palaru agitation

கர்நாடக மாநிலத்தில் நந்திதுக்கம் என்ற இடத்தில் பாலாறு தொடங்கி அதே மாநிலத்தில் 96 கிலோ மீட்டர் பாய்ந்து பின்பு ஆந்திரா மாநிலம் வழியாக 33 கிலோ மீட்டர் பாய்ந்து 222 கிலோ மீட்டர் தமிழகத்தில் பாய்கிறது.

1892ம் வருட மெட்ராஸ்- மைசூர் ஒப்பந்தத்தை மீறி கடைமடையான தமிழகத்தின் சம்மதத்தை பெறாமல் கர்நாடகாவும், ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரைத் தேக்குவதால் தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது என்பது எட்டாக் கனியாகவே போய்விட்டது. இதில் என்ன கொடுமை என்றால், வெறும் 33 கிலோ மீட்டர் மட்டுமே பாயக்கூடிய கர்நாடகத்தில் கிட்டத்தட்ட 15 தடுப்பணைகளைக் கட்டித் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடுத்ததின் விளைவு தமிழகமே சுடுகாடாக மாறிவிட்டது. தன் மக்களைக் காப்பாற்ற ஆந்திர அரசு செய்யும் உத்தி என்று அவர்கள் நியாயம் கற்பித்தாலும், தனது மக்களைக் காப்பாற்றத் தமிழக அரசு அணைகள் கட்டும் ஆந்திர அரசை தடுத்திருக்க வேண்டாமா? இந்திய மாநிலங்களிலேயே செயல்படாத அரசு என்று பெயர் வாகிய ஜெயலலிதா அரசு, அதன் பாரா முகத்தால் ஆந்திராவில் ஏற்கனவே கட்டிய அணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியில் இறங்கும் போதுதான் மக்கள் வீதிக்கு வந்த போராடத் தொடங்குகிறார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என ஒரு சொலவடை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை நேரிடையாகவே வேலூர் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். பாலாற்றில் தண்ணீர் வருவது முற்றிலும் ஆந்திர அரசால் தடை பட்டுப் போன இந்த சூழலில் ஆற்றின் அடியில், ஒரத்தில் எஞ்சியிருக்கும் ஊற்றுத் தண்ணீருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசே வேலூர் மாவட்ட மக்களுக்கு பசியையும், பட்டினியையும் வறட்சியின் மூலமாக திணித்திருக்கின்றது. இந்தக் கொடுமையை யாரிடத்தில் முறையிடுவது-?

இது ஏதோ ஜெயலலிதா மீது குற்றம் சொல்லுவதற்காகக் கூறவில்லை. நான்கு நாட்களுக்கு முன் வாணியம்பாடிக் கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஏரியை ஆந்திர அரசு அதிகாரிகள் கைப்பற்றி, அதைச் சுற்றுலாத் தலமாக மாற்றிட அளவையாளர்களைக் கொண்டு அளந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், நீண்ட நாட்களாகப் பாரம்பரியமாக வழிபட்டு வந்த நமது எல்லையில் உள்ள அம்மன் கோயிலின் நிர்வாகத்தை அதிரடியாக ஆந்திர அரசு கைப்பற்றி இருக்கிறது. அதன் அறங்காவலர், பூசை செய்யும் நபர் உட்பட அனைவரையும் எச்சரித்து அனுப்பிவிட்டு, மின் இணைப்பையும் துண்டித்துவிட்டு, ஆந்திரமின் வாரியத்தின் மூலம் அவர்களாகவே மின் இணைப்பைக் கொடுத்து அதை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 19 ஆம் தேதி திராவிட முன்னற்றக் கழகம் வேலூர், காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்ட மக்களுக்காக, ஆந்திர அரைசயும், செயல்படாத அதிமுகவையும் கண்டிக்கும் வகையில் திமுகவின் பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலில் மக்கள் கூட்டத்தைத் திரட்டிப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

விவசாயத்தை முழுமையாக நம்பியிருந்த விவசாய மக்களை இன்று பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டு, விவசாயிகள் பிச்சையெடுக்கும் நிலைக்கு வர யார் காரணம்? ஜெயலலிதா என்கிற தனி நபரின் சுயலாபத்திற்காக, தன் மீது மிகப் பெரிய ஊழல் வழக்கு இருக்கிறது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தையும் பகைத்துக் கொள்ளாமல், ஆந்திர முதல்வர் தனது நண்பர் என்பதற்காக, அவரின் மனமும் நோகக்கூடாது என்பதற்காக, தமிழக மக்களைப் பழி வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

பாலாற்றில் உள்ள ஒட்டு மொத்த மணலும் சூறையாடப்படுகிறது. நீதிமன்றம் வெறும் 3 அடி மட்டுமே மணலை வாருவதற்கு அனுமதித்த வேளையில் 35 அடிக்கு மேல் மண் வாரி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாலாறு என்பது வடதமிழகத்தின் வளம், தண்ணீர் வளம் நிறைந்தது. அதை ஒட்டியுள்ள நிலங்கள் எல்லாம் ஆற்றின் ஊற்றை நம்பியே இருந்தன. பால் வார்த்த பாலாற்றின் ஒட்டு மொத்த மணலும் கொள்ளை போகிறது. அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு வருகின்றன.

இயற்கை கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க பாலாற்றை இனி எந்த மனித சக்தியாலும் உருவாக்க முடியுமா? இந்த அநியாயத்தைத் தடுக்க எவ்வளவோ போராட்டங்கள எனது தலைமையில் நடந்தன. திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் மக்களைத் திரட்டி ஆற்றிலேயே போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். அசைந்து கொடுக்கவில்லை தமிழக அரசு. பாலாற்றை பாலைவனமாக்கியதன் மூலம் குழந்தைக்குப் பால் கொடுத்த தாயின் மார்பை அறுத்தெறிவதற்குச் சமமாக இன்று அந்தபகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.

மக்களுக்கு நீதிவேண்டும், வாழ்வாதாரம் வேண்டும். அதற்காக ஆந்திர அரசை மட்டுமல்ல, தமிழக அரசசையும் எதிர்த்துப் போராட வேண்டி இருக்கிறது. ஆட்சி மாறினால் அவலம் நீங்க வழியுண்டு.