதிர்கட்சி ரேஞ்சுக்கு தாக்கி பேசி வந்தனர்.

"தமிழகத்தில் நடப்பது யார் ஆட்சி என சந்தேகமாக உள்ளது...'' எனவும், "அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடக்கிறது...'' என்றும் குமுறிய முதல்வர், ஒரு பேட்டியில் தேர்தல் கமிஷனை அரசியல் கட்சியாகவே ஆக்கி விட்டார்.

"தேர்தல் ஆணையம் என்பது தன்னை ஒரு அரசியல் கட்சியாக ஆக்கிக் கொள்ளாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம் ஆகும். நீதிமன்றத்தைப்போல அவர்கள் அந்த ஆணையத்தை நடத்த வேண்டும்.

ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுவதைக் காணும்போது, தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளுகிற நிலையை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது என்று கூறியுள்ளார். இதன் மூலம் தேர்தல் கமிஷன் அரசியல் கட்சி என்றும், அது நீதிமன்றம்போல் தடுமாறுகிறது என்றும் கூறியுள்ள கருணாநிதி, சந்தடி சாக்கில் நீதிமன்றங்களையும் சாடியுள்ளதை கவனிக்க வேண்டும்.

அடுத்து, தலைவரே தேர்தல் கமிஷனை அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில் சொல்லியதால், அவரது கட்சியை சேர்ந்த அமைச்சரோ தேர்தல் கமிஷனை கட்சியாக்கி அதிமுக கூட்டணிக் கட்சியாகவும் ஆக்கி விட்டார்.

"செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி ஒரு நிகழ்ச்சியில், அ.தி. மு.க., கூட்டணியில் அதன் தலைவர்கள் யாரும் ஒன்றாக சேர்ந்து பிரசாரம் செய்வதை பார்க்க முடியாது. அந்தக் கூட்டணியுடன், ஒரு புது கட்சி கூட்டு சேர்ந்துள்ளது. அதுதான் தேர்தல் கமிஷன் என்ற கட்சி என்று பேசியுள்ளார்.

தேர்தல் கமிஷன் நீதியோடு நடப்பது "நெஞ்சுக்கு நீதி'க்கு நெருடலாக தோன்றுவது ஏன் என்பது தான் மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

Pin It