புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. எல்லோரும் சொல்லிவிட்டார்கள், இவரைப் பற்றி.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவைப் போல, பன்முக ஆற்றலைக் கொண்டவர் இவர்.

எழுத்தாளர், கதையாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், இதழாளர், பேச்சாளர், திரைப்பட வசனகர்த்தா, எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.

“என் உயிரினும் மேலான

அன்பு

உடன்பிறப்பே!”

என்ற சொல்லினால் தமிழர்களைக் கட்டிப்போட்டவர்.

தொன்மை மிக்க தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை கூடப் புரிந்துகொள்ளலாம். ஆனால் எழுத்து & சொல் அதிகாரங்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதன்று.

அத்தகைய எழுத்து சொல் அதிகாரங்களைப் பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமைப் படுத்திக் கொடுத்த இவர், புலவரோ, வித்துவானோ, தமிழை முதன்மைப் பாடமாகக் கல்லூரியில் படித்தவரோ இல்லை.

வள்ளுவருக்குக் கோட்டம் அமைத்தார். பார்க்கிறோம், அதை நாம். அதுமட்டும் போதாது என்று வள்ளுவத்திற்கு உரை எழுதி நம்மைப் படிக்கவும் வைத்திருக்கிறார்.

“தமிழ் மீதுள்ள அன்பால்

பற்றால் பாசத்தால்

தமிழ் காத்து

தமிழரின் நலம் காக்கும்

தொண்டர்க்குத் தொண்டராகிய நான்

மணம் கமழும் தமிழே

மனம் கவரும் தாயே

இன்ப மொழியே அன்பு விழியே!

உயிரான தமிழே

உலகில் உயர்வான மொழியே

உனைப் போற்றிப் புகழ்வதன்றி

வேறு பணி எனக்கிலையே!”

என உற்சாகமாகத் தமிழைப் பாடியவர்.

அவர்தான் தலைவர் கலைஞர்.

தமிழக மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், இந்தியத் தலைவர்கள் ஓடோடி வந்து கலைஞர் மறைவின் துயரத்தில் பங்குகொண்டிருந்த அந்த நேரத்தில் கடற்கரையில் அவரைத் ‘துயிலச்’ செய்ய விடாமல் தடுக்க முயன்றது தமிழக அரசு.

வழக்குகளைக் காரணம் காட்டிக் கடற்கரையில் இடம் கொடுக்க முடியாது என்றார் எடப்பாடி.

ஆனால் நீதிமன்றக் கதவுகளை நீதிக்காகத் திறந்துவிட்டது நீதிமன்றம்.

தமிழக அரசின் இந்த நாகரிகமற்ற செயலைக் கண்டிப்பதோடு, தலைவர் கலைஞரின் மறைவுக்காகக் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ சார்பாக வேதனையையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.