பாலக்காட்டில் 144-க்கு யார் பொறுப்பாளி?

தீண்டாமையென்பது நமது நாட்டில் இந்து மதத்தில் மாத்திரம் மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றும், மனிதனுக்கு மனிதன் பார்த்தால், கிட்டவந்தால், பேசினால், தெருவில் நடந்தால், தொட்டால், கோவிலுக்குள் நுழைந்தால், சாமியைப் பார்த்தால், மத தத்துவமென்னும் வேதத்தைப் படித்தால் பாவம் என்னும் முறைகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் பலனாய் 33 கோடி ஜனசமூகத்தில் 60, 70 லக்ஷம் ஜனங்கள் உயர்ந்தவர்களென்றும், பிராமணர்கள் என்றும் தங்களை சொல்லிக் கொண்டு மற்றவர்களை சூத்திரர்களென்றும் பஞ்சமர்களென்றும் மிலேச்சர்களென்றும் அழைப்பதோடு மிருகங்களுக்கும். பட்சிகளுக்கும் பூச்சிபுழுக்களுக்கும் உள்ள சுதந்திரங்கூட கொடுப்பதற் கில்லாமல் கொடுமைப்படுத்தி வைத்திருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

ஒற்றுமையினாலும் அரசாங்கத்தாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்து கொள்ளுவதினாலும் கிருஸ்துவர்களும் மகமதியர்களும் பிராமணர்களாலும் அவர்களது தர்மமான சாஸ்திரங்களாலும் மிலேச்சர்களென்று அழைக்கப் பட்டாலும் தெருவில் நடத்தல் முதலிய சில உரிமைகளை பெற்றிருக்கிறார்கள். இதைப் பொருத்தவரையிலும் கிருஸ்தவர்களும் மகம்மதியர்களும் நமது அரசாங்கத்தாருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டவர்களென்பதை நாம் மறுக்கமாட்டோம்.

அரசாங்கத்தாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்காததாலும் அரசாங்க மதமாகிய கிருஸ்துவமதத்தைத் தழுவாத “பாவத்தினாலும்” 60, 70 லக்ஷம் பிராமணர்களால் 7 கோடி இந்திய சகோதரர்கள் பஞ்சமர்களென்றும் சண்டாளர்களென்றும் கருதி தீண்டல், தெருவில் நடத்தல் முதலிய மேற்கண்ட உரிமைகள் அற்று உழலுவதை பார்க்கிறோம். இதல்லாமல் சுமார் 16 கோடி இந்தியர்  60, 70 லக்ஷம் பிராமணர்களால் (யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன்) தன் தேவடியாள் மகன் குலவழியாக பிராமணருக்கு தொண்டு செய்பவன், அடிமை வேலைக்கு விலைக்கு வாங்கினவன் என்னும் பொருள் அடங்கிய (மனு 8-ம் அத். 415 -வது சுலோகம்) சூத்திரர் என்று கருதப்படுகிறார்கள். (பிராமணன் சம்பளம் கொடுத்தேனும், கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம், ஏனெனில் சூத்திரன் பிராமணர்களுக்கு வேலை செய்வதற்காகவே கடவுளால் சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறான். மனு சாஸ்திரம் 8-வது அத். 413 -வது சுலோகம்)

அதோடு மாத்திரமில்லாமலும் இவ்வுயர்வு தாழ்வு என்னும் தொத்து வியாதி பிராமணர்களிடம் இருந்து உண்டாயிருந்தாலும் அவர் ஒழிந்த மற்ற வகுப்புகளுக்குள்ளும் அது பரவி அனேகமாய் ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்பை தாழ்ந்தவர்கள் என்றும் தீண்டக்கூடாதவர்கள் என்றும் கருதிக் கொண்டு வருவதையும் பார்க்கிறோம். உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதும் புல்பூண்டு, பூச்சி, புழு, மரம், கல், பக்ஷி, மிருகம் யாவும் கடவுள் மயமென்றும் ஒவ்வொன்றும் பூசிக்கத் தக்கதென்னும் கொள்கைளைக் கொண்டதுமான இந்து மதம் என்று சொல்லப்படுவது சிலரின் நன்மைக்காக அவர்களின் தந்திரத்தினாலும் மோசத்தினாலும் பாழாக்கப்பட்டு ஒரு பெரிய சமூகமே சின்னா பின்னப்பட்டு அன்னியர்வசமாகி ஒற்றுமையிழந்து துவேஷமேற்கொண்டு மீளாநரகம் என்னும் அடிமைக் குழியில் ஆழ்ந்து கொண்டுபோகிறது.

மிகவும் கொடுமையான இவ்வித பிராமண தர்மம், இந்தியாவுக்குள் நுழையாதிருந்திருக்குமானால் இன்றைய தினம் இந்தியா இக்கெதியில் இருந்திருக்கவே மாட்டாது. அப்படி இருந்தும் இப்பிராமண தர்மத்தால் தாங்கள் உயர்ந்த ஜாதியார் என்கிற காரணத்தால் உயர்வாய் அதாவது மற்றவர்களைப்போல் கஷ்டப்படாமல் வாழ சந்தர்ப்பம் கிடைத்து விட்டதாலும் அன்னிய அரசாங்கத்திற்கு அனுகூலிகளாகவும் ஒற்றர்களாகவும் இருக்கிற காரணத்தால், அதில் தங்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டுப் போய்விட்டதாலும் தீண்டாமை என்னும் கொடுமையால் தேசத்தின் நிலையையும் அதில் உள்ள மக்கள் படும் துன்பத்தையும் கொஞ்சமும் கவனியாமல் மேலும் மேலும் அதை நிலை நிறுத்தவே பாடுபடுகிறார்கள். இவ்வித பிராமண தர்மம் என்பது நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாமல் அல்லது அவர்கள் மற்றவர்களிலும், பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்னும் கொள்கையாவது நம்நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாமல் (என்றைக்காவது ஒரு நாளைக்கு இந்தியாவில் பிராமண கொள்கை இல்லாமல் போகத்தான் போகிறது. ஆனால் அதற்குள் இந்து மதமே போய் இந்தியா முழுவதும் மகமதியர்களும், கிருஸ்தவர்களும் இந்துக்கள் அல்லாதவர்களுமே ஆய்விடப்போகிறார்கள். அப்பொழுது இக்கொள்கை போனாலென்ன இருந்தாலென்ன?)

 இந்தியர்கள் விடுதலையடைவதோ சுயராஜ்யம் பெறுவதோ அன்னிய அரசாங்கத்தின் கொடுமைகளிலிருந்து மீள்வதோ சூரியன் மேற்கிலுதிப்பது போலத்தான்! ஏனெனில் இவ்வித பிராமண தர்மம் நாடெங்கும் பரவுவதால் தாய்க்கு பிள்ளை தொட்டால் பாவமாகிவிடுகிறது!. இப்பிராமணர்களைப் பார்த்தே மக்கள் எல்லோரும் பிராமணர்களாக பார்க்கிறார்கள். பிராமணர்கள் என்றால் மற்றவனைத் தாழ்ந்தவன் என்றும் தொடக்கூடாதவன் முதலியவன் என்று எண்ணுவதுதான் என நினைக்கிறார்கள். உதாரணமாக ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவரும் ஒரு பிராமண ஸ்திரீ குடத்தில் கொஞ்சம் தண்ணீரும் கையில் கொஞ்சம் புளியும் கொண்டு வருவதோடு, முகத்தையும் கோணிக்கொண்டு வருகிறாள். குழாயண்டை வரும்போதே நிலத்திலெல்லாம் தண்ணீர் தெளித்துக்கொண்டு குழாயின் மேலும் தண்ணீரைக் கொட்டி புளியால் குழாயை தேய்த்து கழுவியபிறகு தண்ணீர் பிடிக்கிறாள். இதை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிராமணரல்லாத இந்து ஸ்திரீ தானும் அரைக்குடம் தண்ணீரும் கையில் ஒரு புளி உருண்டையும் கொண்டு முகத்தை இழுத்துக்கொண்டு ³ பிராமணி ஸ்திரீ செய்ததுபோலவே செய்துவிட்டு தண்ணீர் பிடித்து கொண்டு போகிறாள். இதை பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு மகமதிய ஸ்திரீயும் கிருஸ்தவ ஸ்திரீயும் அது போலவே வரும்பொழுதே முக்கால் குடம் தண்ணீரையும் முன்னையதிலும் பெரிய புளி உருண்டையும் கொண்டு முகம் கோணிக்கொண்டு வருவதோடல்லாமல் வாயில் முணுமுணுத்துக் கொண்டே வந்து தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து குழாயையும் தேயத்தேய கழுவித் தண்ணீர் பிடித்து போகிறாள்.

பஞ்சம ஸ்திரீ அந்த வீதியில் இல்லாததால் அவர்கள் இதைப் பழக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இப்படி ஒருவரைப்பார்த்து ஒருவர் பழகியே தீண்டாமையென்னும் தொத்து நோய் தேசம் முழுவதும் பரவி வருகிறது. தீண்டாமை ஒழியவேண்டும் என்று மகாத்மா காந்தியும் மற்றும் பலஜீவகாருண்ணியமுள்ளவர்களும் ஒரு பக்கம் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாலக்காடு முனிசிபல் பொது வீதியில் ஈழுவ சகோதரர்கள் நடக்கக்கூடாது என்று 144 உத்திரவுபோட்டதும் (ஈழுவர்கள் என்பது சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான். டீ.கிருஷ்ணன் அவர்களுடைய ஜாதியார்தான்) எவ்வளவு அக்கிரமமாகும். இதை நாம் யார் பேரில் சொல்லுவது. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் எந்த விதத்தில் காரணமாவார்கள். பிராமண அரசாங்கத்தார்தானே இவ்வக்கிரமங்களுக்கும், கொடுமைக்கும் பாத்திரமாகவேண்டும். இந்த பிராமண அரசாங்கம் தொலைய வேண்டும், இந்த பிராமணதர்மம் தொலைய வேண்டும் என்று பாடுபடுவதை விட மக்களுக்கு வேறு என்ன தேச சேவையிருக்கிறது? இதை விட வேறு ஜீவ காருண்யம் என்ன இருக்கிறது? இதைவிட வேறு தர்மம் என்ன இருக்கிறது? இதை அறிந்துதான் “தேசபந்து தாசர்” என்னுடைய சுயராஜ்யம் பிராமண ஸ்திரீகளை பிடித்து தீண்டாதாருக்கு கொடுப்பதுதான் என்றார் போலும்!

இதை அறிந்துதான் சர்.பி.சி.ரெ அவர்கள் பிராமணர்களை எல்லாம் சாக்கில் போட்டுக் கட்டி வங்காளக்குடாக் கடலில் போடவேண்டும் என்று சொன்னார்கள் போலும்! சுவாமி விவேகாநந்தர் பிராமணமதம் இருக்கும்வரை இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீளாது என்று சொன்னார்போலும்! மகாத்மா காந்தி - இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பிராமணர்கள் செய்த கெடுதி குறைந்ததல்லவென்று சொன்னார் போலும்! சுவாமி சிரத்தானந்தர் - இந்து மதத்திற்கு நாசத்தை விளைவித்தவர்கள் பிராமணர்தான் என்று சொன்னார் போலும்! இனி யார் இவர்களுக்கு நற்சாக்ஷி பத்திரம் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை! இவர்கள்தான் சட்டசபைக்கும், மந்திரி வேலைக்கும், தாலூக்கா போர்டு, முனிசிபாலிட்டிக்கும், சர்க்கார் உத்தியோகங்களுக்கும் போய் நமக்கு நன்மை செய்பவர்களாம்.

(குடி அரசு - கட்டுரை - 22.11.1925)

Pin It