கந்தம்மாள் வழக்கமாக அதிகாலையில் விழித்து விட்டாள். அவளைப் பொறுத்தவரை அதிகாலை என்பது நாலரை மணி தான். ஆனால் இன்று சரியாகத் தூங்காததால் களைப்புடன் காணப்பட்டாள். கிடைக்குமோ கிடைக்காதோ என்ற கவலையில்தான் தூக்கம் கெட்டு விட்டது.

எழுந்ததும் வாய் கொப்பளித்தாள். பழைய சாதத்துடன் இருந்த தண்ணீரைக் குடித்தாள். பழைய துணிப்பைகள் இரண்டை எடுத்துக் கொண்டாள்.

தூங்கிக் கொண்டிருந்த கணவனைத் தட்டி எழுப்பி "சொல்லி விட்டு"ச் சென்றாள். அவரும் தூக்கக் கலக்கத்தில் "கம்ப எடுத்துக்கோ, தண்ணி குடிச்சியா?' வாஞ்சையோடு கேட்டார். கதவைச் சாத்திவிட்டுக் கிளம்பினாள். அந்தக் குடிசை வீட்டில் அதைக் கதவு என்று சொல்வதை விட தட்டி என்பதே சரி. சிறிய மரச்சட்டத்தில் தென்னை மட்டைகளைக் குறுக்காக இணைத்து பழைய சாக்கால் பின்னப்பட்டிருந்தது. அதில் கூட ஆங்காங்கே ஓட்டைகள் தெரிந்தன. அவர்களின் குடிசை வீடு போல.

கம்பை ஊன்றி அவசரமாக நடந்து சென்றாள். அதிகாலை நிலா வெளிச்சம் அவள் மனதுபோல் தெளிவான குளிர்ச்சியை உமிழ்ந்தது. மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து புறவழிச் சாலையை அடைந்தாள். உண்மையில் அது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அதன் இருபுறமும் மிகப் பெரிய குடியிருப்புகள், நவீன கட்டிடங்கள், உணவகங்கள், திரையரங்குகள், விடுதிகள் வந்துவிட்டன.

அவற்றைக் கடந்து விட்டாள். செல்ல வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டாள். கையைத் தலைக்கு மேல் குவித்து கடவுளை வணங்கிக் கொண்டாள். கண்ணை மூடி சிறிது நேரம் மீண்டும் வணங்கினாள். அங்குமிங்கும் நோட்டமிட்டுத் தேட ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்தது கொஞ்சம் கூட அங்கு இல்லை. அந்த இடமே துடைத்துவிட்டாற் போலிருந்தது. பதறிவிட்டாள். கடந்த வாரம் போல் இன்றும் ஏமாற்றம் தானா? கவலையும் களைப்பும் ஒரு சேர வாட்டி வதைத்தன. கண்ணுக் கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை.

பிறகு எப்படி இப்படி நடந்திருக்கும். அவளுக்குப் புதிராகவே இருந்தது. கடந்த வாரம் நாலைந்து மாடுகள் இவளுக்கு முன்பே எல்லாவற்றையும் முடித்து விட்டிருந்தன. அதற்காகத் தான் இன்று அரைமணி நேரம் முன்னதாக வந்துவிட்டாள். மாடுகள் வந்ததற்கான அறிகுறியும் இல்லை. ஆதங்கப்பட்டாள்.

வாழ்க்கைத் தோழனாகிய கணவனின் நினைப்பு வந்துவிட்டது. "இந்நேரம் எந்திரிச்சிரிப்பாரா? ஒரே தொரத்தல். சீக்கிரம் போயி சுக்காப்பி போட்டுக் கொடுக்கணும்" உள்ளுக்குள் உருகினாள்.

மூக்கன்தான் கந்தம்மாளின் கணவன். மூக்கு குத்தியிருப்பார். குட்டையான தோற்றம். இரண்டு வயதில் குத்திய வெள்ளை மூக்குத்தி. அவரின் நேர்மையைப் போல் தரம் குறையாமல் இன்றும் பளிச்சிடுகிறது. கறுப்பு நிறமான மூக்கனுக்கு மூக்குத்தியும் லேசான வெண்தாடியும் நல்ல அம்சமாகத்தான் இருக்கிறது.

செருப்பு தைப்பதுதான் மூக்கனின் பரம்பரைக் குலத் தொழில். பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் அனைவரும் பிரிந்து சென்று விட்டனர். அவர்கள் பிழைப்புக்கே திண்டாட்டமாக இருக்கும் நிலையில், மூக்கனும் கந்தம்மாளும் மகன்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. தொண்ணூறு வயதான பிறகும் வைராக்கியம் குறையாமல் உழைத்து வருகிறார்.

முன்பெல்லாம் மூக்கனின் வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் தோல் செருப்புகள் தான் அதிகப் பயன்பாடாக இருந்தது. அவை அறுந்துவிட்டாலோ பிய்ந்து விட்டாலோ மூக்கன் போன்றவர்களைத் தேடி வந்து 'சரி செய்து' கொள்வர்.

நாகரிகம் வளர்ந்தது. மக்கள் மாறி விட்டனர். தற்போது சிலரே விலையுயர்ந்த காலணிகள் அணிகின்றனர். பிளாஸ்டிக் கலந்த நைலான் போன்ற செருப்புகள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அறுந்துவிட்டால் அப்படியே தூக்கியெறிந்துவிட்டு புதியது வாங்கிக் கொள்கின்றனர். இதை "யூஸ் அன்டு துரோ"ன்னு மக்கள் பேசிக் கொள்வது மூக்கனுக்கும் கந்தம்மாளுக்கும் புரியாது. தேவைப்படும் வரை பயன்படுத்திவிட்டுப் பின்னர் வீசி விடுகின்றனர் மனித உறவுகளைப் போல.

இதனால் மூக்கனுக்கும் தற்காலத்தில் வருமானம் குறைந்துவிட்டது. வயதாகிவிட்டதால் எல்லா நாட்களிலும் 'வேலைக்குச்' செல்ல முடிவதில்லை. வீட்டிலிருந்து நகரத்தின் மையத்திற்குச் சென்று வரத் தேவைப்படும் பேருந்துக் கட்டணத்திற்குக் கூடக் கூலி கிடைக்காது. அடிக்கடி உடல்நலக்குறைவு வேறு. இந்த 2011ம் வருடத்தில் ஒரு நாளைக்கு 60 ரூபாய் கிடைத்துவிட்டால் மூக்கனை விட கந்தம்மாள்தான் அதிக மகிழ்ச்சியடைவாள். எப்படியோ இவர்கள் வாழ்க்கையையும் ஆண்டவன் நகர்த்தி வருகிறார்.

இவர்களது வாடிக்கையாளர்கள் பலரிடம் தற்போது பரந்த மனப்பான்மையும் மனித நேயமும் குறைந்து விட்டது. மூக்கனைப் போன்ற பரம ஏழைகளிடம் தான் இவர்கள் பேரம் பேசுவது வழக்கம். முன்னூறு ரூபாய்க்குச் செருப்பு வாங்கிவிட்டு அதைச் சரி செய்ய இருபது ரூபாய் கொடுக்க முகம் சுளிக்கும் மனிதக் கூட்டம் தான் இங்கு அதிகம்.

மூக்கன் எப்போதும் நேர்மையான கூலி தான் கேட்பார். 'வேலை'யை முடித்துவிட்டு,

"இருபது ரூபா கொடுங்க சாமி" என்று நூற்றாண்டுகளாய் பரிமாணித்து விட்ட சாதிப் பேயால் மனிதனையும் கடவுளாக நினைக்கும் மூக்கனிடம்,

"பத்து ரூபா தான் இருக்கு. சில்லறை இல்ல" என்று சர்வ சாதூர்யமாகக் கூலியைக் குறைக்கும் பல மனித மிருகங்களைக் கண்டிருக்கிறார்கள் மூக்கனும் கந்தம்மாளும்.

நவீன அங்காடிகளில் 499 ரூபாய்க்கு வாங்கினால் மீதி ஒரு ரூபாய்க்கு சாக்லேட்களைத் திணித்துவிடும் பண முதலைகளிடம் இவர்கள் பேரம் பேசுவதில்லை. உழைக்கும் வர்க்கமான மூக்கனுக்கு இது தெரியும். அவரால் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளைத் திருத்த முடியுமா என்ன?

கந்தம்மாளுக்கு இதையெல்லாம் நினைத்தால் மனசு தாங்காது. "வந்த வேலையைப் பாப்போம்" என்று அந்தப் புறவழிச் சாலையில் மீண்டும் சிறிது தூரம் நடந்தாள். தேடினாள். கிடைக்கவேயில்லை. அந்த இடம் நடமாடும் காய்கறிச் சந்தை போடப்பட்ட சாலையின் ஒருபுறம்.

மதுரை மாநகரில் நடைபாதை வியாபாரிகள் வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒவ்வோர் இடத்தில் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கூட காய்கறிகள் விற்பனை செய்வர்.

விற்பனை முடிந்த பிறகு அழுகிய ஒதுக்கிய காய்கறிகளை அப்படியே போட்டுவிட்டு செல்வர். சில நேரங்களில் மழை பெய்தாலோ, மின்வெட்டு நேரத்தில் நல்ல காய்கறிகளும் கூட அங்கு கிடப்பதுண்டு. அவற்றைப் பொறுக்கத்தான் கந்தம்மாள் கஷ்டப்பட்டு வந்திருக்கிறாள்.

மூக்கனின் வருமானம் குறைந்துவிட்ட கடந்த பதினைந்து வருடங்களாக இவளுக்கு இதே வேலைதான். ஒவ்வொரு சனிக்கிழமை அதிகாலையிலும் கந்தம்மாள் தவறாமல் வந்துவிடுவாள். பொறுக்குவாள். பல சமயங்களில் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையானது கிடைத்துவிடும்.

கிடைத்தவற்றைச் சுத்தப்படுத்தி, வகைப்படுத்தி, தேவைப்பட்டால் காயவைத்து, வத்தல் போட்டுக் கொள்வாள். அடுத்த பொறுக்கும் நாள் சனிக்கிழமை வரை சரிக்கட்டி விடுவாள். சோறு கிடைக்காத அபூர்வமான சில நாட்களில் இந்தக் காய்கறிகள் அவியலே அவர்களுக்குச் "சாப்பாடு".

காய்கறிகள் விலை சரிந்துவிடும் மாதங்களில் கந்தம்மாளுக்குச் சரியான வேட்டைதான். ஆனால் இவற்றின் விலையேற்றம் கந்தம்மாள் குடும்பத்தைப் பதம் பார்த்து விடும். பத்து ரூபாய்க்கு இரண்டு கிலோ விற்ற தக்காளி, காலம் மாறிவிட்டால் ஒரு கிலோ அறுபது ரூபாய் விற்கும். இந்நாட்களில் அழுகிய தக்காளி கூட அவளுக்கு எட்டாக் கனியாகிவிடும். அழுகிய வெங்காயத்தைக் காணாமலே கண்ணீர் வந்துவிடும்.

காய்கறி பொறுக்கும் வேலையில் கந்தம்மாளுக்கு மாடுகளுடன் தான் போட்டி. நகரத்து மாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டவை. சுற்றித் திரிபவை. சந்தை முடிந்த பின்னர் இரவோடு இரவாக கிடைத்த காய்கறிகளைத் தின்று விடுவதுண்டு. சில நாட்களில் அதிகாலை ஐந்து மணிக்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துவிடும்.

கடந்த வாரம் அதிகாலையில் மாடுகள் முந்திக் கொண்டன. கந்தம்மாளுக்கு மிகச் சொற்ப அளவிலே தான் கிடைத்தன. ஆனால் இன்றோ மாடுகளையும் காணோம். காய்கறிகளும் பொறுக்கப்பட்டிருக்கிறது. கந்தம்மாள் ஏமாற்றத்தில் நிலைகுலைந்தாள். வாழ்க்கை சூன்யமாகத் தோன்றியது. தலை சுற்றியது.

மீண்டும் சிறிது தூரம் நடக்க எத்தனித்தாள். தூரத்தில் ஒரு பெண் சாக்குப் பையுடன் நின்றிருந்தாள். இதுவரை மாடுகளுடன் போட்டியிட்ட கந்தம்மாளுக்குப் புதிதாய் ஒரு போட்டியாளர் முளைத்திருக்கிறார். அவளருகில் சென்றாள். கந்தம்மாளுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி. அந்தப் பெண் கந்தம்மாளின் இரண்டாவது மருமகள்தான்.

அவளும் ஆச்சரியத்தில், "அத்த, நீங்களா?" நான் இன்னைக்குத் தான் முதமுதல வந்தேன்.

"நான் பதினைஞ்சி வருசமா இதைத்தான் செய்றேன்" கந்தம்மாள் வெறுமையில் பேசினாள். உடனே மருமகள் தான் பொறுக்கிய காய்கறிச் 'செல்வத்தில்' பாதியை மாமியாருக்கு வாஞ்சையோடு கொடுத்தாள்.

"அடுத்த வாரத்திலிருந்து நீங்களும் மாமாவும் எங்க வீட்டுக்கு வந்திருங்க. நாங்க உங்களுக்குச் சோறு போடுதோம்" பாசத்துடன் வார்த்தைகளைப் பரிமாறினாள்.

இருவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது ஆனந்தக் கண்ணீரா அல்லது உழைப்பாளிகள் இரத்தமாய்ச் சிந்தும் இயலாமைக் கண்ணீரா என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

Pin It